ஏழு எழுபது முறை

ஏழு எழுபது முறை

.சார்..போஸ்ட்....என்ற போஸ்ட்மேனின் சத்தம் 
 கேட்டு வாசலுக்கு ஓடிவந்தேன்.
         
போஸ்ட்மேன் கவரைக் கையில் கொடுத்து விட்டுத் 
திரும்பு முன்னே வீட்டுக்குள் துள்ளிக் குதித்து
ஓடிப்போய் அம்மா முன் நின்றேன்.
 
"அம்மா... எனக்கு வேலை கிடச்சிருக்கு..."

" எங்க..எங்க... காட்டு" ஓடி வந்து கையில் 
இருந்த கவரைப் பிடித்து இழுத்தாள் தங்கை.

"போ... ...போ ...அம்மா...வான்னா..."
சத்தம் போட்டபடியே அம்மா இருக்கும்
இடத்திற்கு வந்தேன்.

" ஏன் கத்துற... முதலாவது கவரை 
பிரிச்சிப் பாரு...அதற்குமுன் எதுக்கு
ஆர்ப்பாட்டம் பண்ணுரா...."
சாதாரணமாகச் சொல்லிவிட்டு கடந்துபோனார்
அம்மா.

"வா ...வா.. எங்கே போற.....என் கிட்ட இரு."
அம்மாவை வலுக்கட்டாயமாக இழுத்து
பக்கத்தில் அமர்த்தி வைத்துவிட்டுக்
 கவரைப் பிரித்தேன்.
 
அப்படியே தூக்கிவாரிப் போட்டது.
 
"ஆ....என்ன இது ....இன்டர்வியூக்கு 
வரச் சொல்லி இருக்கு"

" எங்கிருந்து.. வந்திருக்குது....
அதைச் சொல்லு முதல்ல" முந்திரிக்கொட்டையாட்டும்
முன்னே வந்து நின்று கேள்வி கேட்டாள் தங்கை.

"திருநெல்வேலியில் இருந்து.." எரிச்சலோடு
பதிலளித்தேன்.

"திருநெல்வேலிதானே... போயிரலாம்...
போயிரலாம் "
என்றார் அம்மா.

" அம்மா...கொஞ்சம் சும்மா இருக்கியா...
 நான் இன்டர்வியூ லட்டர்
 வந்துருக்கு என்கிறேன் ...
 நீ பாட்டுக்கு எதை எதையோ சொல்லிகிட்டு..
 சும்மா எரிச்சல கிளப்பாத..."
 அம்மாமீது எரிந்து விழுந்தேன்.
 என் கோபத்துக்குப் பலியாடு எப்போதும்
 என் அம்மாதான்.
 
"ஏன் எரிச்சல் படுற...இன்டர்வியூ வந்தால் போக
 வேண்டியதுதான..."மறுபடியும்
 முதலாவதில் இருந்து தொடங்கினார் அம்மா.
 
"நான்தான் ஏற்கனவே பதிஞ்சு வச்சிருந்த இடத்திலிருந்து இன்டர்வியூ வந்திருக்கு.
வேலைக்கு இல்லை"

அப்புறம் எதற்கு கு 
 இன்டர்வியூக்கு கூப்பிட்டுருக்காங்க..."?

"யாருக்குத் தெரியும்.?
 நான் அப்பவே சொன்னேன்"

என்ன புலம்புற...?

"என் பேச்சு உனக்கு புலம்பலாத்தான் 
தெரியும்.
ஏன்னா நான் ...."
சொல்லி முடிக்க முடியவில்லை.
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

இப்போ எதுக்கு அழுகுற...
என்ன நடந்துட்டு...?

உனக்கு ஒண்ணும் நடக்கல...
எனக்குத்தான் எல்லாம் நடக்குது.

"எதுக்கு இவ்வளவு அலட்டல்?
என்ன என்றுதான் சொல்லி தொலையேன்"
தங்கை எரிந்து விழுந்தாள்.

 அப்ளிகேஷன் எழுதும்போது நான்
சொன்னது நினைவு இருக்கா?

எனக்கு எங்க நினைவு இருக்கு?
உனக்கு நினைவு இருந்தா சொல்லு...

அப்ளிகேசன் போட்ட நாளை அம்மாவின் நினைவுக்குக் 
 கொண்டு வந்தேன்.

"நீ அப்ளிகேசன் எழுதி போட்டால்ல.."

"நான் எழுதி போட்டது ரினீவ் 
பண்ணுறதுக்கும்மா..என்ன
ஃபிரஸ் கேன்டிடேட்டா இன்டர்வியூக்கு
 கூப்பிட்டுருக்காங்க.."
 
" எப்படியோ கூப்பிட்டுருக்காங்கல்ல...போயிட்டு
 வரவேண்டியதுதானே..."
 
" சும்மா புரியாம சொன்னதையே 
 சொல்லிகிட்டு இருக்காத.."
 
" இப்போ என்ன சொல்ற...
போகணும் என்கிறியா.... போகாண்டாம் என்கிறியா..."

"அது இல்லம்மா..எனது பழைய நம்பர் போயிரும்..
புதுசாதான் சேர்ப்பாங்க...புதுசா சேர்த்தா
நான் சீனியாரிட்டில
பிந்திருவேன்."

"அப்போ வேலை கிடைக்காதா...."

" நான் அப்பவே சொன்னேன்ல...
 அவன் எழுதி கொடுத்தனுப்பிய
அப்ளிகேசன் ரினீவலுக்கு உள்ளது இல்லைன்னு.."

 "உனக்கு அவன் வாங்கி கொண்டு தந்ததே
  பெருசு இதுல வேற
 சொத்த சொடுக்குன்னுட்டு..."
 அம்மா மகனை ஒரு வார்த்தை 
 சொல்ல விடமாட்டார்.
 
  " இதுவரை கட்டிலில் படுத்துக் கிடந்தது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அப்பா மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தார்.

"அப்பா...பார்த்தியளாப்பா...
எப்படி பண்ணி வச்சுருக்கான்னி..."

அவனா அனுப்பி இருக்கான்?
ஆபீசுல இருந்து தானே வந்திருக்கு.
சரி ...சரி....கோபப்படாத ....
 இனி என்ன செய்வது...?
நீ இன்டர்வியூவில்
 சொல்லு...பழைய நம்பர் தருவாங்க....சரியாகிரும்."

"அப்படியா சொல்றீய...
கேட்பார்களா...
எனக்கு என்னவோ பயமா இருக்கு."

ஒன்றுக்கும் கவலை படாத..
எல்லாம்
 நம்ம கோவில் ஆட்கள்தான் இருப்பாங்க.
சரி பண்ணி தந்துடுவாவ"
 என்றார் நம்பிக்கையின் நாயகன் எங்க
 அப்பா.
 
 அப்பாவின் வார்த்தையால் எனக்குள்ளும்
 ஒரு நம்பிக்கைக் கீற்று வந்து போனது.
 ம்உம்...ஏதோ இப்போதைக்கு சமாதானம்
 அடைந்தாலும் மனசு மட்டும் கேட்கல..
  
 அப்ளிகேஷன் நிரப்பும்முன்
 எத்தனையோமுறை சொன்னேன்.

 இது ரினீவல் அப்ளிகேசன் இல்லை என்று....
 .
" நான் வாங்கிவந்ததை... தப்புங்கிறாளா...
  வேண்டாம் என்றால்
 தூர போடச்சொல்லு..."
 காட்டுக்கத்தல் கத்தினான் .

 
எதிர்த்துப் பேசிப்
பழக்கமில்லை.
 
 வார்த்தைகள் வலியாக காதில் வந்து விழுந்தன.
 மௌனமாக அப்ளிகேசனை நிரப்பி 
 அம்மா கையில் கொடுத்தேன்.
 விளைவு புதிதாக இன்டர்வியூ வந்து நிற்கிறது.
 
" நம்ம எதுவும் சொன்னா ...
  உங்களுக்கு அவன்
எதுவும் செய்யமாட்டான்.. 
அவர்தானே உங்களுக்கு எல்லாம் பார்க்கணும் என்று
வாயைத் திறக்காதுங்க.".என்று
வாய்ப்பூட்டு போட்டு வைத்துவிடுவார் அம்மா.
 
 அம்மாவுக்கு என்ன தெரியும்.. அவள் படிக்காதவள் . 
  வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும்
 அப்பாவி.
 
 மலைபோல மகனை நம்புவாள்.
 மகனை மட்டுமே நம்புவாள்.
 
 எங்களுக்கும் வேறுவழி தெரியல..
 உண்மையைக்கூட சொல்ல
 முடியாத பூச்சியாக பயங்காட்டி பயங்காட்டி
 வளர்த்து வைத்திருந்தார் அம்மா.
 
 அடுத்தநாள் காலைவரை ஏதேதோ நினைவுகள்...
 ராத்திரி தூக்கமே வரவில்லை
 
 நாளைக்கு என்ன ஆகுமோ ....ஏது ஆகுமோ  
 
ஒரு வாய் சோறுகூட 
சாப்பிட முடியல...காலையிலே எழும்பி
முதல் பஸ்சைப் பிடிச்சி போகணும்...
என்ற நினைவோடு சற்று கண் அசந்து
போனேன்.

விடிந்ததும் முதல் வேலையாக 
 அவசர அவசரமாக புறப்பட்டேன்.
 
"கொஞ்சம்போல கஞ்சி தண்ணியாவது 
குடிச்சுட்டுப்போ..."
என்ற அம்மாவின கரிசனமானப் பேச்சைக் காதில் 
போட்டுக் கொள்ளவில்லை.

"எனக்கு ஒண்ணும் வேண்டாம்...வேண்டாம்...
வேண்டாம்..."
யார் ...யார் மீதெல்லாமோ உள்ள
கோபத்தை சாப்பாட்டுமேல்
காட்டிவிட்டு வெறும் வயிற்றோடு 
புறப்பட்டுச் சென்றேன்.

மனசுபூரா இன்டர்வியூல் நம்ம
சொல்வதை கேட்பாங்களோ ...மாட்டாங்களோ..
 பழைய நம்பர்கூட
பெயரைச் சேர்ப்பாங்களோ ...
சேர்க்க மாட்டாங்களோ....என்பதைத் தவிர
வேறு எதுவும் இல்லை.
 
பஸ்சைப் பிடித்து போய் பேருந்து நிலையத்தில்
இறங்கினேன்.

 ஒரே திருவட்டமாக இருந்தது.
இதுவரை தனியாக தெரியாத ஊருக்கு
வந்து பழக்கமில்லை.

 இனி இன்டர்வியூ நடக்கும் இடத்துக்குப் போகணும்.
திருதிருவென்று விழிப்பதைப் பிர்த்து
 ஆட்டோ டிரைவர்கள் ஆள் ஆளுக்கு 
" எங்கப் போகணும்மா...வாங்க..
 வாங்க ..."கையைப் பிடித்து 
 இழுக்காத குறையாக
 அழைத்தனர்.
 
 ஆட்டோவில் போகிற தூரம் இல்லை. 
 பஸ் நிறுத்தத்தில் இருந்து
 நேரே போனால் இன்டர்வியூ கால் வந்துடும் .
 சொல்லி அனுப்பி இருந்தார் அப்பா.
 
 ஆனால் எந்த பக்கம் போகணும்னு சொல்லவில்லை...
 இரண்டு பக்கமும் ரோடு போகுது..
 எந்தப் பக்கத்தில் போகணும் என்று தெரியவில்லை...
 குழப்பத்தோடு இரண்டு பக்கத்தையும்
 மாறி மாறி பார்க்க...
 
" தங்கச்சி எங்க போகணும்மா..."மறுபடியும் 
 விடாமல் ஒரு ஆட்டோக்காரர் கேட்டார்.
இனியும் சும்மா நின்னா சரிப்படாது 
என்று நினைத்தபடி இடத்தைச் சொன்னேன்.

"அதுவா... பக்கந்தாம்மா...ஆட்டோ ஒண்ணும்
வேண்டாம்....நேரே போ.. 
எதுத்தால
பெரிய போர்டு போட்டுருக்கும்..ஐந்து நிமிசத்துல போயிரலாம்...."என்று கையைக் காட்டிவிட்டு 
நகர்ந்தார் ஆட்டோக்காரர்.
 
ஆட்டோடிரைவர் காட்டிய வழியில் செல்ல திரும்பினேன்.
முன்னால் பலர் இன்டர்வியூக்குச் 
செல்வதுபோல் கையில்
பைலோடு நடந்தனர்.
 
 இவர்களும் அங்குதான் போகிறார்கள்
 போலும் .இவர்களைப்
 பின்தொடர்ந்தால் போய்விடலாம்
 என்ற நம்பிக்கையில் அவர்கள் பின்னாலேயே
  நடந்தேன்.
  
 நுழைவாயில் அருகில் செல்லவும் 
" ஏய்..நீயும் வந்துருக்கியா..."
என்ற குரல் என்னை தடுத்து நிறுத்தியது.

திரும்பிப் பார்த்தேன் ..கல்லூரி தோழி தேன்மொழி
கையில் பைலோடு நின்றிருந்தாள்.

"அப்பா...இப்போதான் எனக்கு நிம்மதி...தெரிஞ்சவுங்க
 ஒருத்தரும் இருக்க மாட்டாங்களே ...
 என்று பயந்து கிட்டே இருந்தேன்" என்று
 என்னைப் பார்த்து ஆறுதல்பட்டுக் கொண்டாள்
 தேன்மொழி.
 
எனக்கும் தேன்மொழியைப் 
பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
            
" என்ன செய்றா... ஏது செய்யுறா
வேலை செய்யாமல் சும்மாதான் இருக்கியா?"
வரிசையாக ஏதேதோ கேட்டுக்
 கொண்டே இருந்தாள்.
 
என் நினைப்பெல்லாம் இன்டர்வியூவில்
என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருந்ததால்
பாதி கேட்டும் கேட்காததுமாக "உம்...ஆமா "என்று
சம்மந்தா சம்பந்தமில்லாமல் பதில் சொல்லிக் 
கொண்டிருந்தேன்.


உம்...

" உன்னுடைய நம்பர் என்ன.....கொடு பார்ப்போம்" 
கையில் இருந்த இன்டர்வியூ கார்டை 
வாங்கிப் பார்த்தாள் தேன்மொழி.

"பதினொரு மணி... எனக்கும் பதினொரு 
மணிதாம்பா போட்டுருக்கு....காலையிலதான்...
இந்தா பத்திரமா வைத்துக்கோ...."
 என்றபடி மறுபடியும் என் கையில் திணித்தாள்.
 
 நான் திருதிருவென்று விழிப்பதைப் பார்த்ததும் "என்னடி ...என்ன...பயமா இருக்கா....
 இதெல்லாம் வெறும் கண்
 துடைப்புதான்....ஜஸ்ட் நம்பர் சேர்க்கிறதுக்குத்தான்.
 பயப்படாதே.." முதுகில் தட்டியபடி ஆறுதல் சொன்னாள்.
 
என்னால் ஆறுதல்பட்டுக் கொள்ள
முடியவில்லை.

 " கூட யாரும் வரலியா...தனியாகவா வந்தா...
 எனக்கு அப்பா கூட வந்தாரு...டீக்கடைக்குப் 
 போயிட்டு வர்றேன் என்று போனாரு.."
 என்று விடாமல் பேசிக் கொண்டே இருந்தாள்.
 
"ஆமாம்...." ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக்
கொண்டேன்.
 
 " ஓ.. அப்பிடியா...ரிலாக்ஸ் ஆக இரு...ஏன்
 ஒரு ரெஸ்ட்லசாகவே இருக்குற.....கூல்...கூல்..."
 என் மனநிலையைப் புரிந்து கொண்டவள்போல
 என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டே 
 இருந்தாள்.
 
 சற்று நேரத்தில் அலுவலக உதவியாளர் 
 வந்து ஒவ்வொரு நம்பராக அழைக்க
 ஆரம்பித்தார்.
  
 எனக்கான நம்பரைச் சொல்லி
 உதவியாளர் அழைத்ததும்
 கையில் கொண்டு வந்திருந்த பையைத் தூக்கிக்
கொண்டு எழுந்து அறையை நோக்கிச் சென்றேன்.
   
இன்டர்வியூ நடக்கும் அறைக்குள் நுழையும்முன்
தேவையில்லாத பதற்றத்தில்
கால்கள் தள்ளாட்டம் கண்டன.

உள்ளே சென்றதும் விழுந்து விடுவோமோ
 என்ற பயத்தில் உட்காரச் சொல்லுமுன்
ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்.
 
 உட்கார்ந்த பின்னர்தான் வணக்கம் சொல்ல 
 வேண்டும் என்ற நினைப்பே வந்தது.
 
 ஏதோ தப்பு செய்தது போல குறுகுறு 
 என்று விழித்துவிட்டு
 இரண்டு கைகளையும் கூப்பி எல்லோரையும் 
 மாறி மாறி சம்பந்தா சம்பந்தமில்லாமல்
 வணங்கினேன்.
 
 " பதட்டப்படாதீங்க...ரிலாக்ஸ்...ரிலாக்ஸ்..."என்றார்
 என் பதற்றத்தைப் புரிந்து கொண்ட 
 ஒரு பெரிய மனிதர்.
 
 பயத்தோடேயே ஒவ்வொருவர் 
 முகத்தையும் பார்த்தேன்.
 
முகம் குப்பென்று வியர்த்துக் கொண்டு வந்தது.
அப்ளிகேசனைத் திருப்பிப் பார்த்த
 பெண்மணி மெதுவாக
 தலையை நிமிர்த்தினார்.
 
 என்ன சொல்லப் போகிறார்களோ .. .
 இப்போது காலோடு கையும் 
 சேர்ந்து ஆட்டம் கண்டது.
 
 கண்களில் ஒரு கெஞ்சல்.... உதடுகள் ஏதோ 
 சொல்ல வருவதற்கான முன்னோட்டமாக
  துடித்துக் கொண்டிருந்தன.
 
 மறுபடியும் இன்னொருமுறை அப்ளிகேசனை 
 திருப்பித் திருப்பிப் பார்த்தார் அந்தப் பெண்மணி.

" சொல்லிவிடலாமா....."
 நாவில் வார்த்தைகள் பற்களுக்கு இடையில் 
  கிடந்து நசுங்கி விழுந்தும் ....எழுந்தும் ...
  வந்து வெளியில் எட்டிப் பார்க்க போராட்டம்
  நடத்திக் கொண்டிருந்தன.
  
 "இனி சொல்லிதான் ஆக வேண்டும்."
  ஏதோ ஒரு அசட்டு தைரியத்தை வரவழைத்துக் 
  கொண்டு " மேடம் தெரியாமல் ரினீவலுக்குப் 
  பதிலாக பிரஷ் அப்ளிகேசன்
  போட்டுவிட்டேன்."...சம்மன் இல்லாமலே 
  ஆஜரானேன்.
  
  .
   மேலும் கீழும் பார்த்த அந்த பெண்மணி" நீ என்ன
   படிச்சுருக்க...."என்றார். பேச்சில் ஒரு விசமம்
   தெரிந்தது.
   
  " மேடம்.... தெரியாம..."
   பதில் சொல்லி முடிப்பதற்கு முன்பே
   
"இவங்கல்லாம் படிச்சி
என்ன செய்யப் போறாங்க ..
ஒரு அப்ளிகேசன் சரியா போடத் தெரியல... "    
வார்த்தைகளில் ஒரு எளக்காரம் இருந்தது.
ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தார்.
நான் அப்படியே கூனி குறுகிப் போனேன்.
            
"வந்து...மேடம்.. ப்ளீஸ் மன்னிச்சுடுங்க..
தெரியாமல் ....போட்டுட்டேன்"
வார்த்தைகள் ஒற்றை
ஒற்றையாக வந்து விழுந்தன.

"அதெல்லாம் முடியாது....போங்க ....
அடுத்த நம்பரைக் கூப்பிடத் சொல்லுங்க..."
ஈவு இரக்கம் இல்லாதவர்போல
அப்ளிகேசனை என்னை நோக்கி
 மேசையின்மீது தூக்கி வீசினார் அந்தப்
பெண்மணி.

 பேப்பர் ஆளுக்கொரு திசையில் பறந்து
 ஓடியது.
 
  " எங்க இருந்துதான் இப்படி எல்லாம்
  புறப்பட்டு வர்றாங்களோ..." என்று
  ஏதோ அலட்சியமாகப் பார்த்தார்.
  
  
அந்தப் பார்வை ஒரு புழுவைப் 
பார்ப்பதுபோல் இருந்தது.

கைக்குள் அகப்பட்ட புழுவாக உடல் நடுங்கியது.

நடுக்கத்தோடு கீழேவிழுந்து பறந்து போன 
தாள்களை ஒன்று ஒன்றாக
எடுத்து மேசைமேல் வைத்துவிட்டு
மறுபடியும் நாற்காலியில் அமர்ந்து
கொண்டேன்.

 நெஞ்சுக்குழி அடைப்பதுபோல் இருந்தது.
 
 "ஏழு எழுபதுதரம் மன்னிக்கணும்
 என்று சர்ச்சில் கேட்ட 
 பிரசங்கம் நினைவுவர ....இன்னொருமுறை  
 மன்னிப்பு கேட்டுப்பார்"
 என்று மனது என்னோடு மல்லுக்கட்டியது.
  
 " ப்ளீஸ் தெரியாம நடந்துட்டு....
 பழைய நம்பர் கூட 
சேர்த்துடுங்க .....".கண்கள் 
இன்டர்வியூ அறையில் இருந்த
நான்கு பேரையும் பார்த்துக்
கண்ணீரோடு கெஞ்சின.

 என் நிலைமையைப் பார்த்துப்  
 பரிதாபப்பட்ட பெரியவர்
   " ...உனக்கு யாராவது பெரிய 
   ஆட்களை தெரியுமாம்மா..."என்றார்.     
                        
  "யாரைச்சொல்வது....யார் எனக்குத் தெரியும்."
  உதடுகள் பேச மறுத்து அழுகையை அடக்கியதால்
  துடித்துக் கொண்டிருந்தன.
  
 அதைத்தவிர இந்த அப்பாவிக்கு 
 வேறெதுவும் இப்போது சொல்லத் தெரியவில்லை.
 
 ஏதோ குற்றவாளி் கூண்டில் கொண்டு நிறுத்தியிருக்கும்
நிரபராதியைப் போல உடல் முழுவதும்
அவமானத்தால் நைந்து நொந்து போன மனநிலையில்
அமர்ந்திருந்தேன்.

 காட்டிற்குள் போய் தனியாக அமர்ந்து ஓவென்று  
ஒப்பாரிப்போட்டு அழ வேண்டும் போல் இருந்தது.

 எப்படிச் சொல்வது எனக்குத் தெரிந்த 
 பெரிய மனிதர் வாங்கித் தந்த அப்ளிகேசன்தான் 
 இது என்றால் யார் நம்புவார்கள்.
      
சொன்னாலும் "உனக்கு அறிவு எங்க
 போச்சு என்றுதான் கேட்பார்கள் "
 
 அழுதுகொண்டே சற்றுநேரம் கெஞ்சிப்
 பார்த்தேன்.
 
 இதுவரை லீவு வேலைப் பார்த்துக்
 கொண்டிருந்தேன்.
 இந்த நம்பர் சேர்க்கையில் பிந்திவிட்டால்
 என்னால் வேலையில் தொடரமுடியாத
 நிலைமை வந்துவிடும் .
என் நிலைமையை எடுத்துக் கூறியும் 
யாருக்கும் மன்னிக்கும் மனநிலை
இல்லை.

இந்தியாவிலேயே இமாலய குற்றம்
புரிந்த நபர் நான் என்பதுபோல்
ஒரு குற்ற உணர்வு வந்து குமைந்து
எடுத்தது.

இதற்குமேல் என்ன செய்வது என்று
எனக்கும் தெரியவில்லை. 

இன்னும் இருந்தால் கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளி விடுவார்களோ எனத்
தோன்றியது.

முதன்முதலாக ஏன்தான் படித்தேனோ என்று
படிப்பின்மீது ஒரு வெறுப்போடு
தாள்களைத் தூக்கிக் கொண்டு
வெளியேறினேன்.


ஏழு எழுபது முறை மன்னியுங்கள்
என்ற பிரசங்கம் மட்டும் இன்னும் என் காதுகளில்
ஒலித்துக் கொண்டே இருந்தது.

யாருக்காக?
இந்தக் கேள்வியோடு நடந்தேன்.


 
        








            
            

Comments