மூளையை முடக்காதே-மெருகேற்று
மூளையை முடக்காதே-மெருகேற்று
"இரும்பை பயன்படுத்தாவிட்டால்
துருப்பிடித்துப் போகும்.
தேங்கிய நீர் தூய்மை இழந்துவிடும்.
அதேபோல் செயல்படாமை
மனதின் சக்தியை உறிஞ்சிவிடுகிறது."
என்பார் லியானர்டோ டாவின்சி .
நம் எல்லோரிடமும் கண்டிப்பாக
திறமை இருக்கும்.
எந்த ஒரு திறமையும் இல்லாமல்
எவரும் இல்லை.
எந்த வேலையும் செய்யாமல் சோம்பி
இருப்பவனை மூளை இல்லாதவன்
என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுவோம்.
நன்றாக படிக்கிற ஒரு மாணவனைப்
பார்த்து அவனுக்கு செம மூளைப்பா...என்று
சொல்லி பெருமைப்படுத்துவோம்.
அப்படியானால் கடவுள் படைப்பில்
பாரபட்சமா?
ஒருவருக்கு அதிக மூளையும் இன்னொருவருக்கு
குறைந்த அளவு மூளையும் வைத்து
படைக்கப்பட்டுள்ளதா....
சந்தேகம் எழுகிறதல்லவா!
கடவுள் மனிதனை உருவாக்கி அழகு
பார்த்தாராம்.
கை, கால் ,மூக்கு ,கண் என்று ஒவ்வொன்றாக
சரியாக அதனதன் இடத்தில் வைத்து
முழுமையான மனிதனை உருவாக்கினாராம்.
நல்லபடியாக உருவாக்கியாயிற்று
என்று முடிவு செய்து
பூமிக்கு அனுப்பி வைத்தார் கடவுள்.
மனிதனை பூமிக்கு அனுப்பிய
பின்னர்தான் ஞாபகத்திற்கு வந்திருக்கிறது. ஐயோ!என்ன இது !
எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வைத்த எனக்கு மூளையை வைக்க நினைவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டாராம்.
கடவுளுக்கும் மறதியா.?... ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
நானும் அப்படித்தான் ஆச்சரியப்பட்டுப்
போனேன்.
என்ன செய்வது?
நினைவுக்கு வந்ததும் கடவுள் உதவியாளரை அழைத்தாராம்.
கையில் மூளை இருந்த ஒரு பாத்திரத்தைக்
கொடுத்து "ஒரு தவறு நடந்து விட்டது.மூளையை வைக்காமலேயே
மனிதனைப் பூமிக்கு அனுப்பிவிட்டேன்.
உடனே மூளை இருக்கும் இந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பூமிக்கு ஓடு. மனிதனுக்கு ஆளுக்கு கொஞ்சம்
மூளை வைத்துவிட்டு வா "என்றாராம்
கடவுள்.
உதவியாளர் கையில் மூளை உள்ள பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு பூமிக்கு வந்தார் .
வழியில் பார்க்கும் மனிதர்களுக்கு எல்லாம்
ஆளுக்கு கொஞ்சம் மூளை வைத்துக் கொண்டே வந்தார் உதவியாளர்.
இப்போது பாத்திரத்தில் குறைவான அளவே மூளை இருக்கிறது.
இன்னும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.என்ன செய்யலாம்...?
ஏதோ முடிந்த மட்டும் ஆளுக்குக் கொஞ்சம்
வைத்துவிடுவோம் என்று அளவை குறைத்துக் கொண்டே வந்திருக்கிறார் .
இறுதியில் பாத்திரத்தில் ஒன்றுமே இல்லை.இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
இனி ஒன்றும் செய்ய முடியாது.
அப்படியே திரும்பிவிட வேண்டியதுதான்.
கடவுள் என்ன பார்க்கவா போகிறார்.
எல்லோருக்கும் சரி சமமாக மூளை வைத்துவிட்டேன் பிரபு என்று சொல்லிவிட வேண்டியதுதான் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு திரும்பிவிட்டார்.
அதனால்தான் ஒருசிலர் அதிக
மூளையுள்ளவர்களாகவும்
இன்னும் சிலர் சராசரி மூளைக்காரர்களாகவும்
இறுதியாக மூளைக் கிடைக்காமல் போனவர்கள்
மூளையே இல்லாதவர்களாகவும்
இருக்கிறார்களாம்.
வேடிக்கையாக இருக்கிறதில்லையா!...
இது தெரிந்திருந்தால் முந்திப் போய்
மூளையை அள்ளிக் கொண்டு வந்திருக்கலாமே...என்ற
உங்கள் நினைவோட்டம் எனக்குப் புரிகிறது.
இது கற்பனை கதை தான்.
உண்மையாகவே கடவுள் பாரபட்சம்
பார்க்கிறவரா?
இல்லை என்று நம்புகிறீர்களல்லவா!
கடவுள் எல்லோருக்கும் ஒரே அளவு மூளைதான்
கொடுத்திருக்கிறார்.
அதனைப் பயன்படுத்துவதில்தான்
நமக்குள் வேறுபாடு.
யாரும் முழுமையாக மூளையைப்
பயன்படுத்தியது இல்லையாம்.
இருக்கிற மூளையைப் பயன்படுத்தாமல்
அப்படியே விட்டுவிட்டால் அப்படியே துருபிடித்துப் போகும்.
அதன்பின்னர் நாம் பயன்படுத்த
நினைத்தாலும் செயல்படாது மூளை
மழுங்கிப் போகும்.
இருக்கிற மூளையைப் பயன்படுத்தி என்ன
செய்யலாம் என்று சிந்தித்துச்
செயலாற்றுபவன்தான் புத்திசாலி.
மூளை மணிக்கு நானூறு கிலோ மீட்டருக்கு அதிகமாக ஓடுமாம்..
அதை அப்படியே முடக்கிப் போடுவது
தப்பில்லையா....?
மூளை வளர்ந்து கொண்டே
இருக்காதா என்ற கேள்வி எழும்.
இரண்டு வயதில் எந்த அளவு இருக்குமோ
அதுதான் இருபது வயதிலும் இருக்குமாம்.
"அப்படியானால் இரண்டு வயது குழந்தைக்கான அறிவு மட்டும்தானே இருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்"
மூளையின் வளர்ச்சி அதன் அளவில் அல்ல. அதன் செயல்பாட்டில் தான் இருக்கிறது.
உனக்கு மூளையே கிடையாது என்று யார்
சொன்னாலும் நம்பாதீர்கள்.
உனக்கு மூளை வளரவே இல்லை என்றால்
நம்பலாம்.
மூளைதான் இதயத்திற்கு அடுத்தபடியாக
மிகவும் முக்கியமான உறுப்பு.
உடல் இயக்கம் சீராக நடைபெற,
நினைவாற்றல், ஒருங்கிணைப்பு என்று
மொத்த செயல்பாடும் மூளையின்
கட்டுப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சிலர் அவனுக்கு என்னப்பா நல்ல
மூளை..என்பார்கள்.
அப்படியானால் உங்களுக்கு இருப்பது
கெட்ட மூளையா...என்ற கேள்வியும் கூடவே எழுகிறதல்லவா!
கிடைத்த மூளையை வைத்து நாம் செயல்படுவதை
வைத்துத்தான் அது நல்ல மூளையா...
கெட்டமூளையா...என முடிவு செய்யப்படும்.
நம் மூளையைக் கெட்டதாக்குவதும்
நல்லதாக்குவதும் நம் கையில்தான்
இருக்கிறது.
மெருகேற்றிக் கொண்டே இருந்தால் எந்தப்
பொருளுக்குமே மதிப்பு கூடும் .
மூளை மட்டும் விதிவிலக்கா..என்ன..?
மூளையை மெருகேற்றிக் கொண்டே இருங்கள்.
துருப்பிடித்துப் போனால் பயனற்றுப் போய்விடும்.
பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுவது போல
மூளைக்கும் சார்ஜ் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
நாளும் புதிய புதியவற்றை அறிந்து
கொள்ளவேண்டும்
என்ற தேடல் வந்தாலே போதும்.
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டே இருக்கும்.
இயக்கமும் தேடலும் இல்லா மனிதன்
சோர்ந்து போவான்.
மூலையில் முடங்கிப் போவான்.
இருக்கிற மூளையை இயக்கிக் கொண்டே
இருப்போம்.
வாசிப்பில் அதிக நேரம் செலவழியுங்கள்.
வாசிக்க வாசிக்க மூளைக்கும் புதிய புதிய செய்திகளைப் பற்றி சிந்திக்க வாய்ப்பளிக்க முடியும்.
எழுதுங்கள் சிந்தனை செயலாக்கம் பெறும்.
மூளையை மெருகேற்றுங்கள்.
நாமும் மெருகேற்றுமப்பட்டவர்களாக
புத்துணர்ச்சியோடு இருப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக