வைகறை துயிலெழு
வைகறை துயிலெழு
அதிகாலையிலேயே எழும்பணுமா
என்னால் எல்லாம் முடியாதுப்பா...
எட்டுமணி வரை யாராவது கிட்ட வந்தா எட்டி உதைச்சுடுவேன் "
என்று சொல்லும் பிள்ளைகள்
வாழும் காலம் இது.
இப்போது "வைகறைத் துயிலெழு"
என்று சொல்வது சாத்தியப்படுமா?
வேண்டாமப்பா உங்கள் துயிலெழு படலம் என்று புலம்பலா...?
எவ்வளவு நேரம் தான் தூங்கிக்
கொண்டே இருப்பது?
தூங்குவதற்கும் ஓர் அளவு வேண்டாமா?
தூங்கலுக்கும் அளவா...?
எத்தனை நாளைக்குத்தான் இந்த புலம்பலும் சிணுங்கலும்.
அதிகாலையிலேயே எழும்பித்தான்
ஆக வேண்டும்.
இதை நான் சொல்லவில்லை.
யார் சொல்கிறார் என்று கேளுங்கள்.
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று
படுக்கையில் கிடந்தால் "சோம்பேறியே எறும்பினிடத்துப் போய் கற்றுக்கொள் "என்று எறும்பின் இடத்தில் பாடம் கற்க
அனுப்பிவிடுவார்கள்.
அதிகாலையில் எழும்பும் பழக்கம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைத்த முதல் வெற்றி.
வெற்றி பெற்ற அனைவருமே அதிகாலை எழும்பும் பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
எழுத்தாளர்களாகவோ விளையாட்டு வீரர்களாகவோ தொழில் முனைவோர்களாகவோ இருக்கிற யாரானாலும் தங்கள் வெற்றிக்கான முதல் காரணம் அதிகாலையிலேயே எழும்பி அன்றன்று செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு அதன்படி நடப்பதாகத்தான் கூறுவார்கள்.
சோம்பல் நம் வெற்றிக்குப் பல வழிகளில் முடிடுக்கட்டையாக
வந்து நிற்கும்.
"சோம்பேறியே நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய் ? இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்...இன்னும் கொஞ்சம் கைமுடங்கி நித்திரை செய்யட்டும் என்பாயோ ! உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப் போலவும் வரும் "என்கிறது பைபிள்.
சோம்பல் வறுமையில் கொண்டு விட்டுவிடும்.
எட்டுமணிநேர தூக்கம் போதுமானது.
அதற்கு மேலும் அப்படி என்ன தூக்கம்.?
தமிழ் இலக்கணத்தில் பெரும் பொழுது சிறு பொழுது என காலமும் நேரமும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் பெரும்பொழுது என்பது ஆண்டின் பொழுதுகளைக் குறிப்பதாகும்.அதாவது பருவ காலங்களாகும்.
பருவகாலங்கள் கார் பருவம், கூதிர் பருவம் அதாவது குளிர் பருவம், முன் பனிக்காலம் , பின் பனிக்காலம் , இளவேனிற்காலம் , முதுவேனிற் காலம் என ஆறாக பகுக்கப்பட்டுள்ளன.
அதுபோல சிறு பொழுதும் ஆறாக பகுக்கப்பட்டுள்ளது.
சிறுபொழுது என்பது நாளின் ஆறு கூறுபாடுகளைக் குறிப்பது.
வைகறை என்பது அதிகாலை இரண்டு மணிமுதல் ஆறுமணி வரை உள்ள நேரம்.
கதிரவன் தோன்றுவதற்குமுன் இரவுப்பொழுதின் இறுதிப் பகுதி.
காலை என்பது காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை உள்ள நேரம்.
நண்பகல் என்பது பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை உள்ள நேரம்.
எற்பாடு என்பது பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை உள்ள நேரம்.
அதாவது பகற்பொழுதின் இறுதிப் பகுதி. கதிரவன் மறைகின்ற காலம் வரை உள்ள நேரம் .
மாலை என்பது பிற்பகல் ஆறுமணிமுதல் பத்து மணிவரை உள்ள நேரம்.
யாமம் என்பது இரவு பத்து மணிமுதல் மறுநாள் இரண்டுமணி வரை உள்ள நேரம்.
அதாவது நள்ளிரவு. இரவுப் பொழுதின் நடுப்பகுதி.
இப்போது இந்த ஆறு பொழுதுகளில் நாம் எழும்ப வேண்டிய நேரம் வைகறை .
அதிகாலை இரண்டு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எழும்பிவிட வேண்டும்.
இரண்டு மணிக்கா.... ?அர்த்த ராத்திரியில எழும்பணுமா....?
என்னால் எல்லாம் கூடாதப்பா என்கிறீர்களா?
ஏன் கூடாது?
சரி விட்டுவிடுங்கள்.
நான்கு மணிக்கு எழும்பினால்கூட போதுமானது.
அதுவும் முடிகிற காரியமா. ...என்கிறீர்களா...?
ஏன் முடியாது... முயன்றுதான் பார்ப்போமே!
அதிகாலை எழும்பும் பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாம்.
அதிகாலை காற்று தூய்மையாக இருக்கும்.
தூய்மையான காற்றை உள்வாங்கும்போது உடலில் மட்டுமன்றி மனதிலும் புத்துணர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காகம், குயில் ,குருவி ,கிளி என எல்லா பறவைகளுமே அதிகாலை எழும்பும் பழக்கம் கொண்டவை என பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த நேரத்தில் ஆகாயத்திலிருந்து ஒரு சக்தி கிடைக்குமாம்.
அது பறவைகள் அந்த நாள் முழுவதுக்குமான புத்துணர்வைப் பெற உதவியாக இருக்குமாம்.
கிராமங்களில் சாமக்கோழி என்று ஒன்று அலாரம் அடித்தது போல் கூவி முதல் குரல் கொடுத்து மக்களை எழுப்பும்.
அதன் பின்னர் ஒரு ஒருமணி நேரம் கழித்துதான் வழக்கமாக கூவும் சேவல்கள் கூவுவதைக் கேட்க முடியும்.
அதிகாலை ஒரு மூன்றுமணிக்குப் பிறகு குருவிகள் கலைவது போன்ற ஒரு சப்தம் எழும்.இதுவும் கிராமங்களில்
கேட்டிருக்கலாம்.
இவை எல்லாம் பறவைகள் தங்களை அந்த நாளுக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறியாம்.
அண்ட வெளியிலுள்ள சக்தியை உள்வாங்கும் நேரம் வைகறையாகும். அதன் மூலமாக பறவைகளால் பகல் முழுவதும் சோர்வில்லாமல் பறக்க முடிகிறது.
புத்துணர்ச்சியோடு இரை தேட முடிகிறது.
பாட்டுப் பாட முடிகிறது.
இப்படிப் பறவைகளுக்கான எல்லா செயல்களும் செய்யும் சக்தி
வைகறையில்எழுவதால்தான் கிடைக்கிறது என்கிறார்கள் பறவை ஆர்வலர்கள்.
பறவைகளே அந்தந்த நாளுக்கான முன்னேற்பாட்டோடு செயல்படும்போது ....
ஆறறிவுள்ள நாம் மட்டும் நமக்கான நாளுக்காக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டாமா ...?
நம் உடம்பில் 206 எலும்புகள் உள்ளன.
அவை 50% தசையால் கட்டப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த 50% தசையின் இயக்கம் உறுதியாக இருக்கும்போதுதான்
உடல் ஆரோக்கியமாக இருக்கும். தசையில் தொய்வு ஏற்பட்டால்...
உடல் தொய்வடைந்துவிடும்.
அதற்கான பயிற்சிகளை அதிகாலையிலேயே எடுத்துக் கொள்வது அவசியம்.
அதிகாலை உடற்பயிற்சி , மனப்பயிற்சி செய்யும்போது அந்த நாள்
முழுவதும் உற்சாகமாக கடந்து போக முடியும்.
அதிகாலை நேரத்தில்தான் நுரையீரல் முழு ஆற்றலோடு இயங்குமாம். நுரையீரலின் இயக்கம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையார் கண்ட முறை "
என்கிறது ஆசாரக்கோவை என்னும் நூல்.
வைகறையில் எழும்பி நல்லகாரியங்களைப் பற்றி சிந்தித்து
இன்றைய நாளில் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி பட்டியலிடவேண்டும்.
தாய்தந்தையரை வணங்கி எழும்புதல் வேண்டும். இதுதான் நம் முன்னோர் காலம் காலமாக செய்து வரும் ஒழுக்கமுறை என்கிறது ஆசாரக்கோவை.
:"காலையில் எழுந்ததும் நல்லப் படிப்பு" என்றார் பாரதியார்.
காலையில் படித்தால் மனதில் தெளிவாகப் பதியும்.
காலையில் எழுதுங்கள். கோவையாக எழுத முடியும். சிந்திக்கும் ஆற்றல் மிகுந்திருக்கும்.
"அமுதக்காற்று வீசும் வேளை வைகறை" என்பது வள்ளலார் கருத்து.
வைகறையில் எழும்பும் பழக்கம்
உடல் நலம் மனநலம் பெற உதவும்.
உடலும்உள்ளமும் நலமாக இருந்தால்
செய்யும் செயலில் ஆர்வமிருக்கும்.
ஆர்வத்தோடு செய்யும் செயல்
வெற்றியைக் கொடுக்கும்.
வாழ்வில் வெற்றிபெற
வைகறையில் எழும்பும் பழக்கத்தை
உண்டாக்குவோம்.
வாழும் கலை அறிந்து நடப்போம்.
வாழ்வின் வெற்றிகளை நமதாக்கிக் கொள்வோம்.
Comments
Post a Comment