குறி வைத்த குறிகாரி

குறி வைத்த குறிகாரி


எக்கா...எக்கா..".என்றபடி ஓடி வந்தாள்

பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி.


"என்ன...என்ன...இப்படி ஓடி வருகிறாய்?..

ஏதும் பிரச்சினையா?"


"ஆமாக்கா.... நீங்க எப்போதும் சொல்வீங்க..

அதுதான் ...அதுதான் "

மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடவென்று

பேசினாள் பார்வதி.


'என்ன அதுதான்...அதுதான் என்கிறாய்.

அதுதான் என்ன என்று சொல்கிறாய்.

நிதானம்...நிதானம்....

தண்ணீர் குடிக்கிறியா?"


"தண்ணீர் குடிக்கும் மனநிலையில்

நான் இப்போது இல்லை"

வியர்க்க விறுவிறுக்க படபடப்போடு

நின்றிருந்தாள்.


"கொஞ்சம் தண்ணீர் குடி"

என்று வலுக்கட்டாயமாக தண்ணீர்

குடிக்க வைத்து

ஆசுவாசப்படுத்தினேன்.


"நீங்க சொல்வீங்க இல்லையா...நாளிதழில்

போடும் செய்திகள் எல்லாம் மக்களுக்கு

விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் என்று..

நான்தான் புரிஞ்சுக்கல..."


"புரியாமல் அப்படி என்ன பண்ணிவிட்டாய்..?"


"குறி சொல்வதுபோல் வந்து எல்லாவற்றையும்

அள்ளிகிட்டுப் போயிட்டாளே அக்கா...

நான் மோசம் போயிட்டேனே

அக்கா..நான்

மோசம் போயிட்டேனே!"



"முதல்ல இந்த ஒப்பாரியை நிறுத்து.

அல்லது பேச்சை நிறுத்து..."


"ஒப்பாரி வைக்க மாட்டேன்...ஒப்பாரி

வைக்க மாட்டேன்.

இனி அவுங்க கிட்ட எப்படி சொல்லுவேன்..

என்னன்னு சொல்லுவேன்."


"கிளம்பு..கிளம்பு..

நீ சொன்னால் கேட்க மாட்டாய்?

விவரமாக சொல்கிறாய் என்றால்  சொல்...

அல்லது நடையைக் கட்டு"


"அக்கா...மத்தியானம் எங்க வீட்டுக்காரர்

இல்லாத நேரம் பார்த்து ஒரு குறி 

சொல்லுகிறவள் வீட்டுப் பக்கம் வந்தாள்."


"அவளிடம் குறி பார்த்தியாக்கும்."


"நானும் வீட்டுல நாலு துட்டு தங்கமாட்டேங்குதே.

என்  கைராசி என்ன என்று பார்த்து 

சொல்லு என்று கையை நீட்டிப்புட்டேன்."


"நீட்டுன கையில் கிடந்த வளையலை உருவிகிட்டு

ஓடிட்டாளா....?"


"அப்படி உறுவி இருந்தால் நான் விட்டுருப்பேனா....?

இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தி

இருக்கமாட்டேன்."


"அப்புறம்...என்னாயிற்று?"


"கையைப் பார்த்ததும் அவள் உங்கள் வீட்டுல ஒரு பிரச்சினை  இருக்குன்னா."


"நீயும் ஆமா என்றகருப்ப..."


"ஒரு பிரச்சினை யா இரண்டு பிரச்சினையா?

நாளும் ஓராயிரம் பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு."


"அதப்போயி அவள்கிட்ட சொன்னியாக்கும்"


"நான் எதுக்குங்க சொல்லணும்.

அவள்தான் முதலாவதே கண்டு பிடிச்சிட்டாள"


பெரிய துப்பறியும் புலி. அவ வந்து உன் வீட்டு பிரச்சினையை கண்டுபிடிச்சகட்டா?

சும்மா போவியா..."


"நீங்க நம்ப மாட்டியன்னு எனக்குத்

தெரியும்."


"நம்புறேன் தாயி...சொல்லு."


" யாரோ செய்வினை

வச்சுருக்காங்க என்று சொன்னாள்"



"அப்புறம் அதற்குப் பரிகாரம் செய்ய

செம்பு நிறைய தண்ணீரும் ஒரு பாத்திரம்

நிறைய அரிசியும் கொண்டு வா என்று

சொன்னாளாக்கும்"


"அதை மட்டும் சொன்னால் பரவாயில்லையே.

 ஐந்நூற்று  ஒரு ரூபாய் பணமும் உடுத்திருக்கிற

 சேலையும்  கொண்டு வந்து வை .

என்று சொன்னாள்.


"நினச்சேன்.

 கடைசியில் உன்னிடமே தந்துவிடுவேன்

 என்றும் சொன்னாளாக்கும்"


அப்படித்தான் சொல்லி வைக்கப் சொன்னாக்கா 

 நானும் நம்மள புடிச்ச கிரவாதி 

இன்னையோட வீட்டை விட்டுப்

 போகட்டும் என்று எல்லாத்தையும் கொண்டு

 வச்சேன்.."

 

" கிரவாதி மட்டும் போச்சா...

மொத்தப் பொருளையும் எடுத்துட்டுப் போயிட்டாளா?"


"அதை மட்டும் எடுத்துட்டுப் போனால் 

பரவாயில்லையே. இரண்டு பவுனு தங்கத்தையும்

அடிச்சுட்டுப் போயிட்டாளே...."


"தங்கத்தையா...?

தங்கம் அங்கே எப்படி வந்தது?"


"அதுதாங்கா...முதலாவது இவ்வளவும்

போதும் என்றவள் கடைசியில் கொஞ்சம் 

பொன்னும் பூஜையில் வைத்தால்தான்

நல்லது. வீட்டில் தங்கம்

இருந்தால் கொண்டு வையுங்க.

அப்போதுதான் திருஷ்டி எல்லாம்

போதும் என்றாள்.

பூஜை முடிந்ததும் கொடுத்துவிடுவேன்

நன்று நம்பிக்கை வரும்படி பேசினாக்கா."


"அப்படி அவள் சொன்னதால் நீ 

தங்கத்தையும் கொண்டு வச்சுயாக்கும்.

கூறு கெட்டவள...

...கூறுகெட்டவள"


"ஏதோ வசியம் பண்ணிட்டாக்கா....

முகமாத்து பண்ணிட்டாக்கா...

அவள் சொன்னபடி எல்லாம் நான் ஆடினேன்

என்றால் பாருங்களேன்."


"இந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே.

முகமாத்தும் கிடையாது...சேலைமாத்தும் கிடையாது.

எல்லாம் உன் பேராசை.அப்புறம் அந்தத் தங்கத்துக்கு  

என்ன சேதாரம் ஆச்சு என்று 

சொல்லு..."


"என் கண்ணு முன்னால் ஒன்றுமே

ஆகலைக்கா....

அவள் அப்படியே நான் கொடுத்த மாதிரியே தான் திருப்பித் தந்தா....

ஏதோ கண் கட்டு வித்தை வச்சுபுட்டாளேக்கா...

நான் மோசம் போய்விட்டேனே


"மறுபடியும்...மறுபடியும் அதையே சொல்லிக்

கொண்டிருந்தால் நான் ரொம்ப பொல்லாதவள்

ஆகிடுவேன். நடந்ததை மட்டும் சொல்."


"பூஜை முடிந்து கையில் தங்கம்

பொதிந்து வைத்திருந்த பொட்டலத்தையும்

தட்டினையும்  என்

கையில்தான் தந்தாள்....

கடவுள் போட்டாவுக்கு முன்னால் வைத்து

கும்பிட்டு பீரோவில் வை. நாற்பத்தெட்டு

மணி நேரத்திற்குப் பிறகுதான் நீ திரும்ப எடுத்துப்

பார்க்கணும் என்றாள்."


"ஏன் தங்கம் குட்டி போடுறதுக்கா?"


ம்....சொல்லு...உன்னால் நாற்பத்தெட்டு மணி நேரம்

பொறுக்க முடிந்திருக்காதே..."


"சரியா சொன்னீங்கக்கா....ஒருநாள் முழுவதும்

இருந்தேன். அதற்குள் என் மனசுக்குள்

ஏதோ ஒன்று வாதிச்சுகிட்டே இருந்தது.

போய் பீரோவைத் திறந்து பொட்டலத்தை

எடுத்துப் பார்த்தேன்."


" தங்கம் குட்டிப் போடலையாக்கும்.

 பொட்டலத்தில் இரண்டு மூன்று

 சல்லிக்கல்தானே 

இருந்திருக்கும்."


"அதேதான்...அதேதான்...

எல்லாவற்றையும் நேரில் பார்த்ததுபோல்

சொல்கிறீர்களே...எப்படிக்கா உங்களுக்குத்

தெரியும்?"


"எத்தனை தடவை செய்தித்தாளில் படித்திருக்கிறோம்.

அப்படி இருந்துமா இன்னும் புத்தி வரவில்லை."


"புத்திதாங்கா மழுங்கிப் போச்சு

நான் என்ன சொல்வேன் யாரிடம் போய்

சொல்லுவேன்.?"


"யாருகிட்ட போய் சொல்லப் போற...

போலீசுக்குப் போ..."


"போலீசுக்கு போனால் என்னை மடக்கி மடக்கி

கேள்வி கேட்பாவளே..."


"ஏன்....நீ ஏதும் தப்பு பண்ணுனியா?

இல்லை இல்ல....அப்புறம் எதற்குப் பயம்?"


"வெளியில் தெரிஞ்சா எல்லோரும் சிரிப்பாவளக்கா..."


"அதற்காக வெளியில் சொல்லாமல் 

இருக்கப் போறியா?"

வீட்டுக்காரரிடம் விசயத்தைப் சொல்லி

இரண்டுபேருமாக சேர்ந்து போலீசுக்கு போய்

புகார் எழுதி கொடுங்க..."


"போலீசுக்கு போனால் கிடைச்சுடுமாக்கா?"


"சும்மா வளவள என்று பேசாமல் 

போய் ஆக வேண்டிய காரியத்தைப் பாரு

கண்டுபிடித்து கொடுப்பாங்க"


"சரிக்கா...சரிக்கா" என்றபடி

வீட்டை நோக்கி ஓடினாள்.


இப்போது நாளிதழுக்கு இன்னொரு செய்தியாகிப்

போனாள் பார்வதி.


மனதிற்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது.இதே மாதிரியான மோசடிகள் நடைபெறுவது

செய்தித்தாள்களில் எத்தனைமுறை வந்திருக்கும்.


இப்படிப்பட்ட செய்திகளை

எத்தனைமுறை நான்

செய்தித்தாளில் படித்திருப்பேன்.

ஆனால் கவனமாக இருக்க வேண்டும்

என்ற நினைப்பு வந்திருந்தால் இப்படி

நடந்திருக்குமா?

புலம்பிக் கொண்டே தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டாள்.


எந்தந்த மாதிரி எல்லாம் ஏமாற்று வேலைகள்

நடைபெறுகின்றன.

என்னென்ன வார்த்தைகள் பேசி 

ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது நமக்கும்

தெரிய வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை

நேரடியாக சந்தித்து பேட்டி எடுத்து செய்தியாக

வெளியிடுகிறார்கள்.

எல்லாவற்றையும்  விலாவாரியாக வாசித்திருந்துமா எனக்குப் புரியல?


எதற்காக படித்தேன். மனப்பாடம் செய்து தேர்வு

எழுதவா? 


மனதில் பதிய வைத்து கவனமாக

நடந்து கொள்ள வேண்டும்  என்ற புத்தி வரலியே


என்னைப்  போன்ற ஏமாளிகள் இருக்கிறவரை 

ஏமாற்றுக்காரர்கள் தங்கள் வலையை 

விரித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

 இனியாவது கவனமாக இருக்கணும்.
என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

இப்போது என் தங்கம் கிடைக்குமா?
போலீசுக்குப் போனால் ஆயிரம் கேள்வி
கேட்பார்கள்.
பண்பும் கேட்பார்கள்...
வேறு என்ன வழி...
மனம் கணக்குப் போட்டுப்
பார்த்தது.

சட்டென்று ஒரு நினைவு.
ஆம் இப்படிச் செய்தால் என்ன?

வழுக்கம் பாறையில்
ஒரு பெண் குறி சொல்வாளாமே...
தொலைந்த பொருளையெல்லாம் கண்டு பிடித்துக் கொடுப்பாராளாம்...
.
அவளிடம் போய் கேட்டால் என்ன?
கால்கள் தடுமாறின....இல்லை தடம் மாறின.

"எங்கே போற ...."ஒரு குரல் வந்து தடுத்தது.
கை முதுகின் மீது விழுந்தது.

"இல்ல....வழுக்கள் பாறையில..."

"மறுபடியும் குறி கேட்கப் போறியா?
நீங்கள் எல்லாம் பட்டும் திருத்த மாட்டீங்களா?"

"உன்னை மாதிரி மனதில் தடுமாற்றம் இருப்பவர்கள் இருக்கும் வரை
குறி சொல்பவர்கள் காட்டில் அடைமழை தான். போ...போ... மறுபடியும் இருக்கிற காசை எல்லாம் குறிகாரிக்குக் கொடு.

பொருளைத் தொலைத்தால் போலீஸ் ஸ்டேஷன் போ....அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள்..
.அதைவிட்டுவிட்டு மறுபடியும்
களவாடியவளிடமே போய் நிற்பேன் என்கிறாய்...போ...போ...
துரத்தியது குரல்....

எங்கே போவாள்..குறிகாரியிடமா?

















Comments

Popular Posts