அம்மா சொன்ன அந்த வார்த்தை
அம்மா சொன்ன அந்த வார்த்தை
காலையில் பள்ளிக்குச் செல்ல தயாராகும்
நேரம்.
அம்மாக்கும் அப்பாவுக்கும் சண்டை.
பெரிதாக சண்டைகள் ஒருபோதும்
நிகழ்ந்ததில்லை.
அப்பப்போ சீசனல் சண்டை வரும்.
நிலக்கடலை சீசனில் நிலக்கடலை மூட்டைகள்
விற்ற பணம் எங்கே?
இப்படி ஒரு சண்டை கண்டிப்பாக இருக்கும்.
வற்றல் சீசனில் வற்றல் விற்ற
பணம் எங்க போச்சு ?
இந்தப் பிள்ளைகளுக்கு
ஏதாவது தங்கம் வாங்கி வருவீரா? இப்படியே
தாறுமாறாக செலவழிச்சுட்டுதான் போவீரா?
இப்படி ஒரு சண்டை நடக்கும்.
நாங்கள் யாரும் இந்தச் சண்டைகளை
எல்லாம் பெரிதாக
எடுத்துக் கொள்வதில்லை.
அன்றும் அப்படி ஒரு பிரச்சனைதான்
ஓடிக் கொண்டிருந்தது.
பாட அட்டவணையைப் பார்த்துப் பார்த்து
புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்ததால்
வேறு எதிலும் என் கவனம் செல்லவில்லை.
ஆனால் அம்மா சத்தம் இடையிடேயே ஓங்கி வந்து
காதுகளில் விழுந்து கொண்டிருந்தது.
அப்பா எப்போதுமே சன்னமாகத்தான்
பேசுவார்.
அதனால் அப்பா சத்தம்
வெளியில் கேட்கவில்லை.
"நான் செத்துருவேன். ...அப்போ இந்தப்
பிள்ளைகளை வச்சுகிட்டு என்ன
பண்ணுகிறீருன்னு பார்ப்போம்."
என்ற அம்மாவின் குரல் என் காதுகளில்
வந்து விழுந்தது.
நான் எதைப் பற்றியுமே கவலைப்படாமல்
பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குக்
கிளம்பினேன்.
போயிட்டு வாறேன் என்று சொல்கிற
நல்ல பழக்கம் எல்லாம் கிடையாது.
நான் பாட்டுக்குப் பள்ளிக்குப் போய்விட்டேன்.
பகல் முழுவதும் வீட்டில் நடந்த எதுவும்
என் நினைவுக்கு வரவில்லை.
கடைசி பாட வேளை.
அம்மா சொன்ன அந்த வார்த்தை நினைவுக்கு
வந்துவிட்டது.
அம்மா சொன்னது போலவே செய்துவிட்டால்....
எம்மோ...நினைத்துப் பார்க்கவே
பயமாக இருந்தது.
எனக்கு இப்பவே எங்க அம்மாவைப்போய்
பார்க்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால் எப்படி முடியும் ?
ஒரு படபடப்பு. அதன் பின்னர்
வகுப்பில் ஆசிரியர் எடுத்த பாடம்
எதுவும் என் காதுகளில் விழவில்லை.
மனசு எம்மோ....எம்மோ...
என்று உள்ளுக்குள் அழத் தொடங்கிவிட்டது.
நெஞ்சு படபடவென்று அடித்தது. வியர்த்துக்
கொண்டு வந்தது.
நான் திருதிருவென்று தேள்கொட்டிய
திருடன் மாதிரி விழித்துக் கொண்டிருந்ததைப்
பார்த்த ஆசிரியர் என்னிடம் கேள்வி
கேட்டுவிட்டார்.
எனக்குதான் காதே கேட்கவில்லையே...
பிறகு நான் எப்படி எழும்புவேன்.?
குறுகுறுவென்று விழித்துவிட்டு
அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவி
"எழும்பு...எழும்பு....ஃபாதர் உன்னைத்தான்
கேள்வி கேட்கிறாங்க "என்று என்னை உலுக்கி
எழுப்பிவிட்டாள்.
எழும்பி நின்று திருதிருவென்று
விழிப்பதைப் பார்த்ததும்
"நான் சொன்னது எதுவும் புரியலியா? "
இயல்பாக கேட்டார் ஃபாதர்.
நான் என்ன சொல்வது ,?
பதில் பேசாமல் நின்றேன்.
"உட்கார்...."என்று சொல்லிவிட்டு
மறுபடியும் பாடத்தை விளக்கினார் ஃபாதர்.
எனக்கு எப்படி புரியும்?
என் மனது முழுக்க அம்மாவின் நினைவு
மட்டும்தான்.
அதற்குள் மணியடித்துவிட அனைவரும்
பள்ளியைவிட்டு வெளியேறினோம்.
கால்கள் வேகவேகமாக செயல்படத் தொடங்கின.
வீடுபோய்ச் சேர இன்னும் ஒருமணி நேரமாவது
ஆகும். காட்டுவழியாக மூன்று மைல் தூரம்
நடந்து வீடு வந்து சேர வேண்டும்.
ஓட்டமும் நடையுமாக பாதி தூரத்திற்கு மேல்
கடந்துவிட்டேன்.மேல்மூச்சு கீழ்மூச்சு
வாங்கியது....
தொலைவில் ஊர் தெரிய ஆரம்பித்தது.
இப்போது கண்கள் வானத்தைப் பார்க்கின்றன.
என்ன இது....வானம் முழுவதும் ஒரே புகை மூட்டம்.
எம்மோ....என்று அழுதே விட்டேன்.
அதற்குமேல் நடக்கமுடியவில்லை.
கால்கள் பின்னத் தொடங்கின.
அப்படியே அந்த பனங்காட்டில் உட்கார்ந்து
விட்டேன்.
எம்மோ...என் அம்மா....என் அம்மா...
என்னது இது ஊருக்கு கிழக்கே உள்ள
வானத்தில் ஒரே புகைமூட்டமா தெரியுதே...
நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது.
ஊருக்கு கிழக்கேதானே சுடுகாடு
இருக்கிறது.
தற்கொலை செய்து கொண்டவர்களை
ஊருக்கு கிழக்கே உள்ள சுடுகாட்டில்தான்
எரிப்பார்கள்.
அப்படியானால் ....அப்படியானால்...
இந்தப் புகை மூட்டம்....
அதுதானோ?
நெஞ்சுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
முழுதாக ஐந்து நிமிடம்கூட இருந்திருக்க
மாட்டேன்.
மறுபடியும் எழுந்து நடந்தேன்...
எப்படி நடந்தேன் என்று எனக்கே
தெரியாது.
எப்படியோ ஊரில் வடக்கு எல்லையான
வடக்கூருக்கு வந்துவிட்டேன்.
ஊர் கிணற்றடியில் போய் தண்ணீர்
குடிப்பதற்கு நிற்பதுபோல் நின்று
ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்தேன்.
யாராவது அம்மாவைப்பற்றி சொல்ல மாட்டார்களா
என்று ஒரு ஏக்கம்....
யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
என்னைப் பார்த்த ஒரு பாட்டி....
"ஐயோ..தண்ணி தவிச்சி வந்து பிள்ள வந்து
நிற்குது. முதலாவது அவளுக்கு
ஒரு பட்டை தண்ணி கொடுங்க "
என்றார்.
"ஏன் இந்த பாட்டி இப்படி சொல்கிறார்கள்?
ஒருவேளை அப்படி நடந்திருக்குமோ? "
ஒரு பெண் ஓலைப்பட்டையோடு தண்ணீர்
குடிப்பதற்குத் தந்தார்.
சிந்தியும் சிந்தாமலும் குடிப்பதுபோல
குடித்துவிட்டு தெற்கு
நோக்கி நடந்தேன்.காலில் பெலனே இல்லாதது
போல இருந்தது.
எதிராக வரும் யாரையும் நிமிர்ந்து
பார்க்க திராணியில்லை .
சற்றுதூரத்தில் மூத்த மாமன் வீடு இருந்தது.
அவர்கள் வீட்டிற்குப் போனால்
விசயம் தெரிந்துவிடும்.
மெதுவாக மூத்தமாமன் வீட்டை எட்டிப்
பார்த்தேன்.
என்னைக் கண்டதும் மாமா
"வா...வா...பள்ளிக்கூடத்திலிருந்து வர
நேரமாயிற்றோ ?"என்று விசாரித்தார்.
"எதற்கு மாமா நேரமாயிற்றோ என்கிறார்...
அப்படியானால் வீட்டில் ஏதோ நடந்துவிட்டதோ?
என் அம்மாவைப் பார்க்க முடியாமல்
போயிற்று என்பதற்காகதான் மாமா
இப்படி கேட்கிறார்களோ....."
ஒரு குழப்பத்தோடு பதில் சொல்ல
முடியாமல் வாசலிலேயே
தயங்கி தயங்கி நின்றேன்.
அதற்குள் பின்னாலிருந்து ஒரு கை
என்னை இழுத்தது.
திரும்பினேன்...எங்கள் சித்தப்பா மகள்..
"எங்க வீட்டிற்கு சாப்பிட வா"
என்றாள்.
"எதற்காக அவளுடைய வீட்டிற்கு
சாப்பிட கூப்பிடுகிறாள்.?
அப்படியானால்....அப்படியானால்...
கண்டிப்பாக எங்க வீட்டில் என்னவோ
நிகழ்ந்திருக்கிறது...."
எனக்கு ஓ..வென்று ஒப்பாரி வைக்க வேண்டும்
போல் இருந்தது.
ஆனால்....துணிந்து வீட்டிற்கும்
போக முடியவில்லை.
அங்கேயும் இருந்து சாப்பிட்டுவிட்டுப் போக
மனமில்லை.
சித்தப்பா மகள் கையைப்பிடித்து
வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள்.
என்னை வலுக்கட்டாயமாக கட்டிலில்
இருக்க வைத்து சாப்பாட்டு தட்டை முன்னால்
வைத்தாள்.
" வேண்டாம்...வயிறு பசிக்கல" என்றேன்.
" சும்மா சொல்லாத...எங்க வீட்டுல
சாப்பிடக் கூடாது என்று உங்க அம்மா
சொன்னாவளா?" என்றாள் .
" இல்ல...நிஜமாகவே எனக்கு வேண்டாம்..."
என்னால் எப்படி சாப்பிட முடியும்.?
தொண்டைக்குள் ஏதோ உருளுவது போல
இருந்தது. ஒரு உருண்டைகூட தின்ன
முடியாது.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.
அவள் விடுவதாகயில்லை.
அப்போது வெளியிலிருந்து வந்த சித்தி...
" சாப்பிடு.... ஏன் சாப்பிட மாட்டேங்கிறாய் ?" என்றார்.
" வீட்டுல போய் சாப்பிடுகிறேன் "என்றேன்.
" வீட்டுல போய் சாப்பிடப் போறியா..?
அங்கே யார் பொங்கி வச்சுருக்கா? "என்றார்
சித்தி.
வீட்டுல என் அம்மா இல்லையா....கேட்க
முடியல...சித்தி முகத்தையே பார்த்தேன்.
"சாப்பிடுன்னா சாப்பிடு... உங்க அம்மா இப்போதான்
கடையில இருந்து பருப்பு வாங்கிட்டுப் போறாவ....
இன்னும் குழம்பு வச்சிருக்க மாட்டாவ" என்றார் சித்தி.
அவ்வளவுதான்...சோறு வேண்டவே
வேண்டாம் என்று வலுக்கட்டாயமாக மறுத்துவிட்டு
வீட்டை நோக்கி ஓடினேன்.
அங்கே...நான் கண்ட காட்சி.
கட்டிலில் அம்மா...
எம்மோ...ஏ....ம்மோ...என்று அழுதபடி
அம்மா மடியில் போய் விழுந்தேன்.
பதறிப் போனார் அம்மா..
" எம்மோ என் பிள்ளைக்கு என்னாயிற்று...
எம்மா...எழும்பும்மா....எதுக்கு அழுறா
சொல்லு...என் பிள்ளைக்கு என்னவோ
ஆயிற்றே "அம்மாவும் கூட சேர்ந்து
அழ ஆரம்பித்தார்.
என்னால் உடனடியாக அழுகையை
நிப்பாட்ட முடியவில்லை.
என்னைத் தூக்கி பக்கத்தில் இருத்தி
முகத்தை முந்தானையால் துடைத்தார் அம்மா.
" அழாதம்மா....அழாதம்மா..
என்னன்னு சொல்லிட்டு அழு ".என்றார் .
"எம்மோ... நீ அப்படி சொல்லாதம்மோ..".என்றபடி
அம்மா தொடையில் இரண்டு
மூன்று குத்து குத்தினேன்.
"நான் என்னம்மா சொன்னேன்...?
என்றார் அம்மா.
"நீ காலையில அப்பாகிட்ட அப்படி
சொன்னாலியா ?"என்றேன்..
"நான் அப்பாகிட்ட என்ன சொன்னேன்.?"
அம்மா சுத்தமாக அந்த நிகழ்வையே மறந்து
போய்விட்டார்.
"செத்துப் போயிடுவேன் என்று சொன்னா
இல்லியா? நான் பயந்தே போயிட்டேம்மோ"
என்றேன் அழுதபடியே.
"அதுக்கா....இவ்வளவு அழுகை...?
நானும் என்னதோ ஏதோன்னு பயந்தே
போயிட்டேன்.
எம்மா...எம்புள்ளை எப்படி பயந்து
போயிருக்கு?
நான் சும்மா சொன்னேம்மா...
உங்களெல்லாம் விட்டுட்டு நான் சாவேனா? "
முகத்தைத் துடைத்துவிட்டபடி
இறுக்கி அணைத்துக் கொண்டார் அம்மா.
ஆனாலும் உடனடியாக என்னால்
இயல்புக்கு வரமுடியவில்லை.
மறுபடியும் "எம்மோ இனி ஒருக்காலும்
அப்படி சொல்லாதம்மோ...".என்றேன்
அழுதபடியே...
"சொல்லமாட்டேம்மா....சொல்லமாட்டேன்
நான் சாகவே மாட்டேன்....
உங்களை அநாதையாய் விட்டுட்டு
ஒருநாளும் சாக மாட்டேன் ....பயப்படாத"
என்று மடியில் கிடத்தி தடவிக் கொடுத்தார் அம்மா.
இப்போது நினைத்தாலும் அம்மா
சொன்ன அந்த வார்த்தை....அதன் தாக்கம்
அப்பப்பா....யாருக்குமே வரக்கூடாதப்பா..
இதுதாங்க அம்மா.
அந்த நினைவு வந்தாலே நான்
இன்றும் உடைந்து போயிருவேங்க....
இதற்குமேல் என்னால் எழுத முடியலங்க...
வைக்கிறேன்.
அம்மா சொன்ன ஒரு வார்த்தையை பல மடங்காக்கி அருமையான ஒரு அனுபவ கதையை கூறியது மிகச்சிறப்பு.
ReplyDeleteநீரோடை போன்ற தெளிவான மொழி நடை. இடையே திக் திக் உணர்வு. அம்மாவின் பாசம்
ReplyDeleteஅருமை அருமை. 🌺