அறம் செய்ய விரும்பு

அறம் செய்ய விரும்பு

அறம் செய்ய விரும்பு என்று
நான் தொடங்கி விட்டுவிட்டால் போதும்.
அறம் செய்ய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்பு கரவேல் 
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்....
.... ... ....
என்று கடகடவென்று ஒப்பித்து
விடுவீர்கள்.

நானும் உங்கள் ரகம்தான்.

ஆத்திசூடிக்கும்
நமக்கும் பெரிய நெருக்கம் உண்டு.
ஆத்திசூடியை நெஞ்சிலேயே
குடி வைத்திருப்போம்.
நேரம் வரும்போதெல்லாம் 
சொல்லி சொல்லி மகிழ்வோம்.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது
ஒருநாள் பள்ளிக்கு ஆய்வாளர் 
வந்திருந்தார்.
மனப்பாடச் செய்யுள் 
தெரியுமா ?என்று கேட்டார்.
எந்தப் பாடல் என்ற கேள்வி
எதுவுமில்லாமல் 
"அறம் செய்ய‌விரும்பு
ஆறுவது சினம்....
 என்று ஒட்டு மொத்த
வகுப்பும் உயிர் வருக்க 
ஆத்திசூடி முழுமையையும்
ஒரே மூச்சில் சொல்லி முடித்தோம்.
இடையில் நிறுத்தவே இல்லை.
ஆய்வாளர் பாராட்டினார்.

அடுத்து அறம் செய்ய
விரும்பு என்றால் என்ன என்று
தெரியுமா?
 என்று கேட்டார் .
அவ்வளவுதான்.
ஒருத்தரும் வாயைத் திறக்கவில்லை.
திருதிரு என்று விழித்துவிட்டு
ஆசிரியரையே பார்த்தோம்.
ஆசிரியர் சொல்லிக் கொடுக்கவில்லையா?
 என்று ஆசிரியரைக் கேள்வி கேட்க
ஆரம்பித்தார் ஆய்வாளர்.

எங்கள் ஆசிரியர் சொல்லிக்
கொடுத்திருப்பார்கள்.
நாங்கள் கவனிக்கவில்லை.
இதுதான் உண்மை.

புத்தகத்தில்
இருக்கும் எதைக் கேட்டாலும்
டாண்டாணென்று... பதில்
சொல்லுவோம்.
புத்தகத்தில் இல்லாத 
பொருளைக் கேட்டால்....

கவனமில்லாமல் படித்த காலம்.
தெரிந்துகொள்ள வேண்டும் என்ற 
ஆர்வம் இல்லாத காலம்.

அதன் பொருள் 
பற்றி எல்லாம் நாங்கள்
ஏன் கவலைப்பட வேண்டும்?
என்ற மனநிலையில்
இருந்த காலம்.

இப்போதும் அப்படி
இருக்க முடியுமா?

யாராவது அறம் என்றால்
என்ன என்று கேட்டால்?

பொருள் தெரிந்து தானே 
ஆக வேண்டும்.
வாருங்கள் . தெரிந்து கொள்வோம்.

"அறம் செய்ய விரும்பு"

அறம் என்றால் என்ன ?

அறம் என்றால் தருமம் என்பீர்கள்.

தருமம் செய்வதுதான் அறம் என்று
நினைத்து வைத்திருப்பீர்கள்.

அறம் என்றால் நெறி.
அதாவது வாழ்வதற்கான
ஒரு வழிமுறை.
அதுதான் அறம்.
வாழ்வதற்காக நெறிமுறை எப்படி
அறமாகலாம் ? என்று கேட்கலாம்.

வாழ்வு ஒழுக்கமுடையதாக 
நீதி நெறிக்கு உட்பட்டதாக
நல்வழி செல்வதாக இருக்க வேண்டும்.

அதனால்தான் வாழ்க்கையே அறம்தான்
என்று சொல்வதற்காக
அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை 
என்கிறார் வள்ளுவர்.

எது அறம்?

" அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"

பொறாமை, பேராசை,
கோபம், கடுஞ்சொல் இல்லாத
வாழ்க்கை வாழ்தல்தான்
அறம் என்பது
அறம் பற்றிய வள்ளுவரின் கருத்து.

தனிமனித நடத்தை ஒழுக்கம் கொண்டதாக
இருந்தால் அது மாண்பு கொண்டதாக இருக்கும்.
வாழ்க்கை என்றால் அது அனைவராலும் போற்றப்படும்
வகையில் இருக்க வேண்டும்.

 அறம் என்ற நற்பண்பு ஒருவனிடம் 
எப்போது வந்து சேரும்?


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

மனத்துக்கண் குற்றமற்றவனாக
இருந்தால் அவனிடம் அறம் 
வந்து குடியேறிவிடும் .மற்றவை
எல்லாம் தேவையில்லாத ஒன்றுதான்
என்கிறார் வள்ளுவர்.

இப்போது ஒருவனிடம் அறம் இல்லை
என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

அதற்கும் வள்ளுவரே பதிலளிக்கிறார்.

"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும் "

அறம் செய்கிறேன் அறம் செய்கிறேன்
என்று பேசுகிற ஒருவன் உண்மையிலேயே
அறம் செய்பவன் அல்லன் என்பது
அவன்  புறம்பேசும் பண்பால் தெரிந்து
கொள்ள முடியுமாம்.

முன்னால் ஒன்று முதுகுக்குப் பின்னால்
ஒன்று என்று மாற்றி மாற்றிப்
பேசும் பண்பு  அறம் செய்கிறவனிடம் 
இருக்கவே இருக்காது என்கிறார்
வள்ளுவர்.

புறம் பேசுகிறவன் அறம் தவறுகிறவன்
ஆகிறான்.


அறம் எப்போது செய்ய வேண்டும்?

இதற்கும் வள்ளுவர் பதில்
சொல்கிறார் .கேளுங்கள்.

"அன்றறிவா மென்னா தறம் செய்கமற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை "

என்கிறார் .
அதாவது காலம் இருக்கிறது . பிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்று எண்ணாது இன்றே
அறச் செயல்களைச் செய்வீராக.
அந்த அறம்தான் நாம் இறந்த பின்னரும்
அழியாப் புகழாக நம்மோடு 
நிலைத்து நிற்கும் என்கிறார்
வள்ளுவர்.


இதைத்தான் நாலடியாரும்,

"இன்றுகொல் அன்றுகொல்
என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது
கூற்றமென்று எண்ணி

ஒருவுமின் தீயவை
ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்"

என்கிறார்.

"அன்று இன்று என்று என்று நினைக்காதபடி
நம் பின்னாலேயே காலன் நின்று
கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து
தீயவற்றை நீக்கி
இன்றே  அறம் செய்க "
என்கிறார் நாலடியார்.

காலன் பின்னாலேயே வந்து
கொண்டிருக்கிறான்.
எந்த நேரமும் எதுவும் நிகழலாம்.
இருக்கும்போதே அறத்தைச்
செய்யுங்கள். இம்மையிலும்
மறுமையிலும் நாம் செய்த
அறம் மட்டும் தான் நம் கூட
வந்து நிற்கும்.
பணமோ பொருளோ எதுவும்
நிற்காது என்பது நாலடியாரின்
கருத்து.

கடைசியாக அறத்தை எப்படிச்
செய்ய வேண்டும்? 
என்று ஔவையிடம் 
கேட்டால்...

"அறம் விருப்பத்தோடு செய்யப்பட
வேண்டும்.
நான்குபேர் பார்க்க வேண்டும் என்று
பெருமைக்காக செய்வதற்குப் பெயர்
அறமல்ல.
உள்ளன்போடு செய்யப்பட
வேண்டும்" என்கிறார்  ஔவை.

அதனால்தான்,
அறம் செய்ய விரும்ப வேண்டும்.
அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் .
அறக்காரியங்கள் செய்ய வேண்டும்.
வாழ்வின் அடித்தளமே 
அறத்தோடு எழுப்பப்பட
வேண்டும்.
அதுவும் விருப்பத்தோடு
நடைபெற வேண்டும் என்பதற்காக
ஆத்திசூடியின்
முதல் வரியையே
"அறம் செய்ய விரும்பு"
என்று முத்தாய்ப்பாய்
தொடங்கியிருக்கிறார் ஔவை .

அறம் செய்யுங்கள்.அதுவும்
இன்றே செய்யுங்கள்.
அறத்தை விருப்பத்தோடு செய்யுங்கள்.
அருமையான கருத்து இல்லையா?


"அறம் செய்ய விரும்பு"





Comments

Post a Comment

Popular Posts