இருந்தவளைப் போனவளை

இருந்தவளைப் போனவளை 


பத்தாயிரம் கவிதை

முத்தாக அள்ளி வைத்த

சத்தான கம்பனுக்கு

ஈடு இன்னும் 

வித்தாகவில்லை என்று பாடு"என்பார் கண்ணதாசன்


இந்தப் பத்தாயிரம் மட்டும்தானா...

இன்னும் உண்டு சத்தான பாடல்கள்.

தனிப்பாடல் திரட்டிலிருந்து கம்பர்

முத்தாக அள்ளி வைத்த

பாடல்கள் பல உண்டு.

அவற்றிலிருந்து 

இதோ உங்களுக்காக ஒரே ஒரு பாடல்.


தன் மகள் காதல் வயப்பட்டு விட்டாள்.

அதனால் அவள் 

உடல் மெலிந்தாள்.கைவளை

கழன்று காணாமல் போனது.

இதற்குக் காரணம் யார்?

யாரைப் பார்த்தாள்?

யார் மீது காதல் கொண்டாள்?

வேறு எங்கும் செல்லவில்லையே...அப்படியானால்....

அப்படியானால்....

யாராக இருக்கும்?

தாயின் மனம் கலக்கத்தில் கண்டபடி

ஏதேதோ புலம்பத் தொடங்குகிறது.


அன்றொருநாள் அவள் பார்த்த

அவன் அவனேதான். அவன் ஆகத்தான் இருக்க வேண்டும் .


யாராக இருக்க வேண்டும் என்கிறாள்?



தாய் தன் மகளின் காதல் பற்றிச் சொல்கிறாள். கேளுங்கள்.


தவளை தத்திப் பாயும்போது 

தவளையின் கால்கள் பூவில் பட்டு அதில் இருக்கு தேன் மழைபோல்  

கீழே சொரியும் .

அப்படிப்பட்ட வளமுடைய  பொன்னியாறு பாயும் வளநாடு. 


அங்கு மாதத்தன் என்பவன் 

ஆட்சி செய்து வந்தான்.

ஒருநாள் மாதத்தன்  தெருவில் உலா வருகிறான்.

சேவகர்கள் புடைசூழ பலத்த பாதுகாப்போடு வருகிறான் என்று முன்னறிவிப்பு

வருகிறது.


மன்னனைக் காண மக்கள் கூட்டம்.

இளம் பெண்கள் மறைந்து நின்று

மன்னனைக் காணவேண்டும்

என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.


மன்னனும் வருகிறான்.அவன் தடந்தோள் கண்ட தலைவி மெய்மறந்து அப்படியே

நிற்கிறாள்.


அப்போது ....

அவள் கையில் பொருந்தியிருந்த வளையல்களை அவன் பறித்துக்கொண்டு போய்விட்டான். 


அதெப்படி?


பார்த்த மாத்திரத்தில் கைவளையல்களைப்

பறித்துக் கொள்ள முடியும்?


அதுதான் காதல்.


காதல் வயப்பட்டாள்.

அவன் நினைவினில் மிதந்தாள்.

ஊன் மறந்தாள்.

உறக்கம் தொலைத்தாள்.

உடல் மெலிந்தாள்.

கைவளைக் கழன்று ஓடியது.

இதனை இப்படிச் சொன்னாள் தாய்.


கம்பர் நடையில் கண்ணதாசன் பாடலுக்கே 

வித்தாக அமைந்த பாடல் உங்களுக்காக.



"இருந்தவளைப் போனவளை

யென்னை யவளைப்

பொருந்தவளை பறித்துப்

போனான் - பெருந்தவளை

பூதத்தத் தேன் சொரியும்

பொன்னி வளநாட்டின்

மாத்தத்தன் வீதியினில் வந்து"(18)


மாத்தத்தன் வீதியினில் வந்தான்.


இருந்தவளை போனவளை

பொருந்தவளை பறித்துப்

போனான் என்கிறாள்.

பொருந்த வளை பறித்துப் போனவன்

யார் என்ற கேள்விக்குப் பதிலாக

பெருந் தவளை

பூதத்தத் தேன் சொரியும்

பொன்னி வளநாட்டு மாத்தத்தன் 

என்று சொல்கிறாள்.


இப்படித் தாயைச் சொல்ல வைத்துத் தன் கவியோடு 

நம்மையும் வளையிட்டு

அழைத்துச் சென்ற 

கம்பர் பாடலின் கவி நயத்தை

என்னவென்பது?


இந்தப் பாடலைத் தான் கவியரசர்

கண்ணதாசன் 

சின்னவளை முகம் சிவந்தவளை

சேர்த்துக் கொள்வேன் 

கரம் தொட்டு

என்ன வளை 

காதல் சொன்னவளை

ஏற்றுக் கொண்டேன் 

வளையிட்டு 

வந்தவளைக் கரம் தந்தவளை

நீ வளைத்துக் கொண்டாய் 

வளையிட்டு

பொங்குவளை கண்கள் 

கொண்டவளை

புதுப் பூப்போல் பூப்போல் தொட்டு

என்று பாடியிருப்பாரோ?




"

 

Comments

  1. உங்களுடைய எல்லா பதிவுகளும் படிக்கிறேன் ..அருமை அம்மா..🙏🙏🙏அதிலும் தன்னம்பிக்கை சார்ந்த பதிவுகள் எனக்கு பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி.
      தொடர்ந்து படியுங்கள்..
      விமர்சனங்களையும் எழுதுங்கள்.

      Delete

Post a Comment