கற்றல் நன்றே

கற்றல் நன்றே



"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர். (குறள் - 395)

என்றார் வள்ளுவர்.


உனக்கு கல்வி கற்க வேண்டுமா?


"செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்றுக்கொள்.இந்தப்  பணிவு இல்லாமல் கற்க முயன்றால் என்றும் நீ கடை நிலையில்தான் இருப்பாய் "என்பதுதான் வள்ளுவர் சொல்ல வந்த கருத்து.

கல்வி கற்க வேண்டும் என்றால் பணிவு வேண்டும் . ஆசிரியரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 

இப்படி எல்லாம் தாழ்ந்து நின்று படிக்க வேண்டுமா?வேண்டாமப்பா எனக்கு இந்தப் படிப்பு . என்னிடம் போதிய பணம் இருக்கிறது. சொத்து சுகம் இருக்கிறது.

பிறகு எதற்காக நான் கல்வி கற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 

சற்று காத்திருங்கள்.

அறிவிலும் பணத்திலும் பதவியிலும் உயர்ந்த ஒரு மனிதர் ஏன் படிக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்கிறார்.அவர் அப்படி என்னதான் சொல்கிறார் என்பதைக் கேட்போமே!

ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்த வீரமும் விவேகமும் மிக்க ஒரு சிறந்த மன்னர் .   தமிழ்ப்புலமை மிக்கவர்.

இவர்கல்வியின் சிறப்பை வலியுறுத்தி மனதில் தைக்கும்படி ஒரு பாடல் பாடியுள்ளார். பாடல் உங்களுக்காக....

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே."

-  புறநானூறு 


"தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும் மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்பது நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபாடு  கொண்டதாகவே இருக்கும்.

ஒரே குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளாக இருந்தாலும்  'மூத்தவன் வருக 'என்று கூறுவதில்லை.அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று  சொல்லப்படுகின்ற நான்கு குலத்தினருள்ளும் கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் பிறந்தவன்கூட  அந்தக் கல்வி கற்ற மகனிடம்தான் கல்வி கற்கச் செல்வான்."

என்பது பாடலின் பொருள்.

கல்வி பணத்தை விட உயர்ந்தது.

வயதை விட உயர்ந்த மரியாதையை வாங்கித் தருவது.

உயர்வு தாழ்வு பாராது அனைவரையும் தன்பால் ஈர்ப்பது.

"இல்லானை ஈன்றெடுத்த தாய்" வேண்டாள் என்றார் ஔவை.

"ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக இருந்தாலும் கல்வி கற்ற மகனைத் தான் தாயே விரும்புவாள்."என்கிறார் இந்த நெடுஞ்செழியன். 

தாயையும் மனம் திரிய வைக்கும் அளவுக்கு சிறப்பு கொண்டது கல்வி என்றால்.... சிந்தியுங்கள்.

கல்வி கற்க வில்லையா? நான் மூத்தவன் எனக்குத்தான் முதல் மரியாதை என்று கேட்க முடியாது. 

அரசனே அறிவுடையவனை நாடித்தான் செல்வான்; அறிவுடையவன் சொல்லும் வழியில்தான் செல்வான் என்ற நிலை இருக்கும் போது நான் மூத்தவன் . நான் பொருளுடையவன் என்று சொல்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது.?

ஆதலால் கற்றல் நன்றே.... கற்றல் நன்றே என்று சொல்லிச் சிந்திக்க வைத்திருக்கிறார் மன்னர்.

நாட்டின் முதல் குடிமகன்.மொத்த அதிகாரமும் கருவூலமும் தன் கையில் வைத்திருக்கும் 

ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனே , "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"

என்று சொல்லிவிட்டார்.

 இனி' கற்றல் நன்றே' என்ற சொற்றொடருக்கு  மாற்றுக்கருத்து இருக்கப் போகிறதா  என்ன?




கருத்துகள்

Popular Posts