நெஞ்சம் திறப்போர் காண்குவர்...
நெஞ்சம் திறப்போர் காண்குவர்....
வாழ்த்துகள் எழுத வார்த்தைகள்
தேடி புறநானூற்றுப் பாடல்களைப்
புரட்டியபோது கண்ணில் பட்டது
ஆத்திரையனார் என்ற புலவர் எழுதிய
ஒரு பாடல்.
எந்தை வாழி என்று தொடங்கிய அந்தப்
பாடல் மறுபடியும் மறுபடியும் என்னை
படிக்கத் தூண்டியது.
சங்ககாலப் புலவர்கள் மன்னர்களைப்
பாடிப் பரிசில் பெற்று செல்வது வழக்கம்.
அப்படிப்பட்ட பல பாடல்களை நாம்
படித்திருக்கிறோம்.
பரிசில் பெறுவதற்காகப் பாடிய பாடல்களாக
இருந்தாலும் தகுதிவாய்ந்த
மன்னர்களை மட்டுமே பாடும்
பண்பு புலவர்களிடம் இருந்தது
என்பது பாடப்பட்ட அரசர்களைப் பற்றிச்
சொல்லப்படும் செய்திகளிலிருந்து நாம்
அறிகிறோம்.
இங்கே புலவர் ஒருவர் அரசனைப் பற்றி
வாழ்த்திப் பாடி இருக்கிறார்.
மன்னன் பெயரைப் பாடலின் முதல்
வரியிலேயே சொல்லிவிட்டார்.
பாடியவர் யார் என்று அறிய வேண்டாமா?
கள்ளில் ஆத்திரையனார் என்பவர்தான்
ஆதனுங்கன் என்ற மன்னனைப்
புகழ்ந்து பாடிய புலவர்.
ஆத்திரையனாருக்கு மன்னன்
ஆதனுங்கன்மீது பேரன்பு உண்டு.
அந்த அன்பை கவியாக்கி
மன்னன் முன் படைக்கிறார்.
பாடல் மன்னனுக்காக....
பாடலின் நயம் நமக்காக.....
"எந்தை வாழி ஆதனுங்க!என்
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே;
நின் யான் மறப்பின்,மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என்னையான் மறப்பின்,மறக்குவன் வென்வேல்
விண் பொரு நெடுங்குடைக்
கொடித்தேர் மோரியர்
விண் கதிர்கள் திகிரி
திரிதரக் குறைந்த
உலக இடைகழி அறைவாய்
நிலைஇய
மலர்வாய் மண்டிலத்து அன்ன
,நாளும்
பலர் புரவு எதிர்ந்த
அறத்துறை நின்னே."
- புறநானூறு
என் தந்தையாக இருந்து எம்மைக்
காக்கும் ஆதனுங்கனே!
என் நெஞ்சைத் திறந்து பார்ப்பவர்
யாரேனும் உண்டெங்கில்
என் இதயத்தில் உன்னை மட்டுமே காண்பர்.
என் இதயம் முழுவதும்
நிறைந்திருப்பவன் நீ!
உன்னை நான் மறப்பேனாகில் அக்கணமே
என் உடலிலிருந்து உயிர் பிரிந்திருக்கும்.
அப்படி என் உயிர் பிரியும் வேளையிலும்
என்னை நான் மறப்பேனே ஒழிய
உன்னை நான் ஒருபோதும் மறவேன்.
முதல் நான்கு வரிகளிலும்
இதுவல்லவோ உண்மையான அன்பு
என்று சொல்லிச் சொல்லிப்
பெருமிதம் கொள்ள வைத்துவிட்டார்
ஆத்திரையனார்.
அடுத்த நான்கு வரிகளிலும்
மன்னனின் அறத்தைப் பற்றிப் பேசுகிறார்.
விண் பொரு நெடுங்குடை க்
கொடித்தேர் மோரியர்
திண் கதிர்கள் திகிரி
திரிதரக் குறைந்த
உலக இடைகழி அறைவாய்
நிலைஇய
மலர்வாய் மண்டிலத்து அன்ன,
நாளும்
பலர் புரவு எதிர்ந்த
அற த் துறை நின்னே."
ஆதனுங்கன் உணவு வழங்கும்
அறச்சாலை போன்றவனாம்.
மௌரியர் தம் தேர்ப்படையோடு
தெற்கு நோக்கி வந்தபோது
அவர்கள் தேர்ச்சக்கரம் உருளுவதற்காக
பாதை அமைக்கப்பட்டதாம்.
அந்தப் பாதை மலை வழியாக
இருந்ததால் நேர் வழியாக இல்லை.
அந்த வழியானது வளைந்தும் நெளிந்தும்
இடைக்கழி வழியாக செல்லுமாம்.
அதற்கு' அறைவாய் 'என்றொரு பெயரும்
உண்டாம். அந்த அறைவாய் வழியாக
சூரியன் தோன்றும் காட்சி எப்படி
இருக்கும்?
அதுபோன்று காணக்கிடைக்காத அரிய காட்சியாக எங்களுக்குக்
கிடைத்தவன்தான்
என் மன்னன் ஆதனுங்கன்.
அறைவாய் வழி தெரியும் ஆதவன்
என்று சொல்லி கடந்து போகவில்லை.
எம் மன்னன் அறச்சாலை போன்றவன்.
மௌரியர் வரும் வழி எங்கிலும்
அமைக்கப்பட்டிருந்த அறச்சாலை போன்று
தன்னை நாடி வருபவர் அனைவர்க்கும்
உணவளிக்கும் அறச்சாலையாக இருப்பவன்.
மன்னனே அறச்சாலையாக இருக்கும் போது மக்களுக்கு பசிப்பிணி இருக்கவா போகிறது?
வெறும் அறச்சாலை என்று கூறாமல் வீரர்களுக்கு உணவளிக்கும் அக்கால அறச்சாலையோடு
ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார்
ஆத்திரையனார்.
அருமையான ஒப்புமை இல்லையா?
மன்னனையும் புகழ வேண்டும்.
அவன் தன்னுள் நீக்கமற
நிறைந்திருப்பவன் என்பதையும்
சொல்ல வேண்டும்.
தன் நெஞ்சைப் பிளந்து காட்டி
என்னுள் இருப்பவன் நீ....நீ மட்டுமே
என்பதைச் சொல்ல வேண்டும்.
அதனை எவ்வளவு உணர்வுப்பூர்வமாகச்
சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
என்னை மறப்பினும் மறப்பேன்.
நின்னை நான் ஒருபோதும்
மறந்திட மாட்டேன்.
நின்னை மறந்தால்
என்னுயிர் பிரியும்.
எவ்வளவு நெருக்கம் இருந்தால்
இப்படி எழுதியிருப்பார்!
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட
வேண்டிய வரிகள்.
Comments
Post a Comment