எல்லைக்கோடு
எல்லைக்கோடு
பெட்டைக்கோழி ஒன்று தன் ஆறு குஞ்சுகளோடு ஆனந்தமாக வாழ்ந்து வந்தது.
ஒவ்வொரு நாளும் இரை தேட செல்வதற்கு முன்பு தன் குஞ்சுகளைப் பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்திவிட்டுச் செல்லும்.
இப்படியே நாட்கள் கடந்தன.
குஞ்சுகளும் பறக்க பழகிக் கொண்டன.
தாய் கொண்டு வரும் தானிய மணிகள் ஆறு குஞ்சுகளும் வயிறார உண்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை.
குஞ்சுகளையும் தன்னோடு அழைத்துச் செல்ல தாய்க் கோழி நினைத்தது.
"பிள்ளைகளே! இன்று முதல் நீங்களும் என்னோடு இரை தேட வாருங்கள்.
நாம் அனைவரும் சேர்த்து இரை தேடினால் நமக்குப் போதுமான உணவு கிடைக்கும்.வாருங்கள் நாம் போவோம் "என்றது.
எல்லா குஞ்சுகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. "ஊரு சுற்றிப் பார்க்கப் போறோம் " என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தன .
ஆனால் குட்டி தங்கையான ராசுக் குட்டிக்கு மட்டும் இது பிடிக்கவில்லை. உம்மென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது.
"ராசுக்குட்டி புறப்படு ...புறப்படு. .."அவசரப்படுத்தின மற்ற குஞ்சுகள்.
" நான் வரல ..."சோம்பேறித்தனமாக பதிலளித்தது ராசுக்குட்டி.
"அம்மா ராசு வரலியாம் "சொல்லியது மீனுக்குட்டி.
" ஏன் ...ஏன் வரல ... கிளம்பு..கிளம்பு " கட்டாயப்படுத்தினார் அம்மா.
"அம்மா நீங்கள் எல்லோரும் போயிட்டு வாங்க . நான் மட்டும் வீட்டிலேயே இருக்கிறேன்....ப்ளீஸ்." கெஞ்சியது ராசுக்குட்டி.
" தனியாகவா? ... உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போக முடியாது" கரிசனத்தோடு பேசினார் அம்மா.
"நான் மாட்டேன்.எனக்கு வயிறு பசிக்கல."பிடிவாதம் பிடித்தது ராசுக்குட்டி.
"சரி. அப்படியானால் நீ வெளியே வரக்கூடாது.கண்டிப்பாக வரக்கூடாது"
கண்டிப்பாக இந்த கோட்டைத்தாண்டி வெளியே வரக்கூடாது. வெளியில் ஆபத்து காத்திருக்கு. பத்திரம்...பத்திரம்.அனைவரும் சேர்ந்தே மறுபடியும் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றன.
" சரி ...சரி பத்திரமாக இருக்கிறேன்... பயப்படாம போயிட்டு வாங்க" சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது ராசுக்குட்டி.
ராசுக்குட்டியைத் தனியாக விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் அரைகுறை மனதோடு சென்றது தாய்க்கோழி.
மற்ற குஞ்சுகள் கூடவே இருந்தாலும் மனது முழுவதும் ராசுக்குட்டி நினைப்பாகவே இருந்தது.
ராசுக்குட்டியும் கூட்டைவிட்டு வெளியே எட்டிப் பார்க்கவே இல்லை.
பொழுது சாயும் நேரம். அம்மா வருகிறார்களா? மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அம்மாவைக் காணவில்லை.
நேரம் ஆக ஆக ராசுக்குட்டியால் பொறுமையாக கூட்டிற்குள் இருக்க முடியவில்லை.
மறுபடியும் மறுபடியும் வெளியே வந்து எட்டிப் பார்ப்பதும் உள்ளே செல்வதுமாக இருந்தது ராசுக்குட்டி.
இருட்டத் தொடங்கியது.
ராசுக்குட்டி மனதில் மெதுவாக பயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு எதுவும் ஆகியிருக்குமோ?
மறுபடியும் பயத்தோடு வெளியில் வந்து எட்டிப் பார்த்தது.
அப்போது தொலைவில் அம்மா மற்ற குஞ்சுகளோடு வந்து
கொண்டிருப்பது தெரிந்தது.
அதற்கு மேலும் ராசுக்குட்டியால் கூட்டிற்குள் இருக்க முடியவில்லை.
உற்சாகம் மேலிட வெளியில் ஓடிவந்தது.
இதற்குத்தான் காத்திருந்தேன் என்பது போல பருந்து ஒன்று குஞ்சினைக் குறி வைத்து மேலே வந்து விழவும்,
ஒரே தாவலாக பறந்து வந்து குஞ்சின்மீது அமர்ந்து கொண்டது தாய்க்கோழி.
ஒரு நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
பயத்தில் வெடவெடுத்துப் போனது ராசுக்குட்டி. பயப்படாதே என்பது போல் தலையைக் கோதிக் கொடுத்தது தாய்.
கண்கள் எல்லைக்கோட்டைப் பார்த்தன.
எல்லை தாண்டியதால் தான் எல்லாம் நிகழ்ந்தது.
இனி ஒருபோதும் அம்மா கிழித்த கோட்டைதாண்டவே மாட்டேன் என்பது போல் இருந்தது அந்த பார்வை
Comments
Post a Comment