கம்பனின் நடையழகு
கம்பனின் நடையழகு
" பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு!
என்று பாடி வியந்திருப்பார் கண்ணதாசன்.
"யாமறிந்த புலவரிலே
கம்பரைப்போல் வள்ளுவரைப் போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை "
என்பார் பாரதி.
கம்பரின் கவிதை, கற்பனை வளம்
எதுகை மோனை விளையாட்டு அனைத்தும் அப்படியே காட்சிகளைக் கண்முன்னர் கொண்டு வந்து நிறுத்தும்.
நடந்ததை அப்படியே உணர வைக்கும் சொல்லழகு மிகுந்திருக்கும்.
சூர்ப்பனகை வருகிறாள் என்பதை நமக்குச் சொல்ல வேண்டும்.
அந்த இடத்தில் கம்பன் வார்த்தை விளையாட்டு
கொஞ்சி விளையாடுகிறது.
பாடலை வாசித்துப் பாருங்கள்.
"பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்."
பஞ்சு போன்ற
குளிர்ச்சியான தளிர்களை விஞ்சிய மென்மையான பாதம் வருந்த
செக்க சிவந்த
தாமரை மலருக்கு நிகரான
மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததாள்.
அவள் வந்தது
இனிமையாக அகவும் மயில் போலவும்
மென்மையான அன்னம் போலவும்
மின்னும் வஞ்சிக் கொடி போலவும் இருந்தது.ஆனால்
விஷம் போன்ற வஞ்சனையோடு அந்தப் பெண் வந்தாள் என்கிறார் கம்பர்.
வஞ்சனையைச் சொல்லும் இடத்திலும் கவித்துவம் குறையவில்லை.
சூர்ப்பனகை நடையோடு கப்பரின் கவிதை விஞ்சி நிற்கிறது. நம் நெஞ்சோடு கொஞ்சி விளையாடுகிறது.
...இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்." என்று சூர்ப்பனகையை நம் கண் முன்னர் நடக்க வைத்து விட்டார் கம்பர்.
இல்லை...இல்லை...இல்லையோடு கம்பன் நடத்திய
கவி விளையாட்டு ஒன்று இருக்கிறது.
வாருங்கள் நாமும் ஓரமாய் நின்று கம்பரின்
கவி விளையாட்டைக் கண்டு களிப்போம்.
உங்கள் ஊரைப் பற்றிச் சொல்லுங்கள்
என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
மலை இருக்கிறது.
காடு இருக்கிறது.
பெரிய பெரிய வீடுகள் இருக்கின்றன.
பள்ளி இருக்கிறது.
ஆறு இருக்கிறது.
குளம் இருக்கிறது
என்று இருக்கிறது இருக்கிறது என்ற சொல்லை அடுக்கிக் கொண்டே போவோம்.
இருக்கிறது என்று சொல்வதில் பெருமைப்படும் நாம் இல்லை என்ற சொல்லைச் சொல்லத் தயங்குவோம்.
ஏன் இந்தத் தயக்கம்?
ஏனென்றால் இல்லை என்ற சொல் வெறுமைக்கு
மட்டுமே பயன்படுத்தக்கூடிய சொல்
என்பது நமது கணிப்பு.
அதனால் தான் இந்தத் தயக்கம்.
இல்லை இல்லை என்ற சொல்லை வைத்தே
அயோத்தியில் என்னென்ன வெல்லலாம் இருக்கிறது என்று நம்மைப் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறார் கம்பர்.
அயோத்தி மாநகர் செழுமையாக இருக்கிறதாம்.
அப்படி அயோத்தி செழுமையாக
இருப்பதற்கு
இவை எல்லாம் இல்லாதிருப்பதே
காரணமாம்.
இல்லையோடு இருப்பதை மோதவிட்டு
கம்பர் விளையாட்டுக்காட்டிய
பாடல் இதோ உங்களுக்காக....
"வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்."
வண்மை - கொடை,
திண்மை - துணிவு,
செறுநர் - பகைவர்,
வெண்மை - அறியாமை
கொடை கொடுக்க ஆட்கள் இல்லை.
ஏன் என்கிறீர்களா?
வறுமை இல்லை. வறுமை இல்லை ஆதலால் இரப்பதற்கு யாருமில்லை.
இரப்பதற்கு ஆள் இருந்தால்தானே கொடுப்பதற்கு ஆள் வேண்டும்.
வறுமை இல்லை ஆதலால் கொடையும் இல்லை.
பகைவர் இல்லை அதனால் துணிவுக்கு வேலை இல்லை.
துணிவோடு சண்டையிட வேண்டிய தேவை இல்லாது போனதற்குக் காரணம் பகைவர் இல்லை.
பொய் உரைக்க ஆளே இல்லை.
அதனால் உண்மைக்கு அவசியமில்லை.
எல்லாருமே உண்மையாக இருக்கும்போது
பொய் பேச வேண்டிய அவசியமில்லை.
"பொய்யாமை யன்னப் புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் "
பொய்யாமையைப் போன்று புகழ் தருவது
வேறு எதுவும் இல்லை.
அந்தப் புகழ் அயோத்திக்கு உண்டு.
கேள்வி அறிவுள்ளவர்கள் மிகுந்திருப்பதால் அறியாமை இல்லை.
"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம்
செல்வதற்குள் எல்லாம் தலை"
அந்தச் செவிச் செல்வம்
அயோத்தியில் இருக்கிறது. அதனால்
அறியாமை இல்லை.
வறுமை இல்லை வளமை இருப்பதால்...
பகைவர் இல்லை துணிவு இருப்பதால்..
பொய் இல்லை உண்மை இருப்பதால்..
அறியாமை இல்லை கேள்வி அறிவு உள்ளவர்கள் இருப்பதால்...
என்னவொரு அருமையான விளக்கம்.
யாரால் கூடும் இப்படியொரு கவியாக்கம்?
ஒரு நாட்டிற்குப் பெருமிதம் தருவது எது?
"கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே."
என்கிறது தொல்காப்பியம்.
இல்லை இல்லை என்ற சொல்லை வைத்து தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட நான்கு பெருமிதங்களும் அயோத்தி நகரத்தில்
இருக்கிறது என்று சொல்லி
இருக்கிறார் கம்பர்.
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு"
என்று பாரதி இதனால்தான் பாடி பெருமைப்பட்டிருப்பாரோ?
கருத்துகள்
கருத்துரையிடுக