வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்

     வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்


வஞ்சிப்பா  என்பது தமிழ்
யாப்பிலக்கணம் கூறும் நால்வகைப்
பாக்களுள் ஒன்றாகும்.

வஞ்சிப்பாவில்  இரண்டடி முதல்
பாடுவோர் விருப்பத்திற்கு ஏற்ப
எத்தனை அடிகளும் வரலாம்.


சீர் :

வஞ்சிப்பாவில் ஓர் அடியில்
இரண்டு அல்லது மூன்று சீர்களே வரும்.

வஞ்சிப்பாவில் நான்கு சீர்கள்
வருதல் இல்லை என்பதை நினைவில்
கொள்க.

வஞ்சிப்பாவிற்கு உரிய சீர்
கனிச்சீராகும்.

மூவசைச் சீரில் நிரையை 
இறுதியாகக் கொண்டு
முடியும் சீர்கள் கனிச்சீர் எனப்படும்.


நேர் நேர் நிரை = தேமாங்கனி
நிரை நேர் நிரை = புளிமாங்கனி
நேர் நிரை நிரை = கருவிளங்கனி
நிரை நிரை நிரை =கூவிளங்கனி 


ஆகிய நான்கு கனிச்சீர்களும்
வஞ்சிப்பாவிற்கு உரியவை.

இச்சீர் வஞ்சிப்பாவுக்கு உரியதால்
வஞ்சிவுரிச்சீர் எனப்படும்.


தளை : 

வஞ்சிப்பாவிற்கு உரிய தளைகள் இரண்டு.

1.  ஒன்றிய வஞ்சித் தளை.
2. ஒன்றா வஞ்சித்தளை


1. ஒன்றிய வஞ்சித்தளை

கனிச்சீர்களின் முன் நிரையில் தொடங்கும்
சீர் வந்தால் அது ஒன்றிய
வஞ்சித்தளை எனப்படும்.

2. ஒன்றா வஞ்சித் தளை:

கனிச்சீர்களின் முன் நேரில் தொடங்கும்
சீர் வந்தால் அது ஒன்றா
வஞ்சித்தளை எனப்படும்.

இந்த இரண்டு தளைகளும் வஞ்சிப்பாவிற்கே
உரியவை.

அடி :

வஞ்சிப்பா குறளடியால் அமையும்.
சில இடங்களில் மூன்றடிகள் கொண்ட
சிந்தடியும் வரலாம்.

ஓசை:

வஞ்சிப்பாவின் ஓசை தூங்கலோசையாகும்.

தூங்கலோசையாவது 
முன்னும்பின்னும் செல்லும் ஒரு
ஊஞ்சல் போல் ஒரே ஒழுங்கில்
 இருக்கும்.

எடுத்துக்காட்டு:

"வளையாடு மலர்சுனை நீரினிடை
வளையாடு மங்கைய ரன்னமென
விளையாடுவ ரோடுவர் கூடுவர்பின்
விளையாடுவர் பைங்கிளி மேவுறவே"

இந்தப் பாடலை வாசியுங்கள்.
எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல்
இறுதிவரை ஒரே ஒழுங்கிலேயே
செல்வது புரியும்.
இதனையே தூங்கலோசை என்பர்.

இந்தத் தூங்கலோசையும் 
மூன்று வகைப்படும்.

1.ஒன்றிய வஞ்சித்தளைகளை மட்டும்
கொண்டிருக்கும் ஏந்திசை தூங்கலோசை.

கனியில் முடிந்து நிரையிசையில் தொடங்கினால்
அது ஒன்றிய வஞ்சித் தளையாகும்.  

2. ஒன்றா வஞ்சித்தளைகளைக் கொண்டிருக்கும்
 அகவல் தூங்கலோசை.
 
 கனியில் முடிந்து நேரசையில்
 தொடங்கினால் அது ஒன்றா வஞ்சித்
 தளை 

3. பல தளைகள் விரவி வரும் பிரிந்திசைத்
  தூங்கலோசை.


வஞ்சிப்பா வகைகள்:

வஞ்சிப்பா இரண்டு வகைப்படும்.

1.  குறளடி வஞ்சிப்பா
2. சிந்தடி வஞ்சிப்பா


குறளடி வஞ்சிப்பா :

குறளடி என்பது இரண்டு சீர்களைக்
கொண்ட அடியினைப் குறிக்கும்.
குறளடி வஞ்சிப்பாவில் ஒவ்வொரு அடியிலும்
இரண்டு சீர்கள் மட்டுமே இருக்கும்.

எடுத்துக்காட்டு:

"மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
எனவாங்கு
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குதும்
மகிழ்ந்தே"


குறளடிகளால் அமைந்து,தனிச்சொல்லுடன்
ஆசிரிய சுரிதகம் கொண்டு முடிவது
குறளடி வஞ்சிப்பா ஆகும்.

சுரிதகம் என்றால் கடைசியில் 
சுருங்கி முடியும் உறுப்பாகும்.

சிந்தடி வஞ்சிப்பா:

சிந்தடி என்பது மூன்று
சீர்களால் அமைந்த அடியைக் குறிக்கும்.
எனவே மூன்று சீர்களால் அமைந்த
அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா
சிந்தடி வஞ்சிப்பா எனப்படும்.

"பொன்பூக்குந்  தாமரையின்  பூநிழலில்
இன்பூக்கும்  இனச்சுரும்பர்  இசைபாட
அச்சுரும்பர்
இன்னிசைகேட் டாங்கொருசார் 
கச்சணிமார் அயற்வின்றிக் களைகளையும்
வளமார்
பழனம் கதிரப் படிநெல்
கழனி விளையும் காவிரி நாடே"

சிந்தடிகளால் அமைந்து தனிச்சொல்லும்
ஆசிரிய சுரிதகமும் கொண்டு முடிவது
சிந்தடி வஞ்சிப்பா ஆகும்.

ஆசிரியப்பா இலக்கணம் பெற்று வரும்
இறுதி அடிகளுக்கு ஆசிரிய சுரிதகம்
என்று பெயர்.

நினைவில் கொள்க:

1.சீர் - வஞ்சியுரிச்சீர் எனப்படும் 
             கனிச்சீர்கள் வரும்.

2.தளை - ஒன்றிய வஞ்சித்தளை,
                  ஒன்றா வஞ்சித்தளை
 
 3. அடி - குறளடியும் சிந்தடியும்

5.  ஓசை - தூங்கலோசை



Comments