மாதம் மும்மாரி பொழிகிறதா?

 மாதம் மும்மாரி பொழிகிறதா?
அரசர்  ஒருவர் நாட்டை நல்லமுறையில்
ஆட்சி செய்து வந்தார்.ஒவ்வொரு நாளும்
நாடு எப்படி இருக்கிறது?
நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா?
என்று கரிசனமாக 
கேட்டுவிட்டுத்தான் தன் 
அலுவல்களையே தொடங்குவார்.

அன்றும் அப்படித்தான். 
அரசவைக்கு வந்தார்
மன்னர்.

அரசவை கூடியது. 
"நாடு எப்படி இருக்கிறது ?
என்று அமைச்சரிடம் கேட்டார்.

அதற்கு அமைச்சர்,
"மன்னா!வணக்கம்.
நாடு நன்றாக இருக்கிறது .
மாதம் மும்மாரி பெய்வதால்
நாட்டு மக்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் "என்றார் பெருமையாக.

"மாரி கேள்விப்பட்டிருக்கிறேன் .
ஒரு மாறி...  உருமாறி கேள்விப்பட்டிருக்கிறேன்.
பொன்மாரி, புகழ்மாரி, அருள்மாரி என்று
புலவர்கள் வாயால் புகழ்மொழி
மாதிரி மாதிரியாகக் கேட்டிருக்கிறேன்.
இது என்ன புது மாதிரியான
மும்மாரி? "என்று கேட்டார் மன்னர்.

மன்னரிடமிருந்து இந்தக் கேள்வியை
எதிர்பார்க்காத அமைச்சருக்கு
ஒரு மாதிரி ஆகிவிட்டது.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"சும்மா ....நல்ல மழை பெய்கிறது என்பதைத்தான்
இந்த மாதிரி  சொல்லி வைத்தேன் "என்று
ஏதோ சொல்லி மழுப்பினார் அமைச்சர்.

"பொருளில்லாச் சொற்களை எல்லாம்
சொல்லி அவை நேரத்தை 
வீணடிக்க வேண்டாம்"
கடிந்து கொண்டார் மன்னர்.

தேவையில்லாமல் பேசிவிட்டோமோ என்று
தலை கவிழ்ந்து நின்றார் அமைச்சர்.

அரசவை புலவர் ,
"மன்னா!நான் இதற்குப் பதில்
சொல்லலாமா?"என்று அவையில்,
பேச அனுமதி கேட்டார் .

"ஓ... தாராளமாக....
தங்களுக்குத் தெரிந்த கருத்தைத்
தாராளமாகப் பேசலாம்"அனுமதி
அளித்தார் மன்னர்.

"அமைச்சர் ஏதும் தவறாகப் சொல்லிவிடவில்லையே!
நாட்டில் இப்போது மும்மாரி தான்
பெய்துகொண்டிருக்கிறது. வேண்டும் என்றால்
நீங்கள் ஆய்வு செய்து கொள்ளலாம்" என்றார்
பணிவாக.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஒரே மழைதானே பெய்து கொண்டிருக்கிறது.
அதை எப்படி நீர் மும்மாரி என்று
சொல்கிறீர்? 
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை"
என்றுதானே வள்ளுவர் கூறியிருக்கிறார்."
என்றார் மன்னர்.


"மாரி ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்து
இல்லை.ஆனால் அந்த மாரி எனப்படுகின்ற
மழை பெய்வற்கான காரணம் என்ன?"

"கார்மேகம் இருந்தால் மழை பெய்யும்.
வேறு என்ன காரணம் இருந்துவிடக்
போகிறது.?"

"அதுதான் இல்லை என்கிறேன்.
மழை பெய்வதற்கு கார்மேகம் மட்டும்.
காரணம் அல்ல. நீங்களும் ஒரு காரணம்."

"நானா ....நானா....நான் காரணமா?
 மழை பெய்வதற்கு நான் எப்படி 
 காரணமாக இருக்க
முடியும்?"

"நீங்கள் நல்லாட்சி செய்கிறீர்கள் இல்லையா?"

"என் ஆட்சி நல்லாட்சியா இல்லையா என்பதை 
மக்கள் தானே தீர்மானிக்க வேண்டும்."

"உங்கள் ஆட்சி நல்லாட்சி என்பதற்கு
மாரி தான் சாட்சி"

"ஒன்றுமே புரியவில்லை"


"புரியும்படி கூறுகிறேன் கேளுங்கள்.

"வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே"

என்ற விவேக சிந்தாமணி பாடல் கூறுவது
தாங்கள் அறியாததா என்ன?

அதாவது வேதங்களை ஓதும் கற்றறிந்த
வேதியர்க்கு ஒரு மழை பெய்கிறது.

 நீதி நெறிபிறழாத நல்லாட்சி
செய்யும் மன்னனுக்கு இன்னொரு மழை.

 பெண்கள் கற்புடையவர்களாக 
 வாழ்ந்து கொண்டிருந்தால் அதற்கொரு மழை.

ஆக இந்த மூன்றும் நல்லமுறையில்
நடந்து கொண்டிருப்பதால் நாட்டில்
மும்மாரி பெய்கிறது" என்று அமைச்சர் 
 கூறினார் என்றார் புலவர்.

"இதையா கூறினீர்கள்?" என்பதுபோல 
அமைச்சரைப் பார்த்தார் மன்னர்.

"ஆம் மன்னா....ஆமாம் மன்னா...."
என்று சொன்னபடியே தக்க
நேரத்தில் என்னைக் காப்பாற்றினீர்களே
என்று நன்றியோடு
புலவரைப் பார்த்தார் அமைச்சர்.


இப்போது மும்மாரி என்ற சொல் 
எதனால் பயன்படுத்தப்படுகிறது?
மும்மாரி பொழிய
காரணம் என்ன? என்பதை
தாங்களும் அறிந்து கொண்டிருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்.

வேதம் ஓதும் வேதியர்க்கு ஒரு மழை என்றால்
நாட்டில் இறைவனுக்குச் செய்கின்ற
பூசை எல்லாம் சிறப்பாக நடைபெற்று வந்தால்
மழை செய்யுமாம்.
அதனால்தான்
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை
என்று சொல்லப்பட்டுள்ளது.
நம் நாட்டில் இறைவனுக்குப் செய்ய வேண்டிய
பூசைகள் நல்லபடியாக
நடிப்பதற்காக ஒரு மழை பெய்கிறது.

இரண்டாவதாக நீதிநெறி நின்று நல்லாட்சி செய்யும்
மன்னன் நீங்கள் இருருப்பதால்
இன்னொரு மழை பெய்கிறது.

மூன்றாவதாக நம் நாட்டுப் பெண்கள்
எல்லாம் கற்புடைய வர்கள்.
அதற்காகவும் இன்னொரு மழை பெய்கிறது.
ஆக மொத்தம் மூன்று மழை
பொழிகிறதல்லவா?

அதைத்தான் அமைச்சர் மாதம் மும்மாரி
பெய்கிறது என்று கூறினார் என்றார்.
மன்னன் முகம் மகிழ்ச்சியில் 
அன்றலர்ந்த மலராய்க் காட்சி தந்தது.

இதைத்தாங்க மாதம் மும்மாரி
என்பார்கள்.

மாதம் மும்மாரி பொழியட்டும்.
நல்வாழ்வு மலரட்டும்!


ஒரு

Comments

  1. மும்மாரிக்கு தெளிவான விளக்கம் தந்து பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts