முற்பகல் செய்யின்

                                      முற்பகல் செய்யின்


காகம் ஒன்று மாமரத்தில் கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.இந்தக் கூட்டிலேயே முட்டைகளும் இட்டு குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தது.
    ஒரு நாள் எங்கிருந்தோ வந்த குட்டிக் குரங்கு ஒன்று மரத்திற்கு மரம் தாவி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
        காகத்தின் கூடு ஒன்று மரத்தில் இருப்பதைக் கண்டதும் உற்சாக மிகுதியால் கூடுதல் ஆட்டம் போட்டது.
        தாவித்தாவி கூட்டிற்கு அருகில் சென்றது.
கூட்டினுள் எட்டிப் பார்த்தது.  கூட்டினுள் யாரும் இல்லை.
         யாரும் இல்லாத போது விளையாடினால் என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது ? சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்து.
         அப்போது எதிரில் நிற்கும் ஒரு  கொய்யா மரத்திலிருந்து அணில் ஒன்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது.
         குரங்குக்குத் தலை கால் தெரியவில்லை. ஒற்றைக் கையால் ஒய்யார ஆட்டம் போட்டது.
         அணிலைப் பார்த்து வெவ்வெவ்வே என்று அழகு காட்டியது.
அணில் முகத்தைத் திருப்பி     வைத்துக் கொண்டது.
          அணிலின் கவனத்தை ஈர்ப்பதற்காக காகத்தின் கூட்டைப் பிரித்து மாமரத்தை நோக்கி வீசியது குரங்கு.
          அணிலுக்கு கோபம் தாழவில்லை. வேறு மரத்திற்கு சென்றுவிட்டது.
          மாலை நேரம். கூட்டிற்கு வந்த காகம், கூடு தாறுமாறாக வீசப்பட்டுக் கிடப்பதைக் கண்டு பரிதவித்தது.
          இனி என்ன செய்வது? இதெல்லாம் குரங்கின் வேலையாக தான் இருக்கும். ஆனால் யார் தட்டிக் கேட்பது?
              இரவு முழுவதும் மரக்கிளையிலேயே அமர்ந்திருந்தது.
   காலையில் மறுபடியும் ஒவ்வொரு குச்சியாக எடுத்து வந்து கூடு கட்ட ஆரம்பித்தது.
   இப்படி காகம் கூடு கட்டுவதும்
   காத்திருந்த குரங்கு  மறுபடியும் வந்து அதே வேலையைக் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.
   மழைக்காலம் வரப் போகிறது. எத்தனை நாளைக்கு இப்படி மரத்திலேயே கிடந்து காலத்தைக் கடத்துவது?
    வெகு தொலைவுக்குச் சென்றுவிட வேண்டியது தான்.இந்த குரங்கு கண்ணில் பட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது.
    முடிவோடு வேறு இடத்திற்குச் சென்றது காகம்.
    இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
     அப்பாடா....இப்போது தான் இந்த குரங்கு தொல்லையிலிருந்து
     விடுபட்டோம் பெருமூச்சு விட்டது காகம்.
     கூட்டினுள் முட்டை இட்டு பாதுகாத்து வந்தது.ஆனால் எப்போதும் மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.
     காகத்தின் பயத்திற்காக குஞ்சுகள் பொரிக்காமல் முட்டைக்குள்ளே ஒளிந்து கிடக்க முடியுமா என்ன?
     முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியில் வந்தன.
     எத்தனை நாள் தான் அடைகாத்துக் கிடப்பது?
     குஞ்சுகளுக்கு இரை பொறுக்கி வந்து தர வேண்டுமே.அரை மனதோடு ஒவ்வொரு நாளும் இரை தேடச் செல்லும் காகம்.
     திரும்பி வந்து தன் குஞ்சுகளைப் பார்த்த பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விடும்.
     நாட்கள் பல கடந்ததால் இனி எந்த தொல்லையும் இருக்காது என்று நினைத்தது காகம்.
     ஆனால் அந்த நினைப்பு நெடுநாள் நீடிக்கவில்லை.
     எங்கிருந்தோ மோப்பம் பிடித்து வந்து சேர்ந்தது அந்த சேட்டைக்கார குரங்கு.
     மரத்திலிருக்கும் கூட்டைப் பார்த்தது.
     ஓகோ...நீங்க இங்கதான் இருக்கிறீர்களா? மளமளவென்று மரத்தில் ஏறியது.
      ஒரு நொடியில் கூட்டைக் கலைத்து வீசிவிட்டு கும்மாளம் போட்டது.
       கீழே விழுந்த குஞ்சுகள்  கீச்கீச்சென்று கத்தின. பயத்தில் நடுநடுங்கிப் பரிதாபமாக பார்த்தன.
       காட்டிலுள்ள விலங்குக்கு எல்லாம்  ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
       குரங்கிற்கு யார் பாடம் கற்பிப்பது?
        மாலையானதும் காகம் வீடு திரும்பிது.குஞ்சுகள் கீழே கிடப்பதைப் பார்த்து பரிதவித்தது.
       குஞ்சுகளைக் கூட்டிக் கொண்டு ஒரு முட்புதருக்கு கீழ்  பதுங்கி அங்கேயே தன் குஞ்சுகளோடு மறைந்து வாழ ஆரம்பித்தது.
            ஒருநாள் அந்த வழியாக வந்த விறகுவெட்டி தன் கையில் வைத்திருந்த அரிவாளை மரக்கிளையில் தொங்க விட்டார்.
       வெயிலாக இருந்ததால் மரத்து நிழலில் அமர்ந்து அப்படியே தூங்கிப் போனார்.
  எங்கிருந்தோ குதித்து குதித்து வந்த குரங்கு விறகு வெட்டிக்கு வேடிக்கை காட்ட மரக்கிளையில் ஏறி ஒற்றைக் கையால் ஊஞ்சலாட்டம் போட்டது.
        அங்குமிங்கும் தாவியது. ஆ..ஆ கத்தியபடி கீழே விழுந்தது குரங்கு.
         குரங்கின் வால் அரிவாளில் மாட்டிக் கொண்டது.
வலி தாங்க முடியாமல் கத்தியபடி அங்குமிங்கும் ஓடியது.
         யாராவது வந்து தன் வாலில் மாட்டி இருக்கும் அரிவாளை எடுத்து விடமாட்டார்களா என்று வலியில் பரிதாபமாகப் பார்த்தது.
       குரங்கு பெயரைக் கேட்டாலே காட்டு விலங்குகள் காத தூரம் ஓடுமே.அப்படி இருக்கும்போது யார் வந்து உதவப் போகிறார்கள்?
        நடப்பவை யாவற்றையும் தொலைவில் உள்ள மரத்திலிருந்து
        பார்த்துக் கொண்டிருந்த குயில்,
        பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
        பிற்பகல் தானே வரும் 
                 என்று பாடிக் கொண்டே பறந்து சென்றது.
     
      

      


    

        
          

Comments

Popular Posts