கொண்டானைக் கொல்லும் படை
கொண்டானைக் கொல்லும் படை
மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம் என்று சொல்வார்கள்.
இந்த வரம் எல்லோருக்கும் நினைத்தபடி
வாய்த்திடுவதில்லை.
மனைவி சரியாக அமையாமல்
தடுமாறும் குடும்பங்கள் ஏராளம்.
நித்தம் நித்தம் சண்டை .
எதற்கெடுத்தாலும் கோபம்.
நான் எல்லாம் சமைக்க மாட்டேன்.
வேண்டும் என்றால் கடையில் வாங்கி
தின்போம்.
இப்படி வீட்டில் சமைக்காமல் கடையிலேயே
வாங்கித் தின்று நாளையும் பொழுதையும்
கழிக்கும் காலம்.
ஏட்டிக்குப் போட்டி பேசி மல்லுக்கட்டி
நிற்கும் பெண்கள் அதிகமாகி வரும்
காலம்.
பெண்ணுரிமை ...பெண்ணுரிமை என்று
சொல்லி உரிமை எது ? கடமை எது
என்பதுகூட பல நேரங்களில் புரியாமல்
போய்விடுகிறது.
உரிமைக்காக குரல் கொடுக்கிறோம்
என்று சொல்லி நம் கடமைகளைச்
செய்யாமல் விட்டு விடுகிறோம்.
கடமை தவறும்போது என்ன நிகழும் ?
கண்ட கண்ட பட்டங்கள்தான் வந்து சேரும்.
நாலடியாரில் ஒரு பாடல் வருகிறது.
அதில் பெண்ணைப் பார்த்து கூற்றம், பிணி,
பேய் என்று கூறப்பட்டுள்ளது.
பெண் என்றால் பேயும் இரங்கும்
என்பார்கள்...நான் பேயா...நான் பேயா...
என்று நாலடியார் பாடலுக்கு எதிராக
குரல் கொடுக்க வேண்டும்போல்
தோன்றுகிறதல்லவா!
இப்போது நாலடியாரை எழுதிய சமண
முனிவர்கள் இருந்திருந்தால் கோர்ட்டுக்கு
இழுத்திருப்போம்.
மான நஷ்ட வழக்கு தொடுத்திருப்போம்.
அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என்று
அறிய வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?
அப்படியானால்
கீழே உள்ள பாடலைப் படியுங்கள்.
"எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதால் அரும்பிணி - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை "
என்கிறது நாலடியார்.
கணவன் ஒன்று சொல்ல மனைவி எதிர்த்துப் பேசி
அடித்துப்பார் என்று மல்லுக்கட்டிக்கொண்டு
நின்றால் அவள் எமனுக்கு ஒப்பாவாளாம்.
காலையில் சமையலறைக்குள் சென்று
உணவு சமைக்காது சோம்பலாக
படுக்கையில் கிடக்கும் பெண்
கணவனுக்குப் பிணி ஆவாளாம்.
சமைத்த உணவை சரியான நேரத்தில்
உண்பதற்குத் தராமல் தான் மட்டும்
தின்பவள் பிசாசு எனப்படுவாளாம்.
ஏட்டிக்குப்போட்டி பேசுகிறவள், காலை உணவு
சமைக்காதவள், தான்தீனிக்காரி என்பதுபோன்ற
குணங்கள் பெற்றிருக்கும் பெண்கள்
கணவனைக் கொல்லும் படையாவர் என்கிறது
நாலடியார்.
எதிர்த்துப் பேசி சதா சண்டையிடும்
பெண்ணால் நிம்மதி போய்விடும்.
நிம்மதி இல்லை என்றால்
நெடுநாள் உயிர் வாழ முடியாது.
அதனால்தான் வந்துபார் என்று
எதிர்த்து நிற்கும் பெண்களைக்
கூற்றம் என்கிறார்.
காலை உணவு எடுத்துக் கொள்வது
மிகவும் இன்றியமையாதது.
காலை உணவு சமைக்காதிருந்தால்
எதை உண்ண முடியும்.?
பட்டினியாய்க் கிடந்தால் நோய்தான் வந்து
சேரும்.
அதனால் தான் அதிகாலை சமையலறைக்குள்
சென்று உணவு சமைக்காத பெண்கள்
கணவனுக்குப் பிணி என்கிறார்.
மூன்றாவதாக சமைத்த உணவை உண்பதற்குத்
தராது தான் மட்டும் உண்ணும் குணம்
கொண்டவர்களைப் பேய் என்கிறார்.
பேய்க்கு தான்மட்டுமே உண்ணும்
பழக்கம் உண்டாம்.
அதனால்தான் தான்தீனிக்கார மனைவி
பேயோடு ஒப்பிடப்பட்டிருக்கிறாள்.
இப்படி கணவனைக் கொல்லும் படையாக
மூன்று குணநலன்கள் சொல்லப்பட்டுள்ளன.
கணவனைக் கொல்லும் படையாக
சொல்லப்பட்ட மூன்று செய்திகளும் நமக்குப்
பொருந்தவில்லை அல்லவா!
நாலடியார் சொல்லும் விதிக்குள் நாம்
வரவில்லையா?
மகிழ்ச்சி.
இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க
வேண்டுமானால் ...அந்த மூன்றையும்
வீட்டுக்குள் அண்ட விட்டுவிடாதீர்கள்.
மிக அருமை.👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹
ReplyDeleteThere are many women nowadays like these. Appropriate time you have written this article. Good.
ReplyDeleteகுடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று எண்ணும் கணவன்மார்கள் பெண்களின் வேலைகளில் பங்கேற்கும் காலமாக மாறிவிட்டது.
ReplyDelete