பாகப்பிரிவினையில் அம்மா

பாகப்பிரிவினையில் அம்மா 


 "பாட்டி...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன்.

 

  "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல் கொடுத்தபடியே   தட்டுத்தடுமாறி வந்து கதவைத் திறந்தார் பாட்டி.

    

கதவைத் திறந்ததும் "யாரும்மா..

மூத்தவன் பிள்ளையா?

கையைப் பிடித்த பாட்டி "செல்வனா..

பள்ளிக்கூடத்துக்குப் போகல"

கரிசனமாக கேட்டார் பாட்டி.

    

"போகல..."ஒற்றை வார்த்தையோடு 

பேச்சை முடித்துக் கொண்டான் செல்வன்.

   

   " ஏன் போகல...அம்ம வீட்டுல இல்லையா?"

   

  "இருக்காங்க..இருக்காங்க."சலிப்பாக பதில் வந்தது.

  

    "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?"

    

   "ஒருத்தரும் அடிக்கல...போகல்ல

    என்றால் போகல்ல

    விடுங்களாம் பாட்டி."

    

   " பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா..."

 என்ற  பாட்டி.,

   "உங்க அப்பாவும் இப்படித்தான்.

   பள்ளிக்கூடம் போன்னா எங்கேயாவது 

   போய் ஒளிந்து கொள்வான்.

   சாயங்காலம் பள்ளி விடும் நேரத்தில்

   டாண் என்று வீட்டில் வந்து நிற்பான்.

   அதனால்தான் படிக்காமல் போய்விட்டான்."

   மகன் படிக்காமல் போனதற்காக இப்போது வருத்தப்பட்டார் பாட்டி.

   

" பாட்டி புறப்படுங்க...புறப்படுங்க.."

கையைப்பிடித்து இழுத்தான் செல்வன்.


" எங்க போகணும் ... "


" இன்னைக்கு என்ன நாளு....சொல்லுங்க பார்ப்போம் "


" எனக்கு என்ன தெரியும். கண்ணா தெரியுது.."


" வாங்க...எங்க வீட்டுக்கு போக வேண்டிய நாள் ...

 வாங்கன்னா...வாங்க..."கையைப்பிடித்து இழுத்தான்.

 

 பாட்டிக்கு இதற்குமேல் ஒன்றும் கேட்க 

 தெரியவில்லை.புரிந்து போயிற்று.

 

 மனசுக்குள் ஒரு வலி வந்து 

 சுருக்கென்று குத்தியது.

 

 மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு பூமணி

பாட்டி பட்டபாடு கடவுளுக்கு ஏற்காது.

 

 சூரியன் உதிக்கும் முன்னே காட்டில் போய் 

 நிற்பாள்.

 கீரை பறித்து வந்து நாலுபணம் கொண்டு வந்தாதான்

ஐஞ்சு பேரும்  வயிறார சாப்பிட 

முடியும்.


தாத்தா காட்டு காவல்காரர்.

நல்லா காடு விளைஞ்சா விளைக்கு

 நாலு மரக்கால் 

 கடலையோ சோளமோ  கிடைக்கும்.

 இல்லை என்றால்...வயிற்றுப்பாட்டுக்கே

 தகினத்தோம் போட வேண்டியதுதான்.


விளைச்சல் இல்லாத காலத்துல

தாத்தா புளி பறிக்கும் வேலைக்குப் போவாரு. அப்படி ஒருமுறை புளிய பறிக்கப் போன இடத்துல புளியமரத்துல இருந்து விழுந்து

கால் எலும்பு ஒடஞ்சிப் போச்சி.

ஒரு நாட்டு வைத்தியரு வீட்டுக்கு  தூக்கிட்டுப் போனாவ.

ஒரு வழியாக தேறி வந்துட்டு.

ஆனால் 

ஒத்தக்காலை தாங்கித்தாங்கித்தான் தாத்தாவால நடக்க  முடிஞ்சுது.


கனத்த வேலைக்குப் போகமுடியாது.


சும்மாவே இருக்கதைவிட

கங்காணி வேலைக்காவது போகலாம்

என்றுதான் ஊருல நாலு பெரிவுகிட்ட போய் வேலை கேட்டாவ...


அவுங்க எல்லோரும் இந்த நொண்டிக்காலை வச்சுகிட்டு நீர் என்ன வேலை செய்வீருவோய்...பேசலாமா வீட்டுல கிடவும் என்று சொல்லிபுட்டாவ.


வீட்டுல ஒரு ஆட்டுக்குட்டி கிடக்கு.

 அதுக்கு ஒரு கொடுக்குபோல கொழைகிளைபறிச்சி 

 கக்கத்துல வச்சுகிட்டு வந்து 

அத வளத்துகிட்டு இருந்தாவ.

 


ஊரு மெப்புக்கு இல்லை

என்று சொல்லாம ஒரு நாலு சென்டு நிலம் 

வாங்கிப் போட்டுருந்தாவ.

அதுல ஒரு 

பெறைய மடக்கி  ஓரமாக ஒரு 

கூரையைப்போட்டு இருந்தாவ.


மக்கமாரு மூணு பேரும் கலியாணம் பண்ணிகிட்டு தனித்தனியா போயிட்டாவ.

அதுக்கு பெறவு பாட்டியும் தாத்தாவும் அந்தப் பெறக்குள்ளதான் கஞ்சி காய்ச்சி குடிச்சிகிட்டு முடங்கிகாகிடந்தாவ.


சாப்பிட்டியளா இருக்கியளா என்று யாரும் வந்து கேட்க யாரும் வரமாட்டாவ


 தாத்தா வேலை பார்த்த வரை பிள்ளைகள் 

 தனியாக வைத்து இருப்பது  பாட்டிக்கு பெருசா தெரியல...

 போனமாசம் வந்த ஒரு நாளு வயித்துப்

 போக்குல தாத்தா கொளக்குன்னு

 விழுந்துட்டாவ.....

பாட்டி ஓடிப் போயி

 நர்ஸ் அம்மாவ

 கூட்டிட்டு வந்து பார்த்தாவ

...

ஒண்ணும் இல்ல...எல்லாம் முடிச்சுப் போச்சுன்னு

நர்ஸ் கையை ஆட்டிட்டு

போய்விட்டாவ ...

எல்லாம் முடிஞ்சு போச்சு.


 தாத்தா போனதும் விசயம் 

 பெருசா போச்சு.

 அம்மாவுக்கு இனி 

 யார் சோறு கொடுப்பது என்ற

 பேச்சு வார்த்தை பொதுவெளிக்கு வந்தது.

 

 யாருக்கும் தாயை கூட வைத்துப்

 பார்க்க விருப்பம் இல்லை.

 

 

யாரும் முழுசா  ஒத்துப்போகல..

 விசயம் ஊர்ப்பெரியவர் வரை

 போய் நின்றது.

  

" அம்மாவ யாராவது ஒருத்தர் வீட்டுல வச்சி பார்த்துங்கப்பா...வயசான காலத்துல

அங்கேயும் இங்கேயும் அலையவிடாதுங்க"

என்றார் ஊர்ப்பெரியவர் .


"அது எப்படி ஒருத்தரே ஏத்துக்க முடியும்..

மூத்தவனுக்குத்தான சிறுவாட்டுப்

பணம் எல்லாம் கொடுத்தாவ

.அவனையே கூட வச்சுப்

பார்த்துக்கிட சொல்லுங்க 

என்று ஏறுக்குமாறா

பேசினார் ."

இளைய மகன்.


"என்ன பேச்சு பெசுற....

உன்னைத்தான் பத்தாவது வரை படிக்க

வச்சாவ...என்னை மூணாவது 

படிக்கும்போதே காட்டுக்கு

கூட்டிட்டுப் போயி என் படிப்புபை ஒண்ணும் 

இல்லாம ஆஙக்கிப்புட்டாவ ...ஞாயமா

பார்த்தா நீதான் சாப்பாடு போடணும்"

என்றார் இரண்டாவது மகன்.


"ஆமா...பார்க்கிறது பார்த்துடலாம்.

கிடையில விழுந்துட்டா என்றால்

யாரு ஆஸ்பத்திரி செலவ பார்க்கிறது.?

தூக்கி எடுத்து குளிப்பாட்டி எடுக்க பொண்டாட்டி  ஒத்துக்குவாளா...இல்ல உன் பொண்டாட்டி தான் பார்பாள....அதையும்

சேர்த்து யோசித்து முடி வெடுங்க"என்றான்

நடுலவன்.


'இப்போ என்னதான் சொல்ல வாறீய.?"

.

"எங்களால் முடியாது."

ஒத்த வார்த்தையில அனைவரும் முடிச்சுபிட்டாவ.


."உங்களால் முடியாதுன்னா...

எங்கேயாவது முதியோர் இல்லத்தில்

கொண்டு சேர்த்துருவோமா... பேசுறான்

பாரு பேச்சு..."


"அப்படி சொல்ல வரல..."


"அப்படி சொல்ல வரல 

நொப்படி

சொல்ல வரல என்னுட்டு..

வேறு எப்படித்தான்  

சொல்ல வாறீக.."


"அம்மையையும் மூணா பிரிங்க..'


"ஏன் அவ உயிரோடு இருப்பது உங்களுக்கு பிடிங்கலியா?

மூணு கூறு போடணும் நாலு கூறு போடனுண்னுட்டு ...முட்டாயப்பய மாதிரி பேசாத"என்றார் பெரியவர்.


"ஏல...நீங்க எல்லாம் மனுஷ பயக்கதானால

 பெத்த தாயை ஆளாளுக்கு இப்படி ஏலம் போடுறீகள

 இது நல்லாவா இருக்கு..."

 என்றார் பூமணி பாட்டியின் தம்பி.

 

" ஏன் அவ்வளவு பாசம் பொங்கிட்டு வருதுன்னா

 நீங்க கொண்டு வைச்சி பார்க்கிறது.

 உங்க உடப்பிறந்தாள்தான..."

 சீறினான் இளையவன்.

 

" அட...சும்மா இருங்கப்பா...

 ஆளுக்கு ஒண்ணக்கெடக்க  ஒண்ணபேசிகிட்டு...

 தாயை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து

 நிறுத்துன பயக்க.. வாயும் பேசணுமாக்கும்." என்றார் பக்கத்து

 வீட்டு தாத்தா.

 

" தலைவரே...நீங்க   என்ன நினைக்கியளோ அதைத்

 தீர்ப்பா

 சொல்லுங்க  கட்டுப்படாம எங்க போவானுவ..."என்றார்

 சின்ன தாத்தா.

 

' அப்போ..

ஆளுக்கு ஒருமாசம் 

 பெரியம்மாவுக்கு சோறு கொடுங்கப்பா..

போதுமா?

அவன்னவன் பங்குக்கு சோத்தையாவது ஒழுங்கா கொடுங்க

அவுங்க இப்போ இருக்கிற வீட்டுலேயே இருக்கட்டும்.

 நாளை மத்தநாளு ஏதாவது ஆச்சுன்னா

பெத்த மகனுவ 

 நீங்க  ஒருத்தரும் பார்க்காண்டாம்.

  நான் பார்த்துகிடுவேன்.

என் தாய் இருந்தா நான் என்ன செய்வனோ அதை நானே செய்கிறேன்.

அன்னைக்கு வந்து என் அம்மா ஆத்தான்னு வந்து நிக்கப்பிடாது சொல்லிபுட்டேன்

போய் வேலை ஜோலிய பாருங்க.போங்க"

 என்று கோபமாகப் பேசிவிட்டு

 விருட்டென்று எழும்பிப் போய்விட்டார்

 ஊர் பெரியவர்.

 

 மாசம் பொறக்க இரண்டுநாள்

 இருந்ததால யாரும்  வந்து கூட்டிப் போகல...

 தம்பி வுட்டுல இருந்து தம்பி மக்க

 சோறு கொண்டுவந்து கொடுத்தாவ

 

 இன்று ஒன்றாம் தேதி.

 அதுதான் மூத்த மவன்புள்ள பாட்டியை 

 கூட்டிட்டுப் போக வந்திருக்கிறான்.


"வாங்க பாட்டி.

என்ன ரோசனையா நிக்கிய..."

என்றான் செல்வன்.


"ஒண்ணுமில்ல...இந்த கதவு பூட்டமாட்டேங்குது.

சாத்திப் போட்டுட்டுப் போனா நாயிகீயி வந்துடபிடாதுன்னுதான்" மழுப்பினார் பாட்டி.


"ஒரு நாயும்கீயும் வராது.

நீங்க ரசப்ழமும் சோறும் வச்சுருக்கிய 

இல்ல...உடனே நாயி உங்க வீட்ட மோப்பம் பிடிச்சி வந்திடப் போவுது....போவியளா..

வாங்க லேட்டா போனா அன்னக்கிளி

ஆடிருவா"


"தாயை அப்படி எல்லாம் பேசப்புடாது மக்கா"


"நீங்க மட்டும் எங்க அப்பாவுக்கு தாய் இல்லியா.?

இருக்கட்டும் இருக்கட்டும்...

ஒரு நாளைக்கு வச்சுக்கிடியேன்

ஆட்டத்த...இப்போ வாங்க"


  பேரன் கையைப்பிடித்தபடி  தெருவில்

  நடந்தார் பாட்டி.

  

 வழியில் வந்த பெரியவர் ஒருவர்

  "என்ன பெரியம்மா சௌக்கியமா" என்று விசாரித்தார்.

  

 "ஆமாங்க.. 

ஆளு தெரியல...

யாருங்கய்யா நீங்க?"

 

" நான் தெற்குதெரு பலவேசம் மகன் 

மூத்தவன் மாடசாமி"


" ஐயா...நல்லா இருக்கியளா...?

  கண்  கொஞ்சம் மங்கலா இருக்கு..

  ஒரு ஆளு இனம் தெரிய மாட்டேங்குது"

  

" ஆமா  ....பெரியம்மா  இப்போ எங்க 

புறப்பட்டாப்புல  இருக்கு"


" மூத்தவன் மவன் வந்து கூப்பிட்டான். 

அதுதான் மூத்தவன் வீட்டுக்குப் போறேன்ய்யா..."


" அட...இன்னைக்கி ஒண்ணாம் தேதி இல்ல..

 இந்த மாசம் மூத்தவர் முறையா ? "


"என்ன முறையோ போங்க....

கிடக்கிற எடுத்துல நாலு பருக்கைய

தின்னுகிட்டு சத்தம்காட்டாம 

ஒரு மூலையில முடங்கிக் கிடக்கணும் "

சலிப்போடு பேசினார் பாட்டி.


"பெரியாளு சரியாத்தான் சொல்லுறீயம்மா....

காலம் கலிகாலம்.... வேற என்னத்த சொல்ல...

மாடுகீடு வருகிற நேரம்.....

பத்திரமா போங்க.பாட்டிய

பாத்து கூட்டிட்டுப் போப்பா "

என்று சொல்லிட்டுப் போனார்

அந்த மாடசாமி தாத்தா.


 

" இன்றிலிருந்து  இன்னும் ஒரு மாசம் 

 எங்க வீட்டில்தான் பாட்டிக்கு  சாப்பாடு. 

 பாட்டி கையை சிக்குன்னு பிடிச்சுகிட்டு கிடுங்க " 

என்று   பெருமையாக கூறியபடி

நடந்தான் செல்வன்.

 

" ஆமா.... மூன்று புள்ளைகளும் 

ஆளுக்கொரு மாசமா பெரியம்மாவ 

பங்கு போட்டுகிட்டாவல்ல......அதுதான்

பாவம் பெரியம்மா ....மூத்தவ மவன் வீட்டுக்குப் போகுது" 

போகிற போக்கில் சொல்லிவிட்டு

 போனார் தாத்தா.

 

 அவளுக்கென்ன மூணும் ஆம்புள புள்ள...

 என்று சொன்னவர்களே  ...மூணு புள்ளையை

பெத்து எதுக்கு?  "என்று பேச   ஆரம்பிச்சுட்டாங்க..

 ஆமாங்க..ஊரு மெப்புக்குத்தான்

 பூமணி   பாட்டிக்கு  மூணு புள்ள.

 

பாட்டி ஓயாம சொல்லுவார்....

ஒரு பொட்டபுள்ள என் வயித்துல

 தங்கல....என்ன பாவம் பண்ணினேனோ....

 செத்தா அழகூட பொட்ட புள்ள இல்லன்னு

 தாத்தா கிட்ட சொல்லிகிட்டு. இருப்பாவளாம்.


சும்மா இரு.... எதுக்குப் 

பொட்டபுள்ள...பொட்டபுள்ள என்கிறா?

பொட்ட புள்ள இருந்தா நகை நட்டு

போட நம்மாளால யாலுமான்னு .....என்று தாத்தா

சொல்லுவாராம்.


"தவங்குன காலத்துல பொட்டபிள்ளதான்

ஓடி வந்து பார்க்கும்...

உமக்கு இப்போ தெரியாது "


"ஒண்ணுக்கு மூணு ஆம்பிளை பிள்ளைகளை

பெத்து வச்சுருக்கா....ஆசையைப் பாரு..."

என்பாராம் தாத்தா.


"நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.

ஒரு பொம்பள புள்ள இருந்தா....

அவள் வீட்டுக்குப் போனோம்

வந்தோம்ன்னு இருக்கும். "

பாட்டி புலம்பிகிட்டே இருப்பாவ.


இப்போ பாருங்க சட்டம் போட்டுதான் மகன் வீட்டுக்குப்‌ போக முடியுது...

பாட்டி நெஞ்சுக்குள்க்குள்ள ஏதோ உருளுவது போல இருந்தது.

ஒருமாதிரி படபடப்பா இருந்தது.

காலு பெலம் இல்லாத மாதிரி தள்ளாடியது.

கையை உருவிய பாட்டி அப்படியே கீழே

உட்கார்ந்தார்.


"என்னப் பாட்டி என்னாயிற்று...

படபடன்னு வருதா...?"


"செத்த உக்காந்துட்டு போவோமாய்யா"


"சரி வாங்க...அந்தத் திண்ணையில் உக்காருங்க...

மாடுகீடு வருகிற நேரம்"

கையைபிடித்துத் தூக்கி கைத்தாங்கலாக 

நடக்க வைத்து திண்ணையில் இருக்க வச்சான் பேரன்.


"என்ன பாட்டி ...எங்க வீட்டுக்கு வர பிடிக்கலியா... 

பேசாம உங்க வீட்டுலேயே இருங்க..

நான் இந்த மாசம் முழுவதும் 

உங்கள் வீட்டுக்கு சோறு கொண்டுவந்து தாரேன்."


"அதெல்லாம் வேண்டாம்பா... உனக்கு எதுக்கு சிரமம்? உங்க அம்ம கோபப்படுவா .வா போவோம்" கையைப் பிடித்தார் பாட்டி.


எனக்கு  வருகிற ஆத்திரத்துக்கு 

அப்படியே... சுவற்றில் ஓங்கி ஓங்கி குத்தினான் பேரன்.


அவனுக்குள் ஏதோ ஒன்று

கனன்று  கொண்டிருந்தது.







 

                

கருத்துகள்

Popular Posts