தாலாட்டு

தாலாட்டு பாட்டு 


ஆராரோ ஆரிராரோ-என்

ஆனந்தமே ஆராரோ

ஆடிவரும் பூங்காற்றோ _ எம்மை

ஆளவந்த மகராசரோ

ஆராரோ ஆராரோ _ என்

ஆனந்தமே ஆராரோ 


பாட்டி மடியினிலே

பஞ்சு மெத்தை தொட்டினிலே

தாத்தா வருமுன்னே 

தங்கமே நீ கண்ணுறங்கு!


 முத்தமிழே செங்கரும்பே

மூடி வைத்த நறுந்தேனே

செல்லமே என் சிங்கராசாவே

சிணுங்காமல் நீயுறங்கு!


அன்னமே என் அழகு ரதமே

அம்புலியே அதிசயமே

அம்மான் தந்த தொட்டிலிலே

செம்மாந்து நீயுறங்கு!


ஆராரோ ஆராரோ_ என்

ஆனந்தமே ஆராரோ

ஆடிவரும் பூங்காற்றோ_ எம்மை 

ஆள வந்த மகராசரோ

ஆராரோ ஆராரோ _என்

ஆனந்தமே ஆராரோ


அம்மா வரும் வரையில்

ஆச்சி துணை இருந்திடுவேன்

ஆடிவரும் தூலிகையில்

அரசன்போல்  நீயுறங்கு!


புட்டிப்பால் தருவாரோ

போக்குக் காட்டி வைப்பாரோ

பொழுதுமட்டும் கலங்காமல்

பொன்மகனே நீ கண்ணுறங்கு!


அம்மா குரல் கேட்க

அலைபேசி அருகில் வைப்பேன்

அன்னமே என் அழகு ரதமே

அது கேட்டு நீயுறங்கு!


ஆராரோ ஆராரோ_என்

ஆனந்தமே ஆராரோ

ஆடி வரும் பூங்காற்றோ_ எம்மை 

ஆள வந்த மகராசரோ

ஆராரோ ஆராரோ _ என்

ஆனந்தமே ஆராரோ


கலையே என் காவியமே _ உன்னைக்

கன்னமிட்டுச் செல்லாமல்

கண்ணுக்குள்ளே வைத்திருப்பேன்

கனவு கண்டு  நீயுறங்கு!


தங்க தேர்  மாமன்போல

அங்கம் வேண்டுமென்று

அடம்பிடித்து அழுதிடாமல்

ஆதவன்போல் நீயுறங்கு!


பாசமுள்ள மாமன் தந்த

வாசமுள்ள வேஷ்டியிலே

தேசம் ஆளப் பிறந்தனே

தேசிங்கு போல் நீயுறங்கு !



ஆராரோ ஆராரோ _ என்

ஆனந்தமே ஆராரோ

ஆடி வரும் பூங்காற்றோ _ எம்மை

ஆள வந்த மகராசரோ

ஆராரோ ஆராரோ _ என்

ஆனந்தமே ஆராரோ



தொலைதூரம் இருந்தாலும்

தொட்டில் அருகினிலே

தொடர் நினைவாய் உன் தாயிருப்பாள்

தூயவனே  நீ கண்ணுறங்கு!


கதிரவனே கண்மணியே _என்

கற்கண்டே கனியமுதே

கண்ணிமையைச் சாத்தி நீயும்

காத்திராமல் கண்ணுறங்கு!


அஞ்சு மணிக்குள்ளே 

அம்மா அப்பா வந்திடுவார்

அதுவரைக்கும் தியங்காமல்

அம்மாச்சி சொல் கேட்டுறங்கு!


 ஆராரோ ஆராரோ _ என்

 ஆனந்தமே ஆராரோ

 ஆடிவரும் பூங்காற்றோ _எம்மை

 ஆள வந்த மகராசரோ

 ஆராரோ ஆராரோ _என்

 ஆனந்தமே ஆராரோ!





Comments

Popular Posts