பவளவிழா வாழ்த்து
பவளவிழா வாழ்த்து
பொங்கு புனல் பொருநை நதிநடக்க
அங்கம் தகதகக்க அருமருந்துநீர் மணக்க
நெல்லை இராமையாபிள்ளை கோமதி
இணை மடிசுமக்க
மெல்ல சிரித்தாள் செந்தாமரையாள்
ஞானம் முகம் சிவக்க!
கண்டேன் சீதையை என மன்னன்
செல்லப்பா நெகிழ்ந்திருக்க
மங்கை நல்லாள் நாணிமுகம்
கோணி நிற்க
இல்லறத்தில் இணைந்திருக்க
இருவரும் விழைந்திருக்க
இனிதாய் வளைகரம் பற்றினார் மணம் முடிக்க!
இல்லற சாட்சி முன்னுரை எழுதி வைக்க
நன்மக்கள் நால்வர் பிறந்தார் புதுக்கவிதை
வரைந்து வைக்க
நல்லதோர் கூட்டாட்சி இல்லத்தில் கூடியிருக்க
நல்லாட்சி செய்தார் பிள்ளைகள் நனி சிறக்க!
ஆசிரியர் பணிக்காய் முல்லுண்டில்
கால் பதிக்க
தொடர் ஓட்டம் பவாய் மாதுங்கா பேண்டி பஜாரெனப் பயணிக்க
தலைமையாய் மகுடம் சூட்டி முல்லுண்ட்
அணியம் சேர்க்க
பணி நிறைவு செய்தார் நற்பெயர்
நாளும் நிலைக்க!
இவரின்....
குன்றா மொழிப் புலமை கண்டு நான் மலைக்க
மண்டும் மதிகண்டு வான்மதியை
கார்மேகம் தான் மறைக்க
பார்த்தேன் பாத்தேன் படித்தேன்
என உள்ளம் குதுகலிக்க
படி தேன்உண்டு திழைத்தே கிடந்தேன்
இவரில் என் மதிமயங்க!
இங்கே....
பவளவிழா நாயகியாய் இவர்
வீற்றிருக்க
பார்த்த கண்கள் அத்தனையும்
இவரில் நிலைகொண்டிருக்க
இளமையின் மறைபொருள் நன்மக்கள் வாய்த்தலெனப் பிசிராந்தையார் முன்மொழிய
அதற்கிலக்கணமே இவரென வழிமொழிந்து
நிற்கிறேன் கண்கள் விரிய!
கடையேழு வள்ளல் உண்டென்று
சங்ககாலம் எழுதி வைக்க
கடையரே யாமென்று பெண்கள்
எல்லாம் ஒதுங்கி நிற்க
எட்டாம் வள்ளலாய்ப் பெண் இவரிருக்க
எழுதுக புதுவரலாறு ஞானமே
பெண் வள்ளலென பதிந்திருக்க!
பசிப்பிணிப் போக்கும் மருத்துவம் பெற்றோரிடம் கற்றிருக்க
புசிக்க வைத்து மகிழும் பண்பு மேலோங்கியிருக்க
அறுசுவை படைக்கும் உணவுச்சாலை
இல்லத்தில் அமைத்திருக்க
ஆதிரையின் அட்சயப் பாத்திரம் இவரோடு
வந்தது உலகம் வியக்க!
இறைவனிடம் வரம்
ஒன்று கேட்கின்றேன்....
இறைவா!
இன்றுபோல் என்றும்
நாங்கள் உவந்திருக்க
நல்லவை நாளும் நடந்திருக்க
நல்லுள்ளங்கள் யாவும் வாழ்த்தியிருக்க
தோளோடு தோழமையாய்த்
தோள் சாய்ந்து யாம் மகிழ்ந்திருக்க
இன்னொரு வெள்ளிவிழா
ஆண்டு கூட்டித் தந்திடுக
நூற்றாண்டு விழா அரங்கில்
கூடி யாம் களித்திருக்க!
-செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment