இந்தக் குளத்தில் கல்லெறிந்தது யார்

இந்தக் குளத்தில் கல்லெறிந்தது யார்



இந்தக் குளத்தில்

கல்லெறிந்தது யார் 

விடை தேடி  அலைகின்றேன் 


எறியப்பட்ட  கல்

எங்கோ மூழ்கி விட்டது

அதிர்வலைகள் மட்டும் நிற்கவில்லை


கலங்கடித்த சொற்கள்

கலக்கமான நினைவுகள்

கடந்து போக மறுத்த பொழுதுகள்


தழுவ மறுத்த இமைகள்

தடுமாறிய நினைவலைகள்

தவிர்க்க முடியா உரையாடல்கள்


மறுபடியும் மறுபடியும் வந்து

நினைவுகளைத் தட்டி எழுப்ப

உள்ளம் தடுமாறுகிறது


எழுதாக் கேள்வி ஒன்று

இடைமறித்து நின்று

பதில் கேட்டு பரிதவிக்க வைக்கிறது


பதில் கிடைக்காமல் 

பாசாங்காய் எழுத முடியவில்லை 

பால் நிலவு காய்வது போல


உடலெங்கும் அனலாகிவிட

உள்ளத்தின்  கனவுகள் 

உள்ளுக்குள்ளே குமுறுகின்றன


பாசப்போராட்டத்தில்

பேச மனம் மறுக்கிறது 

பேதை போல விழிக்கிறேன்


உறவோடு உறவாட மறுக்க

மடைமாற்றும் முயற்சியாக

தட்டச்சைக் கை தொட்டுவிட


தாறுமாறாய்ச் சொற்கள் 

தலைகீழாய் விழுகின்றன 

தோற்றப்பிழையாய் இடம்மாறித்

தெரிகின்றன


எல்லாம் கடந்து போகும் 

இது மட்டும் கடக்காமல் 

அங்கேயே நிற்பதேனோ?


எனக்கு மட்டும் ஏனிப்படி?

என்னோடு இறைவனுக்கு

ஏனிந்த கண்ணாமூச்சி விளையாட்டு?


நடப்பவை நன்மைக்கே

தேற்ற முயல்கின்றேன் 

தேற மனம் மறுக்கிறது


அவமானமாய் உணர்கிறேன்

அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல்

அங்கேயே நிற்கிறேன் 


உடல் குறுகிப் போக

ஓரிடத்திலேயே நின்று

கையில் ஊமன் போல தவிக்கிறேன் 


என்ன நடந்து விட்டது

அடுத்த கட்டம் நோக்கி நட

கட்டளை எங்கிருந்தோ வந்து விழ


அடியெடுத்து வைக்கையில்

மனஅழுத்தம் 

நெஞ்சை அழுத்துகிறது


விடுபட முடியா தவிப்பு

நடுகாட்டில் நின்றதொரு பரிதவிப்பு 

ஏன் ஏன் என்கிறது இதயத்துடிப்பு


இந்தக் குளத்தில்

கல்லெறிந்தது யார் 

தேடுகிறேன்


அலைகள் மட்டும்

வந்து வந்து
என் கால்களைத் தொடுகின்றன...

விடை மட்டும் கிடைக்கவில்லை


கருத்துகள்

Popular Posts