போராளியோ பேராழியோ

போராளியோ பேராழியோ 


போராளியோ 

பெரும்பேராழியோ

விளங்கிட முடியா

வேதம்தான் பெண்ணோ!

இளநகை புரிந்து 

இன்முகம் காட்டியவளைப்

பேதை என்றது முத்தமிழோ!


சிறகுகள் முளைத்துச்

சிட்டாய்ப் பறந்து 

செவிமடல் திறந்து

செம்மையை அறிந்து

கேள்விக் கணைகள் தொடுத்து

கர்வம் தொலைத்தவளைப்

பெதும்பை  என்றது நற்றமிழோ!



மாசிமாதத் தென்றலாய் 

மாலை நேரத் தென்றலாய் 

மயங்கிட வைத்து

மனமதைத் துவைத்து

மடவரலானவளை

மங்கையென அழைத்தது வண்டமிழோ!


உள்ளதை உரைத்து

உவப்பினில் திளைத்து

உன்மத்தம் கொண்டு

ஊமைமொழி பேசி

உள்ளம் கவர்ந்தவளை 

மடந்தையென உரைத்தது தீந்தமிழோ!


இமையாய் இருந்து

இதயத்தில் சுமந்து

இனிமையைத் தந்து

இல்லம் மகிழ

இளம்பிடியானவளை

அரிவை என்றது அருந்தமிழோ!


உள்ளங் கையில்

உறவினைச்  சுமந்து

உலகினை அறிந்து

உழைப்பினைத் தந்து

உண்மையை உரைத்து

உயர்யானவளை

தெரிவை  என்றது தண்டமிழோ!


பேராளுமையோடு 

வீட்டாளுமை செய்து

நாட்டாமையாய் 

நற்கடனாற்றி

நற்பணி முடித்து

நன்மகளானவளை

பேரிளம் பெண் என்றது பைந்தமிழோ!


இத்துணைப் பெயர்கள் 

தந்தவர் எவரோ?

எப்படி இப்படி என்ற

வியப்புதான் நினதோ

போராளியோ பெரும்பேராழியோ

விளங்கிட முடியா 

வேதம்தான் பெண்ணோ!






Comments