வாடி இருக்குமாம் கொக்கு

வாடி இருக்குமாம் கொக்கு 


மௌனம் ஓர் அழகான மொழி

என்று சொல்வார்கள்.

எல்லாராலும் அமைதியாகவும்

மௌனமாகவும் இருந்துவிட

முடியாது.


மௌனமாக இருப்பது கூட

அறிவுள்ள ஒருவர்க்கு மட்டுமே

 இயலக்கூடிய

ஒன்று

அமைதியாக இருக்கும் ஒருவரை

அலட்சியமாக எண்ணிவிட வேண்டாம்.

அடக்கமாக இருப்பதால் எல்லாவற்றிற்கும்

அடங்கிப் போய்விடுவார்

என்று  தவறாக எண்ணிவிடவும்

வேண்டாம்.


அந்த அமைதிக்கும் அடக்கத்திற்கும்

காரணம் தேவையில்லாத இடத்தில்

பேசுவதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம்.

சாதகமான சூழலுக்காகக் 

காத்திருப்பதற்காகவும்

இருக்கலாம்.



சாதகமான சூழல் என்றதும் 

ஒற்றைக்காலில் தவமிருக்கும்

கொக்குதான் கண்முன் வந்து

நிற்கிறது.


கொக்கு ஒருபோதும் மற்ற 

பறவைகளைப் போன்று பரபரப்பாக

சுற்றிக்கொண்டு திரியாது.

வயலோரமாகவோ குளத்தோரமாகவோ 

ஒன்றுமே தெரியாதது போல

ஒற்றைக்காலில் நின்று 

கொண்டிருக்கும்.


எதிலும் கவனம் செலுத்தாதது போலவே

நின்றிருப்பதால்

மீன்குஞ்சுகள் கொக்கின் கண்

 முன்னாலேயே நீரில் நீச்சலடித்து

 விளையாடும். ஆனால் கொக்கு இதனைக்

 கண்டுகொள்வதே மில்லை.

 அதனால் மீன்களுக்குக் கொக்கு

 மீதுள்ள அச்சம் முற்றிலுமாகக்

 குறைந்திருக்கும்.


அப்போது பெரிய மீன் ஒன்று வர

அவ்வளவுதான்.

ஒரே பாய்ச்சலில் மீனைக் கொத்திக்

கொண்டு கொக்கு பறந்துவிடும்.



இப்படியொரு காட்சியை

நம் கண்முன் கொண்டு வர வேண்டும்.

அந்தக் காட்சி நமக்குச் சொல்லித் தரும்

பாடம் ஒன்று உள்ளது என்பதை நமக்கு

உணர்த்த வேண்டும் என்ற நோக்கோடு

மூதுரையில் ஔவை ஒரு பாடல்

எழுதியுள்ளார்.


நம் கண்களில் காட்சிப்பொருளாக

வந்து வந்து போகும் கொக்கு பற்றிய

அந்தப் பாடல் உங்களுக்காக...



"அடக்கம் உடையார் அறிவிலர்

என்றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா-

மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு "



 மூதுரை பாடல் :. 16



"கொக்கானது 

தலைமடை அருகில்  சிறுமீன்கள்

நீந்திக் கொண்டிருக்கும்போது

அவற்றைக் கண்டுகொள்ளாது 

பெரிய மீன் வரும்வரை வாட்டமாக

நின்று கொண்டிருக்கும்.


அதுபோல அறிவுடையோர்

அடக்கமாக இருப்பதால்

அவரை மிஞ்சிய அறிவு தனக்கு உண்டு

அதனால்

அவரை எளிதில் வென்றுவிடலாம்

என்று எண்ண வேண்டாம்."

என்கிறார் ஔவை.


அறிவு அடக்கமாக இருக்கும்.

அதிகம் அலட்டிக் கொள்ளாது.

அதனைப் புரியாமல் முந்திக்கொள்ள

நினைத்தால் மீனுக்கு ஏற்பட்ட

நிலைதான் ஏற்படும்.

மீனுக்கு என்ன நிலை ஏற்பட்டது?

அதுதான் முந்தி வந்து சிறுமீன் எல்லாம் 

ஓடவிட்டு வேடிக்கைப் பார்த்துவிட்டு 

வாடித்தானே கொக்கு ஒற்றைக்காலில் தவம் இருந்து கொண்டிருக்கிறது.

இதிலென்ன பெருமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?


அதில்தான் பெருமை இருக்கிறது.

சின்ன மீனெல்ல்லாம் வேண்டாம் 

என்று கொக்கு விட்டுவிடுவதைப்

பார்த்ததும் பெரிய மீனுக்கு தெனாவெட்டு 

வந்து விடும்.

இந்தக் கொக்கு கையாலாகாத ஒன்று.

இதுக்கு மீன் பிடிக்கவும் தெரியாது.

கடிக்கவும் தெரியாது என்ற முடிவோடு

கொக்கின் கண் முன்னே அங்குமிங்கும் சுற்றும். அந்த நேரம் பார்த்து 

கொக்கு அலேக்கா தூக்கிட்டு பறந்து

போய்விடும்.

இது மாதிரி அறிவாளிகளின்

அடக்கமாக இருப்பதற்கு ப் பின்னால் ஒரு காரணம் இருக்கும்.மீனை மாதிரி நீங்களும் தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்.. அது தவறாக முடியும் 

என்கிறார்.


யாருக்கும் யாருக்கும் முடிச்சுப் போட்டு

பாடலை கொண்டு சென்றிருக்கிறார்

 ஔவை என்று  பாருங்கள்.

 அந்த முடிச்சோடு நம்மையும் 

சேர்த்து கட்டி இழுத்துச்

சென்றுவிட்டார்.


அருமையான உவமை.

காட்சிகளைக் கண்முன் கொண்டு

வந்து நிறுத்தி,உண்மைதான் என்று நம்மை ஒப்புக்கொள்ள வைத்து

பாடலோடு ஒன்ற வைத்துவிட்டார்.

கண்முன்னே  ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கை கொண்டு வந்து

நிறுத்தி, சொல்ல வந்த கருத்தை மனங்கொள்ளச் சொல்லிச் சென்றிருக்கிறார் ஔவை.


இனி ,

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு"

என்ற பாடல் வரிகளை

விட்டுவிட்டு எளிதில் நம்மால்

கடந்து போய்விடக் கூடுமா என்ன!





Comments