பிரளயம் வருமா
பிரளயம் வருமா
வழக்கத்திற்கு மாறான பெருவெள்ளம்.
பார்க்கும் இடமெங்கும் வெள்ளக்காடு.
மழை ஓவென்று ஒப்பாரி வைத்து
தன் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை.
சிறுகுளங்கள் எல்லாம் உடைப்பெடுத்து
ஊருக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது.
அவ்வளவுதான் ஊர் முழுவதும் கூச்சலும்
கூப்பாடுமாக மாறிவிடுகிறது.
என்ன செய்வதெனத் தெரியாத பதற்றம்.
ஐயோ...ஜலப் பிரளயம் வந்து
உலகம் அழியப் போகிறது போலிருக்கிறதே
என்று ஆளாளுக்குப் புலம்பத்
தொடங்கிவிடுகின்றனர்.
இப்படிப்பட்டதான சூழ்நிலை பல நேரங்களில்
நிகழ்ந்ததுண்டு.
இப்போதே ஊர் அழிந்து போகக் கூடுமோ
என அஞ்சி இருப்போம்.
எல்லாம் நான்கு நாட்கள்தான்.
அதன்பிறகு பிரளயம் வந்ததற்கான
சுவடே இல்லாமல் போய்விடும்.
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள "
என்ற சிலப்பதிகார அடிகள் பிரளயத்தால்
குமரிக் கண்டம் காணாமல் போனதைப் பற்றி
குறிப்பிடுகிறது.
அப்படியானால் பிரளயத்தால் அழிவு
நடந்திருக்கிறது என்பது உண்மை.
பிரளயம் என்றால் என்ன?
என்பது இப்போது புரிந்திருக்கும்.
இயற்கைப் பேரிடர்களுள் ஒன்று இந்தப்
பிரளயம்.
இது கால மாற்றத்தால் நிகழ்வது.
ஆனால் இது நாட்டில் அநீதி பெருகும் போது இறைவனால் அனுப்படுகிறது என்பது ஒரு நம்பிக்கையாக காலம் காலமாக
இருந்து வந்திருக்கிறது.
இது உண்மையா? உண்மைக்குப் புறம்பான
கட்டுக் கதையா? அந்த விவாதத்தை
ஒதுங்கி வைத்து விடுவோம்.
ஏழு மேகங்கள் உருண்டு திரண்டு
குமுறி...குமுறி இடையறாது ஓவென்ற
ஒப்பாரியோடு மழையாகக் கொட்டித் தீர்க்க
அதனைக் கண்ட கடல் ஆரவாரத்தோடு எழும்பி
தானும் தன் பங்குக்கு ஆரவாரித்து எழும்புகிறது.
ஆர்ப்பரிப்பும் குமுறலுமாய் பொங்கி எழும் கடலலை
தன் அலைக் கரத்தால் நீட்டி, நாடுகளையும்
காடுகளையும் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது.
இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறும்போது
அதனை ஊழி என்கின்றனர்.
இதைத்தான் பிரளயம் என்று நாம்
சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
பிரளயம் என்றாலே அழிவு என்ற
பொருளும் உண்டு.
அழிவு நீரால் ஏற்படலாம்.
பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்
மூலமாகவும் நிகழலாம்.
பொதுவாகவே பிரளயம் வந்தால் உலகம்
அழியப் போகிறது என்ற அச்சம் அனைவர்
மனதிலும் எழுவது இயல்பு.
இந்தப் பிரளயம் எதனால் ஏற்படுகிறது
என்பது நாம் அறியாத ஒன்று.
வெறுமனே இயற்கைப்
பேரிடர் என்று சொல்லிவிட்டு எளிதாக
கடந்து போய்விட முடியாது என்கின்றனர்
இறை நம்பிக்கையாளர்கள்.
பிரளயம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும்
மனிதனிடம் காணப்படும் தீயச் செயல்கள்தான்
முக்கிய காரணமாகச்
சொல்லப்படுகிறது.
பிரளயத்திற்கான காரணத்தை
ஜின்னாஹ் ஷரீபத்தீன் என்ற கவிஞர் தனது
பிரளயம் கண்ட பிதா
என்ற இசுலாமிய குறுங்காப்பிய நூலில்
கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
"கொலைக்களவு வழிப்பறியும்
பொய்யும் சூதும் கூறவியலாபடி
மலிந்தே போக
அந்நாள் மக்கள் விபசாரயலைந்தார்
நீதி நேர்மை தொலைதூரம்
ஒழிந்தோடிப் போனதாலே
துணிவு பலம் உள்ளவர்கள்
பிறரை ஏய்த்தார்
சிலைகளெங்கும்
கடவுளராய்த் தோன்றி ஏக
தெய்வச் சிந்தை அற்று
மக்கள் திசை கெட்டாரே"
என்கிறார்.
அநீதி மிகுந்து
பொய்யும் புரட்டும் மிகுந்து
அநீதி மலிந்து
எளியாரை வலியார் ஏய்த்து
கடவுள் நம்பிக்கையற்றுத்
திரியும்போது அழிவு தொடங்குகிறது.
இதுதான் பிரளயத்திற்கான காரணம் என
இந்தப் பாடல் தெளிவாகக் கற்பிக்கிறது.
பலமுறை இறைவன் பிரளயத்தை
அனுப்பி உலகை அழிக்க முயன்றிருக்கிறாராம்.
ஆயினும் அவரால் ஒட்டு மொத்த உலகையும்
அழிக்க முடியவில்லை. காரணம்
எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு நல்லவர்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
பைபிளிலும் பிரளயம் பற்றிய செய்தி உள்ளது.
நோவா என்ற தெய்வ மனிதன் வாழ்ந்த காலத்தில்
கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாத
மக்களை ஊழிப் பெரு வெள்ளத்தால்
தண்டிக்க எண்ணினார் ஆண்டவர்.
ஆனால் நோவா நீதி தவறாத நல்ல மனிதன்.
அவனை எப்படி அழிக்க முடியும் ?
அவனையும் அவன் குடும்பத்தாரையும்
காப்பாற்ற எண்ணுகிறார்.
அதனால் நோவாவை அழைக்கிறார்.
நோவா ஆண்டவரின் குரலைக் கேட்டதும்
தரையில் மண்டியிட்டு "ஆண்டவரே பேசும் அடி்யேன்
கேட்கிறேன் "என்கிறார்.
"உலகில் உள்ள மக்கள் அனைவரும்
என்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர்.
தீமை அதிகரித்துவிட்டது. நான் அவர்களை அழிக்க
சித்தம் கொண்டுள்ளேன்" என்கிறார்.
அதிர்ச்சியடைந்த நோவா, " எல்லா மக்களையுமா? "
என்கிறார்.
"இதிலென்ன சந்தேகம். இருப்பினும் உன்னையும்
உன் குடும்பத்தாரையும் அழிக்க மாட்டேன்."
அது எப்படி என்பதுபோல .. தேவனை நோக்கிக்
பார்த்திருக்கிறார் நோவா.
"நான் பிரளயத்தால் உலகை அழிக்கப் போகிறேன்.
அனைவரும் தண்ணீரில் மூழ்கி மாண்டு
போகட்டும் " என்கிறார் ஆண்டவர்
மறுபடியும் கோபமாக.
"நான் மட்டும் எப்படித் தப்புவது?
...உயிரினமே இல்லாத
உலகில் நான் மறுபடியும் எப்படி வாழ முடியும்?
என்று அடுக்கடுக்காக கேள்விகளைக்
கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார் நோவா.
"ஒரு பேழையை உருவாக்கு.
அதனுள் நீயும் உன் குடும்பத்தாரும்
மட்டும் செல்லுங்கள்.
கூடவே ஒவ்வொரு ஜோடி விலங்கு ,பறவை,
ஊர்வன போன்றவற்றையும்
உடன் கொண்டு செல்லுங்கள். அவை நீங்கள்
மறுபடியும் உலகிற்குள் பிரவேசிக்கும்போது
பலுகிப் பெருகி உங்களுக்கு உதவியாக
இருக்கும் " என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவரின் கட்டளைப்படி நோவா பேழையை
உருவாக்குகிறார்.
நோவாவும் குடும்பத்தாரும் பேழைக்குள் சென்ற
பின்னர் பிரளயம் ஏற்படுகிறது.
நாற்பது நாட்கள் விடாத மழை.
வெள்ளப் பெருக்கு. உலகின் அனைத்து
உயிரினமும் அழிந்துவிட்டது.
நாற்பது நாட்களுக்குப் பின்னர் நோவா வெளியில்
நீர்வற்றிவிட்டதை உறுதி செய்துகொண்டு
வெளியில் வருகிறார்.
வெளியில் வந்த நோவாவுக்கு தேவன்
ஒரு உறுதி அளிக்கிறார்.
"இது போன்ற பேரழிவை
இனி ஏற்படுத்த மாட்டேன் .தண்ணீரால் இனி
இந்த உலகம் ஒருபோதும் அழியாது.
இதை உனக்கு உறுதியாகவே தெரிவிக்கிறேன்.
அதன் அடையாளமாக வானத்தில்
வானவில்லை வைக்கிறேன் "என்கிறார்.
மழை நாட்களில் வானவில் தேவனின்
உடன்படிக்கையை உலகுக்கு நினைவுபடுத்துவதாக
உள்ளது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
அப்படியானால் இனி ஒரு பிரளயம்
வந்து அழிவு ஏற்படாது என்பதை
உறுதியாக நம்பலாமா?
நம்புவதா கூடாதா என்பதற்கு முன்னால்
உலக அழிவு பற்றி என்ன கூறுகிறார்
என்பதைப் பார்ப்போம்.
"பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன் "
என்றார் வள்ளுவர்.
நல்லவர்களால்தான் உலகம் இன்றளவும்
உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு நல்லவர் கூட இல்லாமல் போனால் இவ்வுலகம் என்றோ அழிந்து
போயிருக்கும்.
அப்படியானால் பிரளயம் வந்து உலகம் அழியாதா?
அதெப்படி அழியும்.?
நல்லவர் ஒருவர் இருந்தால் போதும்.
பிரளயம் வரவே வராது.
உலகிற்கு அழிவும் கிடையாது.
"
கருத்துகள்
கருத்துரையிடுக