அச்சம் தவிர்

           அச்சம் தவிர்

"அறம் செய்ய  விரும்பு "என்று தனது
ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார் 
ஔவை.

பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை
"அச்சம் தவிர் "என்று
 தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார்.
 
முதல் வரி மட்டும்தான்
தன்னம்பிக்கை கொடுக்கிறதா? 

இரண்டாம் வரியைப் பாருங்கள். 
"ஆண்மை தவறேல்"

அதாவது மன வலிமையை இழக்காதே!
இதுவும் நம்பிக்கை தரும் வரி
 இல்லையா?

அதைத் தொடர்ந்து மூன்றாவதாக
என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...

"இளைத்தல் இகழ்ச்சி"
என்கிறார்.

அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக்
கூடாதாம்..அது இகழ்வடைவதற்குக்
காரணமாக அமைந்துவிடுமாம்.
எப்படித்  தட்டி எழுப்பிக் கொண்டே
வருகிறார்.

பாரதியின் பாடல்களில்
எல்லாம் ஒரு எழுப்புதல் இருக்கும்.

இந்த ஒரு துள்ளல் உணர்வு
இருப்பதுதான் பாரதியின்  பாடல்களில்
நாம் கட்டுண்டு கிடப்பதற்கான
மந்திரம் என்று நினைக்கிறேன்.
 
 பாரதியின் பாடல்கள் என்றாலே
ஒரு இளமையின் துள்ளலும் 
உயிரோட்டமான உணர்வும் 
உணர்ச்சியூட்டலும்
கொண்டதாகவே இருக்கும்.
எதற்கும் அஞ்சா
துணிச்சலை வளர்த்தெடுக்க
உரமூட்டும் கருத்துக்கள்
அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும்.

இலக்கண வரம்புக்கு உட்படாமல்
புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத்
தந்தவராயிற்றே!

யாருக்கு அஞ்ச வேண்டும்?
எதற்கு அஞ்ச வேண்டும்?
என்று துணிச்சலோடு சொல்ல
வந்த கருத்தினை அள்ளி வீசியவர்.

"அச்சம் தவிர் "என்று
சொல்லும்போதே  அதில் ஒரு
கண்டிப்பும் கரிசனமும் இருப்பதை
நம்மால் உணர முடிகிறதல்லவா!

எதற்கப்பா அஞ்சி நிற்கிறாய்?
துணிந்து முன்னே வா.
எதற்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை
என்று கரம் பிடித்து இழுப்பது போன்ற
ஒரு உணர்வு ஏற்படுகிறதல்லவா!

இதுதாங்க பாரதி.

அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே !

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து
நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!

துச்சமாக எண்ணி நம்மைத்
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!

...... ......

உச்சிமீது வானிடிந்து 
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே!

என்று  ஓங்கி உச்சந்தலையில்
அறைந்ததுபோல் அச்சம் என்னடா
அச்சம்... என்று சொன்னவரல்லவா பாரதி.!

எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை ஊட்டும்
வரிகளைத் தந்த நம்பிக்கை
நாயகன் பாரதி.!

பாரதியின் பாடல்களுக்குள் 
ஏதோ ஒரு சக்தி ஒளிந்திருக்கும்.
நம் உறக்கத்தைக் கலைக்கும்.
உறங்கவிடாமல் தட்டி எழுப்பும்.

அந்தத் தட்டி எழுப்புதலோடு
 புதிய ஆத்திசூடியின் முதல் வரியை 
முத்தாய்ப்பாய்
"அச்சம் தவிர்."
என்று வைத்துள்ளார்.

ஏன் அச்சம் கூடாது?

அஞ்சினால் என்ன ஆகும்?

"நெஞ்சு பொறுக்குதில்லையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை 
நினைத்துவிட்டால்...

அஞ்சி அஞ்சி சாவார் -இவர்
அஞ்சாத பொருளில்லை
அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்
அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்....."

இப்படி உன்னை அச்சப்படுத்த
ஆயிரம் பேர் கங்கணம் கட்டிக்
திரிவர். ஆனால் நீ
எதற்கும் அஞ்சாதே
என்று சொல்லித் தந்தவர் பாரதி.


உளி தன்மீது விழுந்துவிடுமோ என்று
அச்சப்பட்டு ஒதுங்கி இருந்தால்
கல் சிலையாக முடியுமா?இல்லை
சிற்பமாகத்தான் ஆக முடியுமா?

உலையிலிட்டு உருக்கி 
உருக்குலைத்து விடுவார்களோ 
என்ற அச்சத்தால்
உலோகம் மண்ணுக்குள்ளேயே
ஒளிந்து
இருந்துகொண்டால் ...
ஆயுதமாக முடியுமா?
நல்ல அலங்கார ஆபரணமாகத்தான்
அணியம் செய்ய முடியுமா?

பறந்தால் வீழ்ந்து விடுவேனோ
என்ற அச்சம் பறவைகளிடம்
வந்து ஒட்டிக் கொண்டால் ...
காடெல்லாம் இரையிருந்தாலும்
இரைப்பையை நிறைக்கத்தான் முடியுமா?
எழுந்து பறக்கத்தான் முடியுமா?

பாறை குறுக்கே வந்து
நிற்கிறதே ,
என்னால் எப்படி 
பாறையோடு முட்டிமோத முடியும்?
என்று பம்பி நின்று கொண்டிருந்தால் ...
அருவியால் வீழத்தான் முடியுமா?
ஆறாக நடைபோடத்தான் முடியுமா?

மேகம் வந்து மூடாங்கு போட்டு
என் ஒளியை மறைக்கிறதே
என்று நிலவு தயங்கி நின்றுவிட்டால்...
எப்படி இருக்கும்?

அச்சமில்லா பயணம்தான்
நம்மை அடுத்த கட்டத்திற்கு
நகர்த்திக்கொண்டு செல்லும்.

வீழ்ந்து விடுவேனோ என்ற
அச்சம் இருந்தால் குழந்தையால்
முதல் அடிகூட எடுத்து 
வைக்க முடியாது.

அம்மா தூக்குவார்கள்...
அப்பா தூக்குவார்கள் ....என்று
முயற்சி செய்யாமல் அங்கேயே
நின்று கொண்டிருக்கும்.

தண்ணீரில் இறங்க
அச்சப்பட்டால் எப்படி நீச்சல் பழகுவது?

வாகனம் ஓட்டினால் விபத்து
ஏற்பட்டுவிடும்
என்று அஞ்சிக் கொண்டே இருந்தால்
காலத்திற்கும் வாகனம் ஓட்டிப்
பழக முடியாதல்லவா!

தோற்றுவிடுவோமோ என்ற அச்சம்
மனதில் குடி கொண்டு விட்டால் ...
எப்போதுதான் வெற்றிக்கனியை
ருசிப்பது?
துணிந்து செயலில் இறங்கினால்தானே
வெற்றி கிடைக்கும்.

இவை எல்லாவற்றையும் மனதில்
வைத்துத்தான்
தன்னம்பிக்கையோடு நம்மை
அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல

"அச்சம் தவிர்"
என்கிறார் பாரதி.

உன் முன்னேற்றத்திற்கான முதல்
தடையே உனக்குள் குடிகொண்டிருக்கும் 
அச்சம்தான்.

அந்த அச்சத்தைத் தூக்கி
வெளியே வீசு.
அடுத்து நடப்பவை எல்லாம்
நல்லதாகவே நடக்கும்
என்கிறார் பாரதி.

"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா...."
என்று நம்மையே நமக்கு
அடையாளம் காட்டியவர் கண்ணதாசன்.

அஞ்சாமையே நம்
அடையாளமாக இருக்கும் போது 
நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

அதனால்தான் துணிச்சலோடு
நம்மை முன்னெடுத்துச்
செல்ல அச்சம் தவிர்
என்ற முதல் வரியை 
நம்முன் வைத்தார் பாரதி.

பாரதியே சொல்லிவிட்டார்.
இனி எதற்கு அச்சம்?

அச்சம் தவிர்ப்போம்.
தடைகளைத் தகர்ப்போம்.
தன்னம்பிக்கையோடு முன் செல்வோம்!








Comments

  1. அச்சம் மனிதனிடம் உள்ள ஒரு அடிப்படை உணர்ச்சி தான்.அச்சத்தை தவிர்க்க பதிவிட்ட பாரதியாரின் ஆத்திச்சூடி மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts