தக்காளி
தக்காளி
டாலரை விஞ்சி விட்ட
தக்காளியே
யூரோவைத் தாண்டி
எட்டடி தள்ளி நின்று
எட்டிப் பார்த்து
மெல்லக் கண்சிமிட்டி
கள்ளவிளையாட்டு
காட்டுவதில் யாது நீ
ஞாயம் கண்டாய்?
கனிந்த முகம் பார்த்து
கன்னல் கனியமுதம்
கன்னத்தில் முத்தமிட்டு
கன்னிவாய்ச் சிவக்க
கடித்த நாட்களை
நினைத்துப் பார்க்கிறேன்
அந்நாள் நினைவுகளில்
செம்மலர் உன் நினைவில்
உள்ளம் நைந்து
உருக்குலைந்து போகிறேன்!
தகதகக்கும் நின்னுரு
காணாது தன்னுரு இழந்து
தன்னிலை மறந்து
வெந்நீராய்க் கொதிக்கிறது
என் வீட்டுக் குழம்பு!
நீயோ உன்னிலை மறந்து
என்னிலை துறந்து
அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி
ஆலோகணம் பாடுகின்றாய்!
எளியவர் எம் பக்கம்
எட்டிப் பார்ப்பதெப்போது?
எம்வீட்டுக் குழம்பு
எட்டும் தொலைவு மட்டும்
உன் மணம் சொல்லி
பெருமைப் பேசும் தப்பாது
தேவதை நின் திருமுகத்
தரிசனம் வேண்டும்
எமக்கு இப்போது!
வானம் திறந்திருந்ததால்
வாட்டம் கொண்டாயோ?
மாடி வீடெல்லாம்
தோட்டமானதால் மண்ணில்
வாழத் தோதில்லையென்று
மாய்ந்துத்தான் போனாயோ?
ஊரெங்கும் தேடுகிறேன்|
உன் தரிசனம் எனக்கில்லை
தக்காளியன்ன கன்னத்தாள்
கன்னம் கன்னி
கன்னத்தில் கைவைத்து
கடுங்கவலையில் கிடக்கின்றாள்
இன்னும் உங்களுக்குள்
ஏனிந்த ஊடல்?
கனிந்து மனமிறங்கி
கண் திறந்துப் பாராயோ?
காதல் மனையாள்
கண்ணுக் கினியாள்
கைவண்ணம் கறிச்சுவைக்
கூட்ட வந்திரக்கம்
காட்டாயோ?
அங்கை சிவக்க
வல்லிக் கொடியாள்
அள்ளி அணைத்துன்னை
ஆனந்த சமையல்
செய்திடட்டும்
அன்பர் வயிறார உண்டு
வாயார வாழ்த்தும் வரம்
உனக்கு மட்டும்
வாய்க்கட்டும்
உண்டாட்டு செய்து
உலகம் கொண்டாடட்டும்!
Comments
Post a Comment