பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப்  பாராட்டு மடல்


தண்டமிழ் வண்டலைப்  பூங்காடுடை
தென்தமிழக எல்லை நகர்உறை இணையர்
ஜெயசிங் முத்தாபரணம் மெத்தைமடியில்
சில்லென்று பூத்திருந்த செந்தாமரை சாந்தி!

கொழுந்தன் ஞானராஜன் கைத்தலம் பற்றி-நீ
கோநகர் மும்பைக்குச் சீராய்வந்த நற்றமிழோ!
கோவின்  குடிகாத்து நிற்கும்  குலமகளோ
கோமகனாய் பிள்ளை இருவர் வாய்த்ததுன் வரமோ!!


கற்றவர் போற்றிடும் நற்றிணையோ- நீ
கற்பவர் தொழுதிடும் நற்றுணையோ!
நற்பெயர் நிறை நல்மதிதான் உனதோ
நறுமலர் மொய்த்த நந்தவனம் நீயோ!

விண்மகள் ஈன்ற தண்ணிலவோ - நீ
மண்மகள் மீட்டும் பண்ணிசையோ
க(ண்)ணவன் கொண்டாடும் பேரழகோ
மண்டுநலன் கொண்ட பேருனக்கானதுவோ!


கற்பனை பெருகும் சொற்றுணையோ - நீ
நற்றமிழ் வழங்க வந்த உயர்திணையோ
தெற்றில்லா மொழி பழகு நாவணியோ
மட்டிலாக்கல்வி தருதல்தான்  நின்பேரறமோ !


பிரைட் பள்ளியில் அறப்பணி ஆண்டு ஐயாறு-நீ
பொய்யாது பாய்ந்த பைந்தமிழ்ப் பாலாறு
தொய்யாது   நடத்திய உன் சொல்லாறு
மெய்யாகச் சொல்லி நிற்கும் தமிழ்வரலாறு!

ஓய்விலும் நின்பணி தொடர்ந்திடல் வேண்டும் -நீ
ஓயாது இறைப்பணி ஆற்றிடல் வேண்டும்
எண்ணும் செயல்யாவும் கைகூடல் வேண்டும்
நண்ணும் வண்ணம் வாழ்ந்திட வேண்டும்!


களிப்புகள் பெருகி செழிப்பினில் திளைத்து
நன்றெனப்  புகழுனை அணிசெய வேண்டும்
எஞ்சிய நாட்கள் இனித்திட வேண்டும் -காசினி
வந்தனை தந்துனை வாழ்ந்திட வேண்டும்!
                                                       
                                      - செல்வபாய் ஜெயராஜ்

Comments