சங்கத்தமிழ் மூன்றும் தா

சங்கத்தமிழ் மூன்றும் தா 


எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர்

இறைவனைத் தொழுவது நமது வழக்கம்.

இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே நாம் செய்யப் போகும் காரியம் வாய்க்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருக்கும்.


ஔவை மட்டும் இதற்கு விதிவிலக்காக என்ன?

நாம்,நம் தொழில் நன்றாக நடக்க வேண்டும்.

படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும்.

நோய்நொடி இல்லாத

நலமான வாழ்வைத் தர வேண்டும்

என்று இறைவனிடம் கேட்போம்.

நல்ல அறிவைக் கொடு என்று கேட்போம்.

கீர்த்தியும் புகழும் வந்து சேரட்டும் என்று கேட்போம்.


ஔவையும்

தனது நல்வழி பாடல்களை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக  இறைவனை வணங்கினார். 

வணங்குவதோடு மட்டுமல்லாமல் இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார்.

அப்படி என்ன தேவை 

ஔவைக்கு இருந்தது.?


வயிறார உண்ண நல்ல  உணவு வேண்டும்

என்று கேட்டாரா?

எழுதி முடிக்கும் வரை போதிய உடல் நலம் வேண்டும் என்று 

கேட்டாரா?

வேறென்ன கேட்டிருப்பார்?


நீங்கள் நினைப்பதுபோல் இப்படியொரு வேண்டுதலை ஔவை முன் வைக்கவில்லை.


அவர் வைத்த கோரிக்கை 

என்ன தெரியுமா?

இதோ கேளுங்கள்...


எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா

என்பது ஔவையின் கோரிக்கை.

வெறுமனே தனது கோரிக்கையை நிறைவேற்றித் தர கேட்கவில்லை.

நான் உனக்கு இது தருவேன் நீ எனக்கு என் கோரிக்கையை நிறை வேற்றித் தர

வேண்டும் என்று ஒரு 

நிபந்தனையோடு தனது கோரிக்கையை வைக்கிறார்.

இறைவனுக்குக் கொடுக்கும் அளவுக்கு ஔவையிடம் என்ன இருக்கிறது. ?

பாடலைத் தவிர வேறென்ன இருக்கப் போகிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.


பாலும் தெளி தேனும் வெல்லப்பாகும் பருப்பும் கலந்த சுவையான

படையல் வைப்பேன் .

நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும்

தா என்கிறார்.

இதோ பாடல் உங்களுக்காக...



"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா.



"உயிர்களுக்கு நல்லது செய்யும்

யானை முகத்தானாகிய 

குற்றமற்ற விநாயக பெருமானே!


பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன்,.


 நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற சங்கத் தமிழ் மூன்றையும் தருவாயாக "

என்று கேட்கிறார்.


கூழுக்காகப் பாடியவர் என்று அவரை கிண்டலாகக் பேசுவர்.

கூழுக்காகப் பாடியவராக இருந்தாலும் தன் பாடல்

 தரமானதாக இருக்க வேண்டும்.

அதில் இலக்கிய நயம் இருக்க வேண்டும்.

ஓசை நயம் இருக்க வேண்டும்.

உள்ளத்தோடு உரையாடும் உணர்வு இருக்க வேண்டும் . மக்கள் மனம் கவர்வதாக இருக்க வேண்டும் .

முத்தமிழும் விரவிக் கிடக்கும் இலக்கிய நயம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். 

அதனால்தான் எனக்கு சங்கத்தமிழ்

மூன்றும் தா என்று கேட்கிறார்.


இயற்றமிழ் 

இசைத்தமிழ்

நாடகத் தமிழ்

மூன்றும் வேண்டுமாம்.


இயற்றமிழ் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக வேண்டும்

என்ற கோரிக்கை சரிதான்.


இசைத்தமிழ்  எதற்காக?


தான் சொல்ல வரும் கருத்தை ஓசை நயத்தோடு இனிமையாகப் கூற வேண்டும் .

அப்போதுதான் படிக்கும் ஆவலைத் தூண்ட முடியும்.

அதனால் இசைத்தமிழும் வேண்டும் என்றார்.


இப்போது நாடகத் தமிழ் எதற்கு என்ற

கேள்வி எழுகிறதல்லவா?

எண்ணங்களை இனிமையாகப் சொல்லும்போது மெய்ப்பாடு 

புலப்படும்படி எழுதினால்தான்

எளிதில் புரிய வைக்க முடியும்.

நாம் சொல்ல வந்த கருத்தை எளிதில் உணர வைக்க முடியும்.

அதனால்தான்  நாடகத்தமிழும் வேண்டும் என்கிறார்.

அருமையான கோரிக்கை.


முத்தமிழும் கலந்த நடை இருப்பதால்தான்

ஔவையின் பாடல்கள் இன்றுவரை நம்

மனதைத் தைப்பனவாக

இருந்திருக்கின்றன.


நீ எனக்குச் 

சங்கத்தமிழ் மூன்றும் தா!




 


Comments

Popular Posts