இரங்கற்பா

இரங்கற்பா


தணியாத் தமிழே!

மணியாம் எழுத்தே!

பொறுமையின் சிகரமே!

உழைப்பின் உயர்வே!

பேச்சினில் கனிவே!

பேரன்பின் வெள்ளமே!

தமிழின் அடையாளமே

தகைசால் தமிழனே

நல்லாசிரியனே!

என்னவென்று அழைப்பேன்

யாரை முன்னிருத்தி

இனி இப்படி விளிப்பேன்?தமிழோடு நின்றன் காதல்

தணியும் முன்னே

தணியாத் தாகம் கொண்டு

கூற்றுவன் நின்னுயிர் 

பருகினனோ?

அயலக தமிழர் தினக் 

கொண்டாட்டத்திற்குச்

 சென்று வந்த

 வாசம் மாறும் முன்னே

வாரியணைத்துக் கொண்டு 

துள்ளி வந்த காலன்

தூக்கிச் சென்றனனோ?


கூற்றுவனுக்குத் 

தமிழ்க்கணக்கு

தெரிந்திருக்கவில்லை

தெரிந்திருந்தால்...

எழுதி முடிக்கப்படா

முத்தமிழுக்கு

முடிவுரை எழுதி

பிழைக்கணக்குச் 

செய்திருப்பானோ?மாட்டேன் என்று

சொல்லி

மறுத்துரைக்கும்

மொழி பயில 

மறந்தனையோ

அதனால்தான் 

மாற்றான் வந்து 

அழைத்தபோதும்

மறுப்புரைக்காது 

கூற்றானுடன் 

கூட்டாகிக்

கூடியுடன் நடந்தனையோ?வேண்டும் எமக்கு 

உம் தொண்டு

என்ற ஏக்கத்தோடு

தமிழ் பள்ளிகள்

ஏங்கித் தவிக்கின்றன

மாநகராட்சி 

கட்டிடங்கள் எங்கும்

கண்ணீர்ச் சுவடுகளால்

எம்மை எழுத  

வைத்து கண்மூடித்

திறக்குமுன்னே

காணாமல் போனீரோ?கூற்றுவனே!

உன்னை யொன்று கேட்கிறேன்

தமிழின் அருமை தெரியாது

பெரும் பிழை 

செய்துவிட்டாய்

அருமை தெரிந்திருந்தால்

ஆறுமுகம் பக்கம்

நெருங்கியிருக்க மாட்டாய்

தமிழைக் கற்றுவிடு 

இல்லை தமிழருக்கு

எதிராகப் 

பிழைக்கணக்கு

எழுதுவதை இத்தோடு 

நிறுத்திவிடு!


பிறர் துன்பம் 

பொறாப் பெருமானே !

இப்பெருந் துன்பம்

எமக்குத் தந்து 

எங்கே காணாமல்

போனாய்?

காற்றாய் மாநகராட்சி

எங்கும் நிறைந்தாய்

மாற்றாய் நின்போல்

இனி யாரைக் காண்போம்?

கனத்த நினைவோடு

கண்ணீரால் கடைசி உரை 

எழுதுகிறோம் இன்று!Comments

Popular Posts