குயில் பாட்டு
குயில் பாட்டு
சொல்ல முடியாத
சோகங்கள்
மீள முடியாத
தோல்விகள்
தாங்க முடியாத
அவமானங்கள்
இவைதான்
வாழ்க்கையா?
தடுமாற்றங்கள்
தடமாற்றங்கள்
விழிகள் நீர் சிந்த
விடை தெரியாக் கலக்கம்
உள்ளம் உளைச்சலில்
உள்ளிருந்து புலம்ப
எங்கிருந்தோ கேட்டதொரு
இன்பத் தேன்குரல்
குரல் வந்த
வழி நோக்கி
விழி உயர்த்திப் பார்த்தேன்
அருகிலுள்ள
தென்னை மரத்தில்
ஆடிக்கொண்டிருக்கும்
தென்னங்கீற்றுக்
கிடையில் தெரிந்ததொரு
கருமை உருவம்
கருமை வெறுமை
எதுவும் என்னைப்
பாதிப்பதில்லை
கண்களில் கவினுண்டு
குரலின் தேனினிமை கொண்டு
பாடிக்கொண்டிருந்தது குயில்
தென்னம்மட்டை
தெற்குப் வடக்கு மார்ச்
சாய்ந்தாட
சரிந்து
சாய்ந்து விழுந்து
மாய்ந்து போவோமோ?
மானிடர் கையில்
அகப்பட்டு
அடைபட்டு போவேனோ?
அச்சம்
குயிலின் குரலை
தடுமாற வைக்கவில்லை
வீசும் காற்று
விழத்தட்டி
வேடிக்கை பார்க்குமோ ?
குழப்பம் கிஞ்சித்தும்
இருப்பதாகத்
தெரியவில்லை
ஓவென்று
ஒப்பாரி வைக்கும்
ஓலைகளால்
குரலுக்கு
அவமானம்
நேர்ந்திடுமோ ?
கலக்கம்
கடுகளவேனும்
இருக்கவில்லை
அந்நியன் வீட்டிலிருந்து
ஆனந்த ராகம்
இசைக்கிறோமே
இப்படியொரு எண்ணம்
குரலில் எங்கேயும்
தெரியவில்லை
யாரை நம்பி
இத்தனை தெனாவெட்டாகப்
பாடிக் கொண்டிருக்கிறது?
நடப்பது நடக்கட்டும்
நாம் நாமாக இருப்போம்
என்ற உறுதி
நல்லதொரு சுருதி
உள்ளத்தை அள்ளும்
மகிழ்வலை மிகுதி
குயிலின் பாதையில்
வேறெது குறுக்கே
வரவிடாமல் தடுத்திருக்கும்?
குயிலுக்குத் தெரிந்த
மந்திரத்தை மகிழ்ச்சியாக
கூவி உரைக்கிறது
விழி நீரைத் துடை
புலம்பலைப்
புதுக்கவிதையாக்கு
புன்னகையோடு நாளைத்
தொடங்கு
வாழ்க்கை வசந்தமாகும்
வார்த்தைகள்
வாய்க்குள் வர முடியாமல்
முட்டி மோத
உயரத்திலிருந்து
ஆமென்று மறுபடியும்
ஆனந்தக் குரலில்
பதிலுரைத்துப்
பாடம் சொல்லிப்
பறந்து சென்றது குயில்!
Comments
Post a Comment