இல்லாள் அகத்திருக்க இல்லாதது உண்டோ
இல்லாள் அகத்திருக்க...
வீடு வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக
இருக்கும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு
வேண்டும் என்று ஆசை.
வீடு கிடைத்துவிட்டால் வீட்டைச் சுற்றி
தென்னைமரங்கள் இருந்திடல் வேண்டும்
என்று ஆசை.
தென்னை மரங்கள் இருந்துவிட்டால் போதுமா?
அதில் குலைக்குலையாக இளநீர்
காய்த்துத் தொங்க வேண்டும் என்ற
ஆசை வந்துவிடும்.
அதுவும் நடந்துவிட்டது. இப்போது
முற்றத்தில் முத்துச் சுடரொளி பரப்பி நிலவு
வந்து எட்டிப் பார்த்துச் சிரிக்க வேண்டும்
என்ற ஆசை.
இரவினில் நிலவு வந்து போயிற்று.
இனி அதிகாலையில் குயில்கள் கூடி வந்து
கத்திச் செல்ல வேண்டும் என்று ஆசை.
குயில்கள் கத்தினால் மட்டும் போதுமா?
கூடவே பூந்தென்றல் காற்று வர வேண்டாமா?
தென்றல் வந்து காதோடு கவிபாடிச் செல்ல
வேண்டும் என்று ஆசை.
இத்தனை ரம்மியமான சூழலில் அழகானவீடு
இருந்தால் மட்டும் போதுமா?
இல்லத்தில் இருந்து ஆட்சி செய்ய ஒரு பத்தினிப்
பெண் வேண்டாமா?
அவள் இல்லாமலா?
இல்லம் என்று இருந்தால் அதில்
இல்லாள் இருந்தால்தானே மகிழ்ச்சி.
இப்படி ஒரு ஆசை யாருக்கு வந்திருக்கும்
என்று நினைக்கிறீர்கள்.
நம்ம பாரதியாருக்குத்தங்க இப்படி ஒரு
சின்னச்சின்ன ஆசை இருந்ததாம்.
அதனை அவர் தனது காணி நிலம் வேண்டும்
என்ற பாடலில் இப்படித்தான் சொல்லி இருந்தார்.
"காணி நிலம் வேண்டும்- பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய்- நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும்....
..... .....
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் எங்கள்
கூட்டுக் களியியினிலே- கவிதைகள்
கொண்டுதர வேண்டும்...."
என்றார் பாரதி.
இதிலிருந்து இல்லம் என்றால் அங்கு
இல்லாள் இருத்தல் வேண்டும். அப்போதுதான்
அங்கு மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
மகிழ்ச்சி வந்திட்டால் கவி தானாக
பிறக்கும் என்பது பாரதியின் கருத்து.
இப்போது நம் மனதில் ஒரு கேள்வி
எழுகிறது.
இல்லாள் இல்லத்தில் இருந்துவிட்டால்
மகிழ்ச்சி வந்துவிடுமா?
மனைவி இருந்தால் மகிழ்ச்சி உண்டு.
மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்
எதார்த்தத்தில் எல்லா வீடுகளிலும்
இப்படிப்பட்ட மகிழ்ச்சி இருப்பதில்லையே!
அதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா!
அந்தக் காரணத்தை யாரிடம் கேட்டுத்
தெரிந்து கொள்வது?
ஔவையிடம் கேட்டுத் தெரிந்து
கொள்வோம் வாருங்கள்.
எப்போதுமே ஔவையின் எல்லாப் பாடல்களும்
எதார்த்தநிலையைப்
பிரதிபலிப்பதாகவே இருக்கும்.
இதனால் ஔவை இல்லாளைப் பற்றி
என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாமே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புளிக்கிடந்த தூறாய் விடும்"
இல்லாள் நற்பண்புடையவளாக இருத்துவிட்டால்...
வீட்டில் இல்லை என்ற சொல்லே இல்லாமல்
போய்விடும்.
இல்லாளிடம் நற்பண்புகள் இல்லாமல் போய்விட்டால்...
அதாவது பேச்சுக்குப் பேச்சு எதிர்த்துப்
பேசி மல்லுக்கட்டி நிற்பவளாக மனைவி வாய்த்து
விட்டால்... வீடு வீடாக இருக்காதாம்.
ஒரு புலி பதுங்கி இருக்கும் குகையாக மாறிவிடுமாம்.
புலி பதுங்கி இருக்கும் குகைக்குள் எப்படி மகிழ்ச்சியாக
வாழ முடியும்?
எந்த நேரமும் புலி தாக்கிவிடுமோ என்ற
ஒரு அச்ச உணர்வோடுதான் வாழ
வேண்டியிருக்கும்.எப்போதும் வீட்டுக்குள்
ஒரு போராட்டம் நடந்து கொண்டே இருக்கும் .
மொத்தத்தில் வீடு சீரழிந்து போய்விடும்
என்கிறார்.
இல்லாளின் இருபக்கத்தையும் ஆராய்ந்து இவ்வளவு
அருமையான உவமையோடு ஔவையைத்
தவிர வேறு யாரால் சொல்லியிருக்க
முடியும்?
அருமையான விளக்கம் இல்லையா ?
இதைத்தான் வள்ளுவரும்,
"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாமாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் "
அதாவது மனைவியானவள் இல்லறத்திற்குரிய
நற்பண்புகள் இல்லாதவளாக இருப்பின்
எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும்
கணவனுக்குச் சிறப்பு ஏற்படப் போவதில்லை.
ஒரு குடும்பத் தலைவனுடைய சிறப்பு
அவனுக்கு வாய்த்திருக்கும் நற்பண்புள்ள
மனைவியால் மட்டுமே கிட்டுவதாக இருக்கும்.
என்கிறார் வள்ளுவர்.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
என்று ஒற்றை வரியைக் கையில் பிடித்து
உலா வந்து கொண்டிருந்த நம்மை
அட...மானிடா..இல்லாளுக்கு இன்னொரு
விளக்கமும் தருகிறேன் கேள் என்று
புலியை உவமையாகச் சொல்லிக் கிலிபிடிக்க
வைத்துவிட்டார் ஔவை.
Comments
Post a Comment