கூலி பாக்கி வைக்க வேண்டாம்
கூலி பாக்கி வைக்க வேண்டாம்
வேலைக்கு கூலி வேண்டும்.
கூலிக்கு வேலை வேண்டும்.
என்ன இது ....இரண்டும் ஒன்றுதானே ....இன்னொருமுறை வாசியுங்கள்.
பொருள் வேறு வேறு இல்லையா!
இதுதான் நாடு முழுவதும் கேட்கும் குரல்கள்.
வேலை இருப்பவனுக்கு சரியான கூலி இல்லை.
கூலிக்கு வேலை கிடைக்குமா என்ற கூப்பாடு மறுபக்கம்.
இப்படி இந்த இரண்டையும் சுற்றி சுற்றிதான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது.
வேலை செய்தவனுக்கு கூலி கொடுங்கப்பா...
தொழிற் சங்கங்கள் கரடியாய்க் கத்தினாலும் காது கொடுத்துக்
கேட்காத முதலாளி வர்க்கம்.
அதுவும் தினக்கூலிகள் படும்பாடு....பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, சாயங்காலம் கூலி வாங்க முதலாளி முன் கூனிக்குறுகி
நிற்பதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.
வேலைதான் செய்தாகி விட்டதே முழு ஊதியத்தையும் தொழிலாளி கையில் கொடுப்பதில்லை.
இடையில் சூப்ரவைசர் என்ற இடைத்தரகர் ஒருவர் இருப்பார். அவருக்கு கொடுக்க வேண்டிய படியைப் போட்டால்தான் அடுத்தநாள் வேலைக்கு வைப்பார்.
இப்படி வேலைக்கான கூலியை வாங்குவதற்குள் திக்திக்கென்று
அடிக்கும்.
அந்தக் கூலிக்குள் தான் எத்தனை உயிர் இருக்கிறது என்பது தினக்கூலி வாங்கும் பணியாளருக்கு மட்டும் தான் தெரியும்.
கூலியை எதிர் நோக்கியே பலரின் வாழ்க்கைச் சக்கரம்
ஓடுகிறது.
உடல் உழைப்புக்குக் கட்டாயம் கூலி கொடுத்தாக வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இன்றுபோய் நாளை வா என்று
கடத்துதல் கூடாது.
வயிறு ஒருநாள் உணவு உண்ணாமல்
ஒழி என்றால் ஒழியுமா?
வயிற்றுக்குச் சோறு வேண்டும்.
அதற்காகத்தான் இந்த உழைப்பு.
வேலை முடிந்ததும் கூலி கையில்
கொடுக்க வேண்டும். பாக்கி வைக்கக் கூடாது.
அதுவும் இந்த ஐந்து பேர் கூலியை மட்டும் பாக்கி வைத்து விடாதீர்கள் என்கிறார் உலக நாதர் என்ற புலவர்.
நீங்கள் யாருடைய கூலியிலும் கை வையுங்க.. வைக்காம போங்க...
ஆனால் இந்த ஐந்து பேர் கூலியில் மட்டும் கை வைக்காதீர்கள்...என்று ஓங்கி உரைக்கிறார்.
யார் அந்த ஐந்து பேர்?
அறிய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதல்லவா?
அதனை உலக நீதி என்ற நூலில் உலக நாதர் அழகாக கூறியுள்ளார்.
வாருங்கள் யார் அவர்கள் என்று பார்த்து விடுவோம்.
முதலாவதாக நம் துணிகளைத் துவைத்துத் தரும் சலவைத் தொழிலாளி.
நம்மை நாலுபேர் மத்தியில் அடையாளம் காட்டி நிற்பது உடை தான்.
ஆள் பாதி ; ஆடை பாதி.
ஒருவர் உடுத்திய
அழுக்கு ஆடையை பிறர் ஒருவர் துவைத்துத் தருதல் என்பது பெரும்பணி. பொறுமை இருக்கும் ஒருவரால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.
ஆடையை தூய்மையாகத் துவைத்துத் தரும் பணியைச் செய்யும் சலவைத் தொழிலாளியின் கூலியை ஒருபோதும் வைத்திருந்தல் கூடாதாம்.
இரண்டாவதாக ...நமக்குப் பாதுகாப்பாக அழகாக முடிதிருத்தும் தொழிலாளி...
அவர் மட்டும் இல்லை என்றால் நாம் எப்படி இருந்திருப்போம்.?
கற்பனை செய்து பாருங்கள்.
ஆதிகால மனிதனாகவே அலைய வேண்டியிருக்கும்.
நம்மை அழகுபடுத்திப் பார்ப்பவர் அவர்தான்.
முகத்தில் எத்தனை முறை சவரம் செய்திருப்பார்.
ஒரு வடு வர விட்டுவிடுவாரா?
பார்த்துப் பார்த்து செதுக்கிய சிலை போல
நம்மை அழகுபடுத்தியர் இவரல்லவா?
கவனமாகத் தன் தொழிலைச் செய்யும்
முடிதிருத்தும் தொழிலாளி கூலியை ஒருபோதும் வைத்திருக்கக்
கூடாதாம்.
மூன்றாவதாக அனைத்துக் கலைகளையும் கற்றுத்தரும்
ஆசிரியர்.
ஆசிரியர் கற்றுத் தரவில்லை என்றால் நமக்கு எந்தக் கலையுமே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்."
ஆசிரியர் கற்றுத் தரவில்லை என்றால் எண்ணும் தெரியாது. எழுத்தும் தெரியாது.
குருடர்களாக மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதான்.
கற்றுக் கொடுப்பவர் அனைவரும் ஆசிரியரே... அது எந்தக் கலையாகவும் இருக்கலாம்.
அப்படிப்பட்ட ஆசிரியர் கூலியைக் கண்டிப்பாகக் கொடுத்துவிட வேண்டுமாம்.
நான்காவதாக பிரசவ நேரத்தில் உடனிருந்து நஞ்சுக்கொடி அறுக்கும் மருத்துவச்சி.
பிரசவம் மறு பிறப்பு என்று சொல்வார்கள்.
அந்தக் காலத்தில் எல்லாம் மகப்பேறு மருத்துவராக இருந்து அனைத்து உதவிகளையும் செய்பவரை மருத்துவச்சி என்று கூறுவர்.
கிராமப்புறங்களில் இன்றும் இவர்களைக் காண முடியும்.
பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி விழவில்லை என்றால் தாய் மரணிக்க நேரிடும்.
கூடவே இருந்து தாயையும் சேயையும் காப்பாற்றிக் கொடுக்கும் பெரும்பணி மருத்துவச்சி கையில்தான் இருக்கும்.
நமக்கு மறுபிறப்பு கொடுக்கும் மருத்துவச்சி கூலியை ஒருபோதும் வைத்திருத்தல் கூடாதாம்.
ஐந்தாவதாக நம் உடல் நோவு தீர மருந்து தரும் மருத்துவர்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
வயிற்றுவலி வந்துவிட்டால் துடியாய்த் துடிப்போம்.
காதுவலி வந்துவிட்டால் ஐயோ...சாகலாம்போல் இருக்கே என்று
அலறுவோம்.ஒரு பல்வலிக்குத் தாங்க மாட்டோம்.
இப்படிப்பட்ட நோவிலிருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றுபவர்
மருத்துவர்.
அவர் இல்லை என்றால்... அப்பப்பா வேண்டாமப்பா...அந்த
நரக வேதனை.
இவர் வேண்டப்பட்டவர். அவர் வேண்டாதவர் என்று பாகுபாடு
பாராது நேரம்காலம் இல்லாமல் நம் நோய்தீர்க்க மருந்து தந்து
நம்மை குணப்படுத்துபவர் மருத்துவர்.
அவர் கூலியைப் பாக்கி இல்லாமல் கொடுத்திடுங்கள்
என்கிறார் உலக நாதர்.
இவர்கள் கூலியை கடனே என்று முணுமுணுப்போடு
கொடுத்தல் கூடாதாம்.
நம்மை மகிழ்ச்சியாக்க நமக்காக உழைத்தவர்களை நாம்
மகிழ்வித்துப் பார்த்தல்தானே அறம்.
அந்த அறச்செயலை மகிழ்வோடு செய்யுங்கள்.
அப்படி அவர்களுக்கான கூலியைக் கொடுக்காது விட்டுவிட்டால்.... ?
என்ன நிகழும்?
அதனை நான் சொல்ல மாட்டேன் .
எமனே பார்த்துக் கொள்வான் .
என்று கூலி கொடுக்காது ஏமாற்றுபவர்களை எமன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டார் உலகநாதர்.
அச்சமாக இருக்கிறதில்லையா?
எமன் கையில் அகப்பட்டால்...
அவன் ஏதேது
செய்வானோ ...?
அதற்குப் பிறகு அம்மாடியோ என்றாலும் விடமாட்டான்...
ஆத்தாடியோ என்றாலும் விடமாட்டான் என்று நமக்காகப்
பரிதாபப்படுகிறார் உலக நாதர்.
பயமாக இருக்கிறது இல்லையா?... எமன் செய்வது ஒருபக்கம்
இருக்கட்டும். நமக்கே மனசாட்சி இருக்கிறது இல்லையா?
இதுவரை பாக்கி வைத்திருந்தாலும் இனியாவது பார்த்து
நடந்து கொள்ளுங்கள்.
பாடலை வாசித்து யார் யாருக்கு கூலி பாக்கி வைக்கக்கூடாது என்று மனதில்
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இதோ உலகநாதரின் பாடல் உங்களுக்காக....
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மறுத்துவச்சு கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ எமன்றானே!
உலகநீதி_ பாடல். 11
English translation :
Do not deprive the wages of five groups of people
Listen, when I say these groups are
The wages of washerman and hairdresser
The wages of the teacher who taught you all
The wages of the midwife who cut the umbilical chord
The wages of the physician who saved you from pain
What kind of fate will they have to face
Who don't pay them with a pleasant word.
மறுபடியும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
சலவைத் தொழிலாளி
முடி திருத்துபவர்.
ஆசிரியர்
மருத்துவச்சி
மருத்துவர்
இவர்கள் ஐவர் கூலியையும்
உடனே கொடுத்துவிட வேண்டும்.
நல்ல பாடல் இல்லையா?
Comments
Post a Comment