ஈஸ்டர் வாழ்த்தும் முயலும்
ஈஸ்டர் வாழ்த்தும் முயலும்
ஈஸ்டர் பண்டிகை நெருங்கி விட்டது.
ஆளாளுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவதும்
கவிதை எழுதி அனுப்புவதும் என்று
பரபரப்பாக இருக்கும் நேரம் இது.
நானும் வாழ்த்து அட்டை அனுப்ப அட்டைகளைத் தேடித்தேடி தேர்வு செய்யத் தொடங்கினேன்.
எல்லா அட்டைகளிலும் முட்டையோடு ஒரு முயல் ஒன்று தலையைத் தூக்கிக் கொண்டு நின்றது.
என்ன இது முட்டையோடு முயலா?
ஈஸ்டர் வாழ்த்து அட்டைகள் அனுப்பும்போது
வெறுமனே இயேசு உயிர்த்தெழுந்த படங்கள் இருந்தால் போதாதா?
ஆனால் ஈஸ்டர் வாழ்த்து அட்டை மட்டும் மற்ற பண்டிகை
வாழ்த்து அட்டைகளை விட சற்று
வேறுபட்டிருக்கிறதே!
முட்டையோடு முயலும் காதுகளை உயர்த்தி
கம்பீரமாக நிற்கிறது.
ஈஸ்டர் வாழ்த்து அட்டையில் மட்டும் ஏன் இந்த மாறுபாடுகள் வேறுபாடும்?
முட்டையோடு முயலும் சேர்ந்து
இந்த ஈஸ்டர் வாழ்த்து அட்டைப் படத்தில்
இடம் பிடித்தது எப்படி?
முட்டைக்குக் கிடைத்த அதே முக்கியத்துவம்
முயலுக்கும் கிடைக்கக் காரணம் என்ன?
எந்தவிதக் காரணமும் இல்லாமல் முயல்
முக்கியத்துவம் பெற்றிருக்க முடியாது.
அப்படியானால் இந்த முயல் எங்கிருந்து வந்தது?
விடை தேடும்போது ஒரு தேவதை கண்முன்னர் வந்து சிரித்தார்.
முயல் கதையில் ஒரு தேவதையா?
வேடிக்கையாக இல்லை.
வாருங்கள் ....
யார் அந்தத் தேவதை என்று பார்த்துவிடுவோம்.
கிறிஸ்துவுக்கு முன்பு
சாக்ஸோன்ஸ் என்ற ஒரு மதத்தினர்
இருந்தனர்.அவர்கள்
இயோஸ்டர் எனப்படும் வசந்த கால
தேவதையை தங்கள் விருப்பமான கடவுளாக வணங்கி வந்திருக்கின்றனர்.
இந்தத் தேவதைக்கு
சம இராப்பகல் நாளான மார்ச் 21 ஆம்
நாள் விருந்து படைத்து மகிழ்வது
அவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது.
அந்த விருந்தில் அவர்கள் பாரம்பரியப்படி முட்டை
கண்டிப்பாக பரிமாறப்படுமாம்.
இந்தத் தேவதையின் விருப்பமான விலங்கு முயல் .தேவதைக்குப் படையல் வைத்து வழிபடும்போது தேவதையை மகிழ்ச்சிப்படுத்த
உண்மையான முயலை அருகில்
கொண்டு வந்து நிறுத்தி விடுவது அவர்கள் வழக்கமாக இருந்திருக்கிறது.
முட்டையைப் பார்த்த
முயலுக்குச் சும்மா இருக்க முடியுமா? முடியாதில்லையா?
இப்போது இந்தத் தந்திரக்கார முயல்
அந்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து
மறைத்து வைத்துவிடுகிறது.
முட்டை காணாமல் போனதும்
படையல் வைத்தவர்கள் பதைபதைத்துப் போய் விடுகின்றனர்.
வைத்த முட்டை எங்கே போயிருக்கும்?
முயலைத் தவிர வேறு யாரும் இங்கு
இல்லை.
அப்படியானால் அந்த முட்டைகளைக் கடத்தியது இந்த முயல்தானா?
முயல் மீது ஏற்பட்ட சந்தேகம் அதைக் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற
வேகத்தைத் தூண்டிவிட்டது.
முயலின் பின்னாலேயே போய் முட்டைகள் காணாமல் போனதற்குக் காரணம் முயல் என்று கண்டுபிடித்துவிடுகின்றனர்.
இப்போது முட்டையோடு முயலுக்கும்
ஈஸ்டர் பண்டிகையோடு ஒரு தொடர்பு இருக்கிறது என்று நம்பத் தொடங்கினர்.
அதனால்தான் ஈஸ்டர் வாழ்த்து
அட்டைகளில் முட்டைகளோடு
முயலும் இருப்பதைக்
காண முடிகிறது.
முயல் முட்டைகளை உருட்டி விளையாட்டுக் காட்டியது ஒருபுறம் இருக்க
உண்மையான
முட்டைகளை உயரமான மலையிலிருந்து
உருட்டிவிட்டு விளையாடுவது ஈஸ்டர் பண்டிகை விளையாட்டுகளுள் ஒன்றாக
மேலை நாடுகளில் நடத்தப்படுகிறது.
வட இங்கிலாந்தில் முட்டை அமுக்குதல்,
முட்டை தட்டுதல்
முட்டை ஜார்ப்பிங் போன்ற பல முட்டை
விளையாட்டுகள் ஈஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.
இந்த விளையாட்டில் கடைசிவரை
முட்டையை உடையாமல் பாதுகாத்து
வைத்திருப்பவரே வெற்றியாளராவார்.
தோல்வியடைந்தவர்கள் உடைந்த
முட்டையை உண்ண வேண்டும்.
நல்ல விளையாட்டாக இருக்கிறதே!
விளையாட்டு இருக்கும்போது நடனம்
இல்லாமலா?
முட்டை நடனமும் உண்டு.முட்டைகளுக்கு நடுவே
முட்டைகள் உடையாதபடி
நடனம் ஆடுவதுதான் இந்த நடனத்தின்
சிறப்பு.
மேற்கத்திய நாடுகளில் லெந்து நாட்களில்
முட்டை தடை செய்யப்பட்ட
உணவாக இருந்து வந்திருக்கிறது.
லெந்துகாலம் தொடங்குவதற்கு முந்தைய
செவ்வாய்க்கிழமை கடைசியாக
முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வார்களாம்.
அதன் பின்னர் நாற்பது நாட்கள்
முட்டையைக் கையில் எடுப்பதில்லை.
அதன் பின்னர் ஈஸ்டர் நாளில்
வாழ்த்து சொல்வதற்காகத்தான்
முட்டையைக் கையில் எடுப்பார்களாம்.
முட்டையானது கல்லறையின் குறியீடாகவும்
அதனை உடைப்பதன்மூலம் வாழ்க்கை
புதுப்பிக்கப்படுகிறது அல்லது
மீட்டெடுக்கப்படுகிறது என்பதும்
குறிப்பாக உணர்த்தப்படிருக்கிறது என்பதுதான் உண்மை.
அடேங்கப்பா... முட்டைக்கும் ஈஸ்டருக்கும்
இத்தனை தொடர்பா என்று
வியப்பாக இருக்கும்போது
நானும் வருகிறேன் முட்டையை உருட்டி விளையாட என்று முந்தி வந்து
வாழ்த்துச் சொல்லி நிற்கிறது முயல்.
இதோ முட்டைகளை உருட்டிக்கொண்டே முயலும்
உயிர்த்தெழுந்த நாள்
வாழ்த்துச் சொல்ல உங்கள் இல்லம்தேடி வருகிறது.
வசந்தகாலம் பண்டிகையான
ஈஸ்டர் நாள்
இன்பம் இதயத்தில் தங்கட்டும்.
சுகந்தம் எங்கும் வீசட்டும் .
உங்கள் இல்லங்களிலும்
உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிரம்பி வழியட்டும்.
அனைவருக்கும் ஈஸ்டர்நாள்
நல்வாழ்த்துகள்!
கருத்துகள்
கருத்துரையிடுக