புலவர் பாடாது வரைக...

புலவர் பாடாது வரைக 


"உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத்தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்துரைப்பது கவிதை"

என்பார் கவிமணி.

ஆனால் கவிதைக்குப் பொய்யழகு

என்று ஒரு கற்பனையான

கருத்தியலை நாம் உருவாக்கி

வைத்திருக்கிறோம்.

அதனால் எந்தப் பாடலைக்

கேட்டாலும் அதில் உண்மை

இருக்காது.மிகைப்படுத்தலாகத்தான்

இருக்கும் என்ற எண்ணத்தில்தான்

படிக்கத் தொடங்குவோம்.

இது கவிதையைப்பற்றி நேற்று இன்று நாளை 

என்று எல்லாக் காலத்திற்கும் 

சேர்த்தே உருவான கருத்தியலா?


இன்றைய புதுக்கவிதைக்கு

மட்டும் உரியதா என்ற கேள்வி

எனக்குள் எழுந்தது.

அதே கருத்து உங்களுக்குள்ளும் 

எழுந்திருக்கலாம்..


அதற்கான விடை தேடலில் ஈடுபட்டபோது

கிடைத்த ஒற்றை வரி இப்படியாக இருக்குமோ என்று இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது.


கண்டிப்பாக இவை காலமாற்றத்தில்

ஏற்பட்ட கருத்தியலாகத்தான் இருக்கும்.

காரணம் "புலவர் பாடாது வரைக

என் நிலவரை " என்ற ஒற்றை வரி.

இந்த வரி என்னை முன்பின் நகர விடாமல் 

அங்கேயே நிற்க வைத்தது.

யார் இதைச் சொன்னது என்பதை

அறிய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

இது வஞ்சினம் உரைத்த ஒரு மன்னன் வாயிலிருந்து வந்த செய்தி.


பொய்யாக புனையப்படும் பாடல்களாக

இருந்தால் இவரில்லை என்றால் வேறு

யாரோ ஒருவர் என்னைப் பாடுவார் என்ற எண்ணம் அந்த  மன்னனுக்கு வந்திருக்குமே...

அப்படி வரவில்லையே...


புலவர்கள் பொருளுக்காகப் பாடுவர்.

புனைந்துரைப்பர். அதில் உண்மை இருக்காது என்ற நினைக்கத் தோன்றவில்லை. நான் போருக்குச் சென்று வெற்றியோடு வருவேன். அப்படி வராது போனால்....

நானும் என் நிலமும் புலவர் பாடும் 

பெருமையை இழந்து போகட்டும்.

எப்படிப்பட்ட தன்னம்பிக்கை வரிகள்.

தலையாலங்கானத்துச் செருவென்ற

நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன்

பாடிய பாடல்தான் இது.

நெடுஞ்செழியன் சிறுவனாக இருக்கும்போதே தந்தையை இழந்து முடிசூட வேண்டிய நிர்ப்பந்தம்.

அந்த வேளையில் தலையாலங்கானம் என்ற இடத்தில் ஒரு போர்ச் சூழல்

ஏற்படுகிறது.

சிற்றரசர்கள் குறுநில மன்னர்கள் என்று

ஏழு பேரை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய சூழல்.


மன்னன் தலைமையில் படைகள் செல்ல வேண்டும்.

மன்னனோ சிறுவன். அவனிடம் எப்படி வீரத்தை எதிர் பார்க்க  முடியும்?

 எதிரிகள் நால்வகைப் படைகளையும் வைத்துக்கொண்டு போரிட தயாராக நிற்கின்றனர்.

அனைவரும் மன்னா தங்களால் கூடாது என்று தடுத்துப் பார்க்கின்றனர்.

அப்போது மன்னன் வெஞ்சினம் கொண்டு பாடியது தான் இந்தப் பாடல். 

பாடல் உங்களுக்காக...

"நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;

இளையன் இவன் என உளையக் கூறிப்

படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்

நெடுநல் யானையும், தேரும், மாவும்,

படைஅமை மறவரும், உடையும் யாம் என்று

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை 

அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு

ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய

என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,

கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,

குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவன் ஆக,

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக, என் நிலவரை;

புரப்போர் புன்கண் கூர,

இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே."


  புறநானூறு பாடல் எண் : 72


எங்களிடம் நால்வகை படைகள் இருக்கின்றன.நீயோ வயதில் எங்களை விடவும் இளையவன்.

உன்னால் எங்களை எப்படி வெற்றி கொள்ள முடியும்?

என்று ஏளனமாக சிரிக்கின்றனர்.

நான் இந்தப் போரில் வெற்றிபெற்று வெற்றி

முரசோடு வருவேன்.

அப்படி ஒருவேளை வெற்றி பெறாது போவேனாயின் மக்களைக் காப்பாற்ற இயலாத மன்னன் என்ற பழி என்னை வந்து

சேரட்டும்.

உலகம் புகழும் மாங்குடி மருதன் என்ற புலவரைத் தலைவராகக் கொண்டு 

இயங்கும் புலவர் பெருமக்கள் என்னையும் என் நாட்டையும் பாடாது நீங்குவாராக.

என்னிடம் கண்ணீரோடு வந்து

இரப்பவருக்கு ஏதும் ஈய இயலாதவன் என்ற வறுமை  என்னை வந்து

சேரட்டும்  "என்று சூழுரைக்கிறான்

மன்னன்.


என்ன ஒரு தன்னம்பிக்கை.!

என்னால் என்னை எதிர்த்து வரும் எழுவரையும் வெற்றி கொள்ளக் கூடும். 

திரும்பி வரும்போது வெற்றி முரசு

என் கையில் இருக்கும்.


அப்படி

கூடாது போனால்....?

கூடாமல் போகாது .போகவே போகாது.


இந்தத் தன்னம்பிக்கை தான் 

பாண்டியன் நெடுஞ்செழியனை

தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில்

வெற்றியடைய செய்தது.


தலையாலங்கானத்துச் செருவென்ற

பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பட்டத்தையும் பெற வைத்தது.


புலவர் பாடுவது அரசனுக்கு மட்டுமல்ல 

நாட்டிற்கே பெருமை சேர்ப்பது என்ற நம்பிக்கை மன்னர்களிடம் இருந்தது

என்பது இந்தப் பாடல் மூலம் தெரிய

வருகிறது.


"மாங்குடி மருதன் தலைவன் ஆக

உலகமொடு நிலைஇய

பலர் புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக என் நிலவரை"


 இது மன்னனுக்கு மட்டுமல்ல புலவர்களுக்கும்  பெருமை சேர்க்கும் 

சிறப்பான வரிகள் இல்லையா?

Comments