யாமறிந்த மொழிகளிலே

யாமறிந்த மொழிகளிலே ( பேச்சுப் போட்டி)


"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி"

என்று தமிழரின் தொன்மையைச் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.தமிழர் இருந்த காலம்தொட்டே தமிழ் இருந்திருக்க வேண்டும்.

சொல்லில் இனிமை

சுவையில் தனிமை

இலக்கியத்தில் பெருமை…

இலக்கணத்தில்  நிறைமை கொண்ட மொழி தமிழ்மொழி.

எழுத்துக்கு அழகு சேர்த்து,

எண்ணத்துக்கு வடிவம் கொடுத்து,

உணர்வுக்கு உயிர் கொடுத்து என்னை உயிரோடு உலவ வைத்திருக்கும் மொழி என் அன்னைமொழியாம் தமிழ்மொழி . அந்தத் தமிழ் மொழியே யாமறிந்த மொழிகளிலே சிறந்தது உயர்ந்தது சிந்தனையைக் தூண்டுவது என உங்கள் முன் பேச வந்திருக்கிறேன்.

“தமிழ் என் மொழி மட்டுமல்ல…

என் விழி!

தமிழ் என் மொழி மட்டுமல்ல...

என் வழி!

தமிழ் என் மொழி மட்டுமல்ல…

என் உயிரின் ஒலி!

தமிழின் மணத்தைச் சுவாசித்து,

தமிழின் பெருமையை நேசித்து,

தமிழோடு வாழும் என்

தமிழின் புகழைப் பேசுவதற்காக

இன்று உங்கள் முன்னிலையில் நிற்பதில் பெருமிதம் கொள்கிறேன்  பேரானந்தமடைகிறேன் .

தமிழைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன் என்பதைவிட,

தமிழே என்னைப் பேச அழைத்து வந்திருக்கிறது என்று சொல்லுவேன். 

ஒரு மொழி அழிந்தால்,

அந்த மொழியோடு ஒரு தலைமுறையின் நினைவு அழிகிறது;

ஒரு மொழி உயர்ந்தால்,

அந்த மொழியோடு ஒரு இனமும் தலைநிமிர்கிறது"

என்ற உண்மையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியவர் பாரதி..

பாரதி தமிழை வெறும் மொழியாகப் மட்டும் பார்க்கவில்லை.

தமிழில் ஒரு இனத்தின் வரலாற்றைப் பார்த்தார்.

தமிழில் ஒரு மக்களின் எதிர்காலத்தைப் பார்த்தார்!..

தமிழில் ஒரு தேசத்தின் தன்னம்பிக்கையைப் பார்த்தார்.

"பாரதியின் தமிழ்ப்பற்று என்பது

இதயத்தில் பிறந்து எண்ணங்களில் வடிவம் பெற்று

நாடி நரம்பில் உணர்வாக ஓடிக்கொண்டிருக்கும் பற்று" என்பேன்.

கவிதையில் மட்டும் இருந்த பற்று அல்ல;

அவரது வாழ்க்கையையே ஆட்கொண்ட பற்று.

பாரதி பல மொழிகளைக் கற்றவர். பிறமொழிகளின் வளத்தை அறிந்தவர். அதனால்தான் தாய்மொழித் தமிழின் இனிமை அவரது உள்ளத்தைத் தனியே ஆட்கொண்டிருக்கிறது.

அதனால்தான் அவர்,

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;

பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!"

என்று கேட்கிறார்.

இது வெறுமனே தமிழுக்குக் 

கொடுக்கப்பட்ட பாராட்டு அல்ல!

தமிழின் பெருமையை உணர்ந்தது

பாரதியின் நெஞ்சு.

அதனால் தமிழின் எதிர்காலத்தை எண்ணிப்பார்த்தது அவரின் அறிவு!

அந்த அறிவும் உணர்வும் ஒன்றிணைந்துதான் பாரதியை இப்படிப் பாட வைத்தது.

 என் தமிழ் எனக்கு மட்டும் போதும் என்று அவர் சொல்லவில்லை.

அவரது கனவு எல்லையற்றது.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.”

என்பது பாரதியின் கனவு.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைத்தார்.

தமிழ் வீட்டில் மட்டும் இருந்தால் போதாது

தெருவுக்கு வர வேண்டும்.

நாட்டு எல்லைகளைத் தாண்டி 

உலகத்தின் செவிகளில் தமிழின் இனிய ஓசை விழ வேண்டும்.

இன்றைக்கு நாம் இணையம் வழியாக உலகத்தைப் பார்க்கிறோம்.

 இணையம் இல்லாத காலத்திலேயே

உலகளாவிய மொழியாக தமிழ் உருவெடுக்க வேண்டும் என்பது

பாரதியின் நினைவில் இருந்திருக்கிறது.

இதுதான் பாரதியின் தொலைநோக்குப் பார்வை!

தமிழின் பெருமை அதன் இனிமையில் மட்டும் இல்லை.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியாத இலக்கியச் செழுமையில் இருக்கிறது.

அதனை உணர்ந்த பாரதி, தமிழின் மாபெரும் புலவர்களைப் போற்றிப் பாடினார்:

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை"

என்றார்.

கம்பனை நினைத்தால் கற்பனை உயர்கிறது.

வள்ளுவரை நினைத்தால் அறம் உயர்கிறது.

இளங்கோவை நினைத்தால் தமிழின் காப்பியப் பெருமை உயர்கிறது.

இத்தகைய பேரறிஞர்களைத் தந்த மொழி தமிழ் என்பதில் பாரதிக்குதான் எத்தனை பெருமை!

தமிழை இனிமையான மொழி என்று சொல்லிவிட்டு அவர் நிற்கவில்லை.

தமிழில் அறிவு வளர வேண்டும்.

தமிழில் புதிய நூல்கள் பிறக்க வேண்டும்.

உலக அறிவு தமிழுக்குள் வர வேண்டும்

என்று விரும்பினார்.

அதனால்தான் அவர்,

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.”

என்றார்.

இதில் பாரதியின் பரந்த உள்ளத்தைப் பாருங்கள்!

பிறமொழியை அவர் எதிரியாகக் கருதவில்லை.

பிறமொழியைக் கற்போம்;

பிறநாட்டு அறிவைப் பெறுவோம்;

அந்த அறிவைத் தமிழுக்குக் கொண்டுவருவோம்.

இதுதான் பாரதி!

உலகத்திற்குத் தமிழை மூடிவைக்கவில்லை;

உலகத்தைத் தமிழுக்குள் கொண்டுவர நினைத்தார்.

பழமைக்கு மரியாதை; புதுமைக்கு வரவேற்பு!

பாரதி பழமையைப் போற்றினாலும்

அங்கேயே தேங்கி நிற்க விரும்பவில்லை 

அருவியாக விழுந்து எழுந்து ஓடவேண்டும் என்று நினைத்தார்.

“நம் முன்னோர் சாதித்தார்கள்” என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட,

“நாம் என்ன சாதிக்கப் போகிறோம்?” என்று கேட்க வைத்தார்.

தமிழில் புதிய படைப்புகள் உருவாக வேண்டும் என்பது அவரது விருப்பம்.

அதனை ,

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”

என்ற வரிகளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

பழமை நம் வேர்;

புதுமை நம் சிறகு.

வேர் இல்லாமல் மரம் நிற்காது.

சிறகுகள் இல்லாமல் பறவையால் பறக்க  முடியாது.

பாரதியின் தமிழ்ப்பற்று உணர்ச்சியோடு முடிந்துவிடவில்லை.

அவர் தமிழை அறிவின் மொழியாக்க விரும்பினார்.

அறிவியல் வளர வேண்டும்.

கல்வி வளர வேண்டும்.

புதிய சிந்தனைகள் பிறக்க வேண்டும்.

உலக அறிவு தமிழில் கிடைக்க வேண்டும்.அதனால்

தமிழ் அறிவுக்குத் தகுதியானது என்று மெய்ப்பிக்க முனைகிறது  

தமிழ் சிலருடைய வீட்டில் மட்டும் பேசப்படும் மொழியாக இருக்கக் கூடாது.

மக்களின் அன்றாட வாழ்வில் அது கலக்க வேண்டும்.

அதனால்தான் பாரதி,

"ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"

என்றார்

இந்த வரிகள் இன்று நம்மை நோக்கியும் கேள்விகள் கேட்டு  நிற்கின்றன.

தமிழ் நம் வீட்டில் இருக்க வேண்டும்.

தமிழ் நம் கல்வியில் இருக்க வேண்டும்.

தமிழ் நம் சிந்தனையில் இருக்க வேண்டும்.

தமிழ் நம் படைப்பில் இருக்க வேண்டும்.

தமிழ் நம் தொழில்நுட்பத்தில் இருக்க வேண்டும்.

இதுதான் பாரதிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

இன்றைய தலைமுறைக்கு பாரதி தரும் செய்தி!

இன்று நாம் பல மொழிகளைக் கற்கிறோம்.

கற்க வேண்டும்.

ஆங்கிலம் நமக்கு உலகத்தின் கதவைத் திறக்கலாம்.

பிறமொழிகள் பல புதிய பண்பாடுகளை நமக்கு அறிமுகப்படுத்தலாம்.

ஆனால்

நம் தாயின் தாலாட்டைத் தருவது தமிழ்!

நம் மண்ணின் மணத்தைத் தருவது தமிழ்!

நம் பண்பாட்டின் நினைவைத் தருவது தமிழ்!

நம் உள்ளத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவது தமிழ்!

பிறமொழிகளைக் கற்போம்.

ஆனால் தாய்மொழியை ஒரு போதும் மறவோம்.

உலகத்தைத் தெரிந்துகொள்வோம்.

ஆனால் நம்மை நம் இனத்தை நம் அடையாளத்தை ஒரு போதும் தொலைக்காதிருப்போம்.நாமே

பாரதி கனவு கண்ட தமிழை வாழ்வில் செயல்படுத்துவது உலக அரங்கிற்குக் கொண்டு  செல்வதுதான் 

பாரதிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

தமிழில் படிப்போம்.

தமிழில் படைப்போம்.

தமிழில் சிந்திப்போம்.

உலக அறிவைத் தமிழுக்குக் கொண்டுவருவோம்.

தமிழின் அறிவை உலகுக்குக் கொண்டு செல்வோம்.

அப்போதுதான் பாரதியின் கனவு நனவாகும்!

பாரதி எழுதியது வெறும் கவிதைகள் அல்ல.

அவரின் கனவுக்காக விதைக்கப்பட்ட விதைகள்!

அவர் ஏற்றியது நெருப்பு!

அவர் கட்டி எழுப்ப நினைத்தது ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கை.

தமிழ் என்னும் அணையா விளக்கு  ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்றப்பட வேண்டும்.

இன்று இந்த மேடையில் நின்று நான் ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்கவில்லை.

ஒரு தலைமுறையின் சார்பாக ஒரு கோரிக்கையை உங்கள் முன்னர் வைக்கிறேன்.

நம் குழந்தையின் முதல் சொல் தமிழாகட்டும்.

நம் சிந்தனையின் செழுமை தமிழாகட்டும்.

நம் படைப்பின் பெருமை தமிழாகட்டும்.

நம் அறிவின் வேராக தமிழ் இருக்கட்டும்.

நம் உலகப் பயணத்தின் அடையாளமாகவும் தமிழ் இருக்கட்டும்!

தமிழை நேசிப்பது நம் உரிமை.

தமிழை வளர்ப்பது நம் கடமை.

பாரதியின் நெஞ்சில் எரிந்த அந்தத் தமிழ்த்தீ

தமிழர் ஒவ்வொருவர் நெஞ்சிலும் எரியட்டும்.

அந்தத் தீ

நம் நாவில் தமிழாகட்டும்!

நம் சிந்தனையில் அறிவாகட்டும்!

நம் செயலில் சாதனையாகட்டும்!

நம் வாழ்வில் பெருமையாகட்டும்!

அப்போது

தமிழ் நம்மால் வாழாது;

நாம்தான் தமிழால் வாழ்வோம்!

தமிழ் வாழட்டும்!

தமிழர் உயரட்டும்!

தமிழால் உலகம் சிறக்கட்டும்!

நன்றி! வணக்கம்!

கருத்துகள்

Popular Posts