பாரதிதாசன் பார்வையில் தமிழ்
முன்னுரை
"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை"என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகள், தமிழ் மொழியின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான பற்றையும், தமிழுக்காக வாழ வேண்டும் என்ற அவரது இலட்சியத்தையும் வெளிப்படுத்துகின்றன.பாரதிதாசன், தமிழின் பெருமையைப் பாடியதோடு நின்றுவிடாமல், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். அவர் தமிழ்மீது கொண்ட காதல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சங்கே முழங்கு
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பாடல் இன்றும் தமிழ் உள்ளங்களில் எதிரொலிக்கும் இசையாகும்.தமிழ்ப் பேச்சுக்களிலும் தமிழர்களின் உரையாடல்களிலும் பாரதிதாசனின் இந்த வரிகள் உணர்ச்சியை தூண்டும்படி அழுத்தமான ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
தமிழ் என் உயிர்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
என்றார் பாரதிதாசன்.
பாரதிதாசனின் கவிதைகளில் தமிழ் ஒரு மொழியாக மட்டும் உருவகப்படுத்தப்படவில்லை. உயிராக உணர்வாக தமிழினத்தின் தனி அடையாளமாக இருக்கிறது என்பதுசொல்லப்பட்டிருக்கும்.
தமிழுக்குத் தனிப்பெயர்கள் சூட்டியவர்
தனித்தமிழுக்குத் தனித்தனி பெயர் சூட்டி அழகு பார்த்தவர் பாரதிதாசன்.
தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என்று தமிழைத் தாயாக தேனாகஉயிராக
அறிவாக வானாகத் தேனாக
பாலாக ஊராக உறவாக நீராக
உயர்வாக உயிராக உணர்வாகக் கொண்டாடி மகிழ்ந்தவர்பாரதிதாசன்
பாரதிதாசனின் மொழிப்பற்று உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் அளவுக்கு ஆழமானது.
தாய்மொழிக் கல்வி
தாய்மொழி வழிக் கல்வியின் அவசியத்தை பாரதிதாசன் வலியுறுத்தினார். குழந்தைகள் தங்கள் சிந்தனையைத் தெளிவாக வளர்த்துக்கொள்ள தாய்மொழிக் கல்வி பெரிதும் துணைபுரியும் என்று நம்பினார்.
தமிழில் கல்வி, அறிவியல், கலை, இலக்கியம் என அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்பதே அவரது கனவு.
“தமிழை வளர்ப்போம்! தமிழை வளர்ப்போம்!”
என்ற உணர்வோடு அவர் தம் படைப்புகள் அனைத்திலும் தமிழுணர்வை விதைத்துக்கொண்டே வந்தார்.
இனப்பற்று மிக்கவர்
பாரதிதாசனிடம் மொழிப்பற்று என்பது வெறும் மொழியின் மீது கொண்ட காதலாக இருக்கவில்லை. அது இனத்தின் உரிமை, பண்பாட்டின் பாதுகாப்பு, சமூகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றோடு இணைந்திருந்தது.
தமிழ் மொழி வளர வேண்டும் என்றால் தமிழர்கள் கல்வியிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும் என்று கருதினார்.
அதனால் அவரது கவிதைகளில் மொழிப்பற்றுடன் சமத்துவம், பகுத்தறிவு, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சமூகநீதி போன்ற சிந்தனைகளும் இணைந்து காணப்படுகின்றன.
தமிழின் தனித்தன்மை
பாரதிதாசன் தமிழின் தனித்தன்மையைப் பெரிதும் வலியுறுத்தினார். தேவையற்ற பிறமொழிக் கலப்பைத் தவிர்த்து, தமிழின் சொல்வளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தமது படைப்புகளில் வலியுறுத்தினார்.
தமிழின் தொன்மையையும் செழுமையையும் போற்றிய அவர், அதே நேரத்தில் தமிழ் புதுமையை ஏற்றுக்கொண்டு காலத்திற்கேற்ப வளர வேண்டும் என்றும் விரும்பினார்.கவிதை உலகில், கொள்கைக்காகவும், மக்கள் நலவாழ்விற்காகவும் சமுதாய மலர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும் பாடியவர் பாவேந்தர். பாரதிதாசன் பார்வையில் தமிழ் என்பது கடந்த காலத்தின் பெருமையைப் பேசுவதற்கான மொழி மட்டுமல்ல; எதிர்காலத்தை உருவாக்க பயன்படுத்தப்பட வேண்டிய மொழி.
தமிழின் எழுச்சிக் குரல்
பாரதிதாசனின் மொழிப்பற்று அவரது கவிதைகளில் மட்டும் அடங்கிவிடவில்லை. கவிதை, நாடகம், கட்டுரை, பாடல் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களின் வழியாகத் தமிழுணர்வை மக்களிடம் கொண்டு சென்றார்.அவரது எழுத்து மக்களைப் பாடச் செய்தது; சிந்திக்கச் வைத்தது; போராடச் செய்தது; மாற்றத்தை உருவாக்க வைத்தது.அதனால்தான் அவரது கவிதைகள் வெறும் இலக்கியப் படைப்புகள் என்று மட்டும் கருதப்படுவதில்லை.அவை தமிழுணர்வின் எழுச்சிக் குரல்கள் என்று அனைவராலும் கொண்டாடப்படுகின்றன.
பாரதியாரும் பாரதிதாசனும்
பாரதியார் தமிழின் இனிமையையும் வீரத்தையும் உலகறியச் செய்தார். பாரதிதாசன் அந்தத் தமிழுணர்வைத் தொடர்ந்து மேலும் தீவிரப்படுத்தினார்.
பாரதியார்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!”
என்று தமிழின் இனிமையைப் பாடினார்.
பாரதிதாசனோ,
தமிழைத் தன் உயிருக்கு இணையாக வைத்துக் கொண்டாடினார்.ஒருவர் தமிழின் இனிமையை உலகுக்குக் காட்டியவர்.மற்றொருவர் தமிழுணர்வை மக்களின் நெஞ்சில் விதைத்தவர்.
பாரதிதாசனின் எதிர்பார்ப்பு
இன்றைய உலகமயமான சூழலில் பல மொழிகளைக் கற்பது கட்டாயமாக இருக்கிறது. எத்தனை மொழிகளைக் கற்றாலும் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பதே பாரதிதாசன் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் அறிவுரையாகும்.தமிழை நேசிப்பது என்பது வெறுமனே தமிழில் பேசுவதோடு மட்டும் முடிந்துவிடாது. தமிழில் படிக்க வேண்டும். தமிழில் எழுத வேண்டும். தமிழில் அறிவைப் பெருக்க வேண்டும்; அடுத்த தலைமுறைக்கும் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பாரதிதாசனின் எதிர்பார்ப்பு.
முடிவுரை
பாரதிதாசனின் மொழிப்பற்று உணர்வாகத் தொடங்கி, போராட்டமாக வளர்ந்து, தொண்டாக நிறைவு பெற்றது. அவரது எழுத்தில் தமிழ் அமுதமாகிறது; அவரது சிந்தனையில் தமிழ் ஆயுதமாகிறது; அவரது வாழ்வே தமிழ்த் தொண்டாகிறது.
தமிழை நேசிப்போம்
தமிழையே சுவாசிப்போம்
தமிழில் சிந்திப்போம்
தமிழிலேயே பேசுவோம்
தமிழை உலக அரங்கில் தலைநிமிரச் செய்வோம்!
வாழ்க தமிழ்
கருத்துகள்
கருத்துரையிடுக