அம்மா
அம்மா...!
இந்தச் சொல்தான் எத்துணை இனிமை!
முதலும் முடிவுமாய் நம்மோடு
பயணமாகும் இந்தச் சொல்லை
எத்தனை நாள் எத்தனை இடங்களில்
உச்சரித்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?
ஓராயிராம் முறை....
இல்லை....இல்லை .
ஒரு கோடி முறை....
ம்கூம்....
எண்ண முடியாத நாட்கள்?
அதுவும் இல்லை.
ஒருநாளும் இல்லை.
அம்மா என்று ஒருநாளும்
நான் அழைத்ததில்லை.
என்ன அம்மா என்று அழைத்ததில்லையா?
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!
இங்கே அம்மா என்று அழைக்காத
ஓர் உயிருள்ளதே!
அம்மா.....அம்மா....
நீ சுமந்த பிள்ளை
பொய் சொல்லும் கிள்ளை
என்று புலம்பணும்போல் இருக்கிறதல்லவா!
பொய்யுமில்லை புரட்டுமில்லை
மெய்யாலுமே அதுதாங்க உண்மை
உண்மையா?
நம்பமுடியவில்லை...வில்லை.
அதுதானே உங்கள் உள்ளத்தின்
ஒலி.
என் காதுவரை கேட்குதுங்க....
நான் ஒருமுறைகூட அம்மா
என்று கூப்பிட்டதில்லை.
ஏன்?
அம்மா என்றால் உங்களுக்குப்
பிடிக்காதா என்பீர்கள்?
அம்மா என்றால் பிடிக்காதோர் உலகில்
உளரோ?
அம்மா என்று கூப்பிட்டதில்லை என்கிறீர்கள்.
பிடிக்கும் என்கிறீர்கள்....
ஒரே குழப்பமாக இருக்கிறதில்லையா?
இந்தக் குழப்பம்தாங்க நான்
அம்மா என்று கூப்பிடாததற்குக் காரணம்.
எம்மோ..!எம்மோ....என்று மூச்சுக்கு மூச்சு
பேச்சுக்குப் பேச்சு ....சொல்லும் நான்
அம்மா என்று ஒருபோதும் அழைத்ததில்லை .
"எம்மோ வா "என்று ஒருமையில்
அழைப்பேன்.
அம்மாவை ஒருமையில் அழைப்பது
மரியாதைக் குறைவு என்று பள்ளியில்
ஆசிரியர் சொல்லித் தந்தபோது
அதை ஏற்க என் மனம் மறுத்தது.
அம்மாவை ஒருமையில் அழைப்பதில்தான்
ஒரு நெருக்கம் இருக்கிறது என்று வாதிடுவேன்.
நீங்க வாங்க...போங்க...என்றால் அம்மா
அந்நியப்பட்டுப் போவது போன்ற
நினைப்பு....அப்படி ஒரு நம்பிக்கை.
அண்ணன் கல்லூரியில் படித்துவிட்டு
விடுமுறையில் ஊர் திரும்பி வந்ததும்
அம்மா வாங்க.....உங்களுக்கு என்ன வேணும்?
என்று கேட்டான்.
அப்படியே அசந்து போய் நின்றேன்.
எம்மோ மினுக்குறான்ம்மோ....
மினுக்குறான்....மினுக்குறான்....
சென்னைக்குச் போயிட்டு வந்ததும்
எப்படி மினுக்குறான் பாரு.....
என்று மரியாதையாக
அழைப்பதை ஒரு குற்றமாகவே பதிவு
பண்ணியிருக்கிறேன்.
சண்டை போட்டிருக்கிறேன்.
அது என்னவோ தெரியலைங்க...
எம்மோ... அந்த ஒற்றை வார்த்தையில்
அப்படியே கரைந்து போறேங்க....
எம்மோ ....எம்மோ....எத்தனை முறை
அழைத்தாலும்
ஐயோ....என்ன சொல்ல ?
எப்படி சொல்ல.....?
அந்த உணர்வை வெளிப்படுத்த
வார்த்தையே இல்லைங்க.
அப்படியே அந்தச் சொல்லில் நான்
தொலைந்து போவேங்க.
எம்மோ எதுக்கு வரல?
எம்மோ தாயேன்....?
எத்தனைமுறை
கேட்கிறேன். ஒரு பத்து ரூபாய் தாயேன்
கேட்டுக் கேட்டுக் கெஞ்சிய நாட்கள்....
எம்மோ நான் சொல்லிபுட்டேன்...
சொல்லி சுட்டேன்.
எனக்கு இந்த கிறிஸ்துமஸ்க்கு
எல்லாரையும் விட விலைகூடுன
சேலை வேணும்...வேணும்...வேணும்...
எம்மோ மறந்துடாத....மறந்துடாத
கறாராகப் பேசிய
நாட்கள்......
பிடிவாதம் பிடித்த நாட்கள்.
எம்மோ...எம்மோ
இன்றுவரை என்னோடு என்
எம்மோ என் நினைவில் மட்டுமே!
நான் மட்டுமல்ல... ஒவ்வொருவரும்
அம்மாவின் நம்மைத் தொலைய வைத்த
சொல் இருக்கத்தான் செய்யும்...
என்றே
ஒரு செல்லப்பெயர் வைத்திருப்போம்.
எனக்குத் தெரிந்த ஒரு தோழி
அவள் அம்மாவிடம் பணம் கேட்க வேண்டும்
என்றால்...
செல்லம்மா...தினம் உரை நம்பி
இருப்பது அறி
அந்த வார்த்தையில் அழைத்தால் தான்
மனதுக்கு நிறைவாக இருக்கும்.
அந்த நினைவு....அந்தநாள்...
அந்த ஸ்பரிசம்....அந்தச் சிணுங்கல்...
அந்தக் கோபம்....அந்தச் சண்டை
அப்பப்பா அம்மாவுக்கும் எனக்கும் இடையில்
என்னென்னவெல்லாம் நடந்திருக்கிறது.
என்னைப்போலவே உங்களுக்கும்
அம்மாவோடு சிணுங்கல்...கொஞ்சல்...
கோபம்.....சண்டை ...கெஞ்சல் என்று
என்னனென்னவெல்லாமோ நடந்திருக்கும்.
அந்த ஒற்றை உயிரோடு
நமக்குள்ள உணர்வுப்பூர்வமான
பிணைப்புதாங்க
நம்மில் பலரை இன்றுவரை கீழே
விழாதபடி தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இன்று நினைத்தாலும் அந்தக் கோபமும்
சண்டையும் சிணுங்கலும்
என்னை சிலிர்க்க வைக்கிறது.
சிரிக்க வைக்கிறது.
சிந்திக்க வைக்கிறது.
அதுதாங்க அம்மா....இல்லை இல்லை என்
எம்மோ.
எம்மோ உன் நினைவுதான்
எத்தனை இன்பம்.
சும்மா நான் போட்டிட்ட
சண்டைகள் பொய் பிம்பம்
வைக்கோலால் நீ அடித்த அடி
வலித்தது கொஞ்சம்
தோள்சேலையால் மூடியபோது
அதை மறந்தது நெஞ்சம்
உன்னோடு வாழ்ந்த காலம்
நினைவினில் கொஞ்சும்
துயர் வரும் காலம்
நீதானே எம்மோ என் தஞ்சம்
உன் கையால் உண்ட உணவு
அறுசுவையை விஞ்சும்
அன்புக்கு உன்னிடம் இல்லை
ஒருபோதும் பஞ்சம்
எம்மோவுக்கும் எனக்கும்
இருப்பது வார்த்தையால்
சொல்ல முடியாதொரு பச்சம்
மிச்சம் எச்சம் இல்லாத
வஞ்சமில்லா
எம்மோவின் கொஞ்சலுக்காய்
ஏங்குது என் நெஞ்சம்.
கஞ்சமில்லா அன்புக்காரி
Comments
Post a Comment