சொற்பொருள் பின்வருநிலை அணி
பின்வரு நிலை அணி
ஒரு செய்யுளில் முன்னர் வந்த
சொல்லோ பொருளோ பின்னர்ப்
பல இடங்களில் வந்தால் அது
பின்வரு நிலை அணி எனப்படும்.
"முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்
பின்வரும் என்னில் பின்வருநிலை நிலையே"
என்கிறது தண்டியலங்காரம் என்னும்
இலக்கண நூல்.
பின்வரு நிலை அணி மூன்று வகைப்படும்.
1. சொல் பின்வருநிலை அணி
2. பொருள் பின்வருநிலை அணி
3. சொற்பொருள் பின்வருநிலை அணி
1. சொல் பின்வருநிலை அணி:
ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல் பின்னர்ப்
பல இடங்களில் வந்தால் அது சொல்
பின்வருநிலை அணி
எனப்படும். சொல் பலமுறை வரும்.
ஆனால் ஒரே பொருளில் வராது.
பொருள் வெவ்வேறாக இருக்கும்.
எடுத்துக்காட்டு:
"குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்"
- திருக்குறள்
குன்று போல உயர்ந்த பெருமை உடையவர்கள்
குறுகிய அளவு இழிச்செயலைச்
செய்துவிட்டாலும் அவர்கள் பெருமை குறைந்து
விடும்.
குன்று என்பது மலை என்ற
பொருளிலும் குறுகிய
என்ற பொருளிலும்
குறைந்துபோகும்
என்ற பொருளிலும் வந்துள்ளமை
காண்க.
சொல் ஒன்று. பொருள் இடத்திற்கு
ஏற்ப வேறுபடுகிறது.
இதுதான் சொல் பின்வரு நிலை
அணி.
2. பொருள் பின்வருநிலை அணி:
ஒரு பாடலில் முதலில் வந்த சொல்
பின்னர்ப் பல இடங்களில் வெவ் வேறு
சொற்களில் முதலில் வந்த அதே
பொருளில் வருவது
பொருள் பின்வருநிலை அணி
எனப்படும்.
"அவிழ்த்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்தன கருவிளை
கொண்டன காந்தள் குலை"
இந்தத் தண்டியலங்கார விளக்கப் பாடலை
வாசியுங்கள்.
இந்தப் பாடலில்
அவிழ்த்தன
அலர்ந்தன
நெகிழ்ந்தன
இதழ் விண்டன
விரிந்தன
விளை கொண்டன
ஆகிய சொற்கள் அனைத்தும்
மலர்ந்தன என்ற
ஒரே பொருளில் வந்துள்ளன.
சொல் மாறி இருக்கிறது. ஆனால்
பொருள் ஒன்றுதான்.
பல சொற்கள் .ஒரே பொருள்.
இது பொருள் பின்வரு
நிலை அணியாகும்.
3. சொற்பொருள் பின்வரு நிலையணி:
ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல்
அதே பொருளில் பின்னர்ப் பல இடங்களில்
வந்தால் சொற்பொருள் பின்வரு நிலையணி
எனப்படும்.
"வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்"
வைகல் என்றால் நாள் என்ற
பொருளில் பலமுறை வந்துள்ளது.
நாள்தோறும் நாள் கழித்து வருவதைக்
கண்கூடாகப் பார்த்திருந்தும் அதனை
அறியாதவராய் தம் வாழ்நாளில் ஒரு நாள் அப்படியே கழிவதை
உணராமல் அந்தநாள் நிலையாக
இருக்கிறது என்று நினைத்து
இன்புற்றுவர்.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
என்ற குறளில் செல்வம் என்ற சொல்
அதே பொருளில் பலமுறை வந்துள்ளது.
"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு"
விளக்கு என்ற சொல் ஒரே பொருளில்
பலமுறை வந்துள்ளமையால் இது
சொற்பொருள் பின்வருநிலை அணி
எனப்படும்.
சொல்லும் ஒன்று .பொருளும் ஒன்று.
மறுபடியும் மறுபடியும் ஒரே சொல்
அதே பொருளில் வந்துள்ளது.
இது சொற்பொருள் பின்வரும்
நிலை அணி எனப்படும்.
எளிதாக மனதில் பதிய
வைத்துக் கொள்ள ஓர்
எளிய முறை:
1.சொல்பின்வரு நிலை அணி:
சொல் ஒன்று . பொருள் பல.
2. பொருள் பின்வருநிலையணி:
பொருள் ஒன்று. சொற்கள் பல
3.சொற்பொருள் பின்வருநிலை நிலை அணி:
ஒரே சொல் .ஒரே பொருள்
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்காக மேலும்
சில பாடல்கள்:
"சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்"
-சொற்பொருள்பின்வரு நிலை அணி.
"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை"
- சொல் பின்வரு நிலை அணி
"சொல்லுக சொல்லைப் பிரிதொரு சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
- சொற்பொருள் பின்வருநிலை அணி
"உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்"
-. சொல் பின்வருநிலை அணி
Comments
Post a Comment