இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்...
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்......
"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் "
குறள் : 415
இழுக்கல் - வழுக்குதல்
உடையுழி - ஏற்பட்டபோது
ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
அற்றே - அது போன்றது
ஒழுக்கம் - நன் நடத்தை
உடையார் - உடையவர்
வாய்ச்சொல் - வாய்மொழி, சொல்
வழுக்கும் தன்மை கொண்ட
சேற்று நிலத்தில்
நடக்கும்போது ஊன்றுகோல்
உதவுவதுபோல
ஒழுக்கமுடைய சான்றோரின்
வாய்ச்சொல் இடுக்கண் நேரும்
காலங்களில்
உதவியாக இருக்கும்.
விளக்கம் :
வழுக்குதல் உள்ள இடங்களில் கால்
வைக்கும் போது கால் வழுக்கி நாம்
கீழே விழ நேரிடலாம்.
அத்தகைய நேரங்களில் கையில் ஒரு
ஊன்றுகோல் இருக்குமானால் அது
நம்மைக் கீழே விழுந்து விடாதபடி
காப்பாற்றிக் கொள்ள உதவியாக
இருக்கும்.
அதுபோல வாழ்க்கையில் சில
நெருக்கடியான காலங்களைக்
கடந்து போக வேண்டியிருக்கும்.
இதனை நாம் எப்படி கடந்து
போவது என்று அஞ்ச வேண்டாம்.
எந்த நெருக்கடியான காலங்களிலும் எப்படி
நடந்து கொள்வது என்று சான்றோர்
சொல்லித் தந்த பாடங்களை
நினைவு படுத்திப் பாருங்கள்.
அவர்கள் சொன்ன வழியில்
நடவுங்கள்.இனி விழுந்து விடுவோமே
என்ற அச்சமே வேண்டாம்.
நல்லொழுக்கம் உடைய சான்றோர்
சொன்ன வார்த்தைகள்
தக்க நேரத்தில் நமக்குப் பக்க பலமாக
வந்து சிக்கலில் சிக்கிவிடாதபடி
மீட்டுக் கொண்டு வந்துவிடும்.
சான்றோர் சொன்ன வார்த்தைகளில்
எப்போதும் அன்பும் கரிசனமும்
இருக்கும். அந்தக் கரிசனம்
எப்போதும் நமது நலன் சார்ந்ததாகவே
இருக்கும்.சான்றோர் சொற்படி
நடப்போமானால் வாழ்க்கையில்
ஒருபோதும் வீழ்ந்து போகும் நிகழ்வுகள்
ஏற்படாது.
தடுமாறும் காலங்களில் யாரிடம் அறிவுரை
கேட்பது என்ற குழப்பம் ஏற்படலாம்.
அந்தக் குழப்பமே உங்களுக்கு வேண்டாம்.
ஒழுக்கமுடைய சான்றோரிடம் அறிவுரை
பெற்று நடங்கள்.
அந்த அறிவுரை உங்களைத் தூக்கி
நிறுத்துவதாகவே இருக்கும்.
நல்லோர் வாய்ச்சொல் நன்மையை
மட்டுமே தரும்.
அறிவுரை கேட்பதற்கு ஒழுக்கம் உடையவரை
ஏன் நாடிச் செல்ல வேண்டும்?
யாராய் இருந்தால் என்ன? அறிவுரை
அறிவுரைதானே என்ற கேள்வி எழலாம்.
இந்த இடத்தில் வள்ளுவர் ஒழுக்கம் உடையவர்
என்று சொல்லக் காரணம் ஒழுக்கம்
இருப்பவரிடத்தில் மட்டும்தான் அன்பையும்
பிறர் நலத்தையும் எதிர்பார்க்க முடியும்.
அறிவுரை சொல்பவர் கற்றிருந்தால் மட்டும்
போதாது. நல்ல பண்புநலன் கொண்டவராக
இருத்தல் வேண்டும்.பிற உயிர்களிடத்து
அன்பு கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களிடமிருந்து
நன்மைதரு சொற்களை எதிர்பார்க்க
முடியும்.
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல்
உதவுதல் போல ஒழுக்கம் உடையவர்
வாய்ச்சொல் தக்க நேரத்தில்
ஊன்றுகோலாய் இருந்து உதவும்
என்கிறார் வள்ளுவர்.
English couplet:
"Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways"
Explanation :
The words of the good are like a staff in a slippery
Place .
Transliteration :
"Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre
Ozhukka Mutaiyaarvaaich chol "
Comments
Post a Comment