கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து
நல்வழி ஔவையாரால் பாடப்பட்ட
நீதி நூல்.
மக்களை நல்வழிப்படுத்த அக்கால
புலவர்கள் மெனக்கெட்டிருக்கின்றனர்
என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏதோ நமக்குப் பாட வருகிறது
பாடிவிட்டுப் போவோமே என்று
கடமைக்காக ஏனோதானோவென்று
எழுதப்பட்டவை அல்ல.
பார்த்துப் பார்த்து
செதுக்கி
வடிவமைக்கப்பட்டவை.
மனங்களைப் பண்படுத்த
உலக எதார்த்தத்தைச் சொல்லித் தர
விழிப்புணர்வு ஏற்படுத்த
எச்சரிக்கை செய்து கவனமாக
இருக்க வைக்க நம்
புலவர்களைத் தவிர கரிசனம் மிக்க
இன்னொருவர் உலகில் இருக்கிறாரா
என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன்.
ஒருவரா இருவரா அனைத்துப் புலவர்கள்
எழுதிய பாடல்களும் ஏதோ ஒரு வகையில்
நம் மனதிற்கு நெருக்கமாக
அமைந்துவிடுகிறது.
நம்மை நல்வழிப் படுத்துவதாகவே
அமைந்துவிடுகிறது.
அருமையான நூல்களைப் படைத்த புலவர்கள் பலருண்டு.
அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்
ஔவையார் என்றால் மிகையாகாது.
ஔவை எழுதிய ஆத்திசூடியைப்
படிக்காமல் யாரும் அரிச்சுவடு
கற்றிருக்க முடியாது.
அதுபோல ஔவையார் நீதிநூல்களைக்
கற்றிடாமல் கடந்திட முடியுமா?
கற்றவர் என்று சொல்லிடத்தான்
முடியுமா?
உங்களுக்காக
ஔவையின் நல்வழி
பாடல்களிலிருந்து நாளும் ஒரு பாடல் ஒவ்வொன்றாக வரப்போகிறது.
படித்து மகிழுங்கள்.
முதலாவது இறை வணக்கப் பாடல்.
இறைவணக்கமும் தமிழ்த்தாய்
வாழ்த்தும் இல்லாமல்
தமிழர்கள் எந்த ஒரு செயலையும்
தொடங்குவதில்லை.
அப்படி ஒரு பண்பினை நமக்குள்
விதைத்துப் போனவர்கள் நம்
புலவர்கள் என்றுதான்
சொல்ல வேண்டும்.
திருவள்ளுவரும் முதல் பத்துப்
பாடலும் வாழ்த்து என்ற தலைப்பின்கீழ்
எழுதியிருக்கிறார்.
இலக்கியங்கள் எல்லாம் வாழ்ந்தோடு
தொடங்கும்போது
ஔவை மட்டும் இதற்கு விதிவிலக்காக
இருக்கப்போகிறாரா என்ன?
இதோ நல்வழியில் ஔவை
எழுதிய வாழ்த்துப் பாடல்.
"பாலும் தெளிதேனும்
பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு
நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"
பெருமை மிகுந்த அழகிய
யானை முகம் கொண்ட
விநாயகயப் பெருமானே!
நான் உனக்கு இனிமையான
பால் ,தூய்மையான தேன்,
வெல்லப் பாகு, பருப்பு
ஆகிய நான்கையும் கலந்து
உனக்குப் படைக்கிறேன்.
நீ எனக்கு இயற்றமிழ் ,
இசைத்தமிழ்,
நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழையும்
தா என்று கேட்கிறார்.
பாடல் தானே பாட வேண்டும்.
இதற்கு முத்தமிழும் எதற்கு?
இசைத்தமிழ் போதாதா என்று
கேட்கத் தோன்றும்.
மக்கள் உள்ளங்களுக்கு ஏற்ப இயற்றமிழ்
எடுத்து இசைத் தமிழில் தோய்த்து
நாடகப் பாங்கிலே கதாப்பாத்திரங்களை
முன்னிருத்துவதுபோல செய்திகளை முன்னிருத்தி எழுதும் வரிகள்தான்
உயிரோட்டம் மிக்கதாக
இருக்கும் என்ற
நம்பிக்கையாக இருக்கலாம்.
எது எப்படியோ ஔவைமொழி
என்றால் அனைவரையும் ஈர்க்கும்.
இசையோடு அசைபோட வைக்கும்.
அந்தவகையில் இந்த வாழ்த்துப் பாடல்
அனைவரையும் ஈர்த்தது என்றால் மிகையாகாது.
இன்றுவரை தமிழ்பேசும் நல்லுள்ளங்கள்
கொண்டாடும் வாழ்த்துப் பாடல் என்ற பெருமை
இந்தப் பாடலுக்கு உண்டு.
( இன்னும்)
Comments
Post a Comment