காக்கைக்கு ஆகா கூகை

காக்கைக்கு ஆகா கூகை



பாடல்களுக்கு அழகைக் கொடுப்பது அணியாகும். அணி என்றாலே அழகு என்றே பொருள் தரும். அணிகள் பலவகை. பாக்கள் சொற்களால் ஆனதால் சொல்லணி சிறப்புடையதாகக் கருதப்படும். ஒரு சொல் வெவ்வேறு பொருளைத் தரும் சொல்லணியில்  மடக்கு சொல்லணி என்று ஒருவகை உண்டு.  

மடக்குச் சொல்லணி என்றால் என்ன?

 ஒரு சொல்லோ, ஓர் எழுத்தோ மடங்கி வந்து பாவிற்கு அழகைக் கொடுத்து மெருகேற்றுவதால் மடக்கு சொல்லணி என்று அழைக்கப்படும். 


அதனை தண்டியலங்காரம்

“எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும்

பெயர்த்தும் பொருள்தரின் மடக்கு எனும் பெயர்த்தே”   

                   -   தண்டியலங்காரம்: 92

                   

பாவில் வரும் சொற்களில் உள்ள எழுத்துக்கள் இடையிலே பிரியாமலும் அதே சொற்கள் பிரிந்தும் வேறு வேறு பொருளைத்  தருமெனில் அது மடக்கு எனும் பெயர் பெறும் என்கிறது தண்டியலங்காரம்.

ஒருவர் ஒரு செயலைச் செய்வதற்கு ஏன் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்பதைச் சொல்லவந்த திருவள்ளுவர் ,

“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது”                                 

                                         குறள்- 481

என்கிறார்.

அதாவது வலிமைமிக்க ஆந்தையை காகம் பகலில் வெல்லும். அது போல அரசன் தன் பகையை வெற்றிகொள்ள ஏற்ற நேரம் பார்க்கவேண்டும் .

இதுதான் திருவள்ளுவர் கூறிய கருத்து.

இதே கருத்தை காளமேகப் புலவரும் ஒரு பாடலில் பாடியிருக்கிறார். 

ஓர்எழுத்து மடக்குச் சொல்லணிப் பாவில் ஏற்றி காளமேகப்புலவர் பாடியிருக்கும் அந்தப் பாடல் உங்களுக்காக...


காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா”


இது என்ன?

ககர வரிசை எழுத்துக்களை

கிண்டி கிளறி வைத்திருப்பது போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?


எப்படி க் கிண்டித் தந்தாலும்

மண்டிக் கிடக்கும் பொருளைக் கண்டுகொள்ளாமல் கடந்து போக முடியுமா என்ன?

காளமேகப் புலவரின் விளக்க உரையைக் கொஞ்சம் பிரித்துப் படித்துப் பாருங்கள்.

பொருள் எளிதில் விளங்கும்.


காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை

கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு

காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா”


பிரித்துப் படித்துவிட்டீர்களல்லவா?

இனி பொருள் எளிதாகப் புரியும்.


"காகமும் ஆந்தையும் ஒன்றுக்கொன்று பகையானவை. எனவே காகத்திற்கு ஆந்தையைப் பிடிக்காது. ஆந்தைக்கு கூகையைப் பிடிக்காது. அரசன் பூமியைக் காப்பதற்கு கொக்கைப்போலக் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் பகையை எதிர்த்துக் காப்பதற்கு ஆற்றலுள்ள அரசனாக இருந்தாலும்  இயலாமல் போய்விடும் " என்கிறார் காளமேகப் புலவர் .


ஆந்தைக்கு பகலில் கண் தெளிவாகத் தெரியாததால் காகம் ஆந்தையைப் பகலில் வெல்லும். காகத்திற்கு இரவில் கண் தெளிவாகத் தெரியாததால் ஆந்தை காகத்தை இரவில் வெல்லும். பகையை வெல்ல காலம் மிகமுக்கியமானதாகும். 


நல்ல கருத்து இல்லையா?

என்னே புலமை!


காளமேகப்புலவரின் இப்பாடல் ஓர் எழுத்து மடக்குச் சொல்லணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கருத்துகள்

Popular Posts