வள்ளுவரும் வாசுகியும்

         வள்ளுவரும் வாசுகியும்

திருமண வீடுகளில் தவறாமல் உச்சரிக்கப்படும்
பெயர் வாசுகி.
வானும் நிலவும் போல...
வள்ளுவரும் வாசுகியும் போல...
உடலும் உயிரும் போல...
என்று வாழ்த்து இல்லாமல் இருக்காது.

வள்ளுவரும் வாசுகியும் போல என்பதால்
வள்ளுவரின் மனைவி வாசுகி என்பது நமக்குத்
தெரியும். அவர்களுக்குள் இருந்த
உறவு எப்படிப்பட்டது என்பது 
பள்ளிப்பருவத்தில் தமிழாசிரியர்கள்
வாயிலாக கேட்டிருப்போம்.
ஒரு சிலவற்றை மறந்து போயிருப்போம்.
நினைவூட்டலுக்காக சில செய்திகள்.

அந்த வாசுகி எப்படிப்பட்டவர் ?
ஏன் இந்த வாசுகிக்கு இத்தனை மதிப்பு? 
வள்ளுவரின் மனைவி என்பதினாலா.?
இல்லை நாம் கொண்டாடும் அளவுக்கு
வேறு ஏதேனும் சிறப்பு குணநலன்கள்
கொண்டவரா ?
இப்படி எண்ணற்ற கேள்விகள
நம் மனதில்  எழலாம்.


நம் கேள்விகள் அத்தனைக்கும் 
விடையளிப்பதுபோல
தொன்மக் கதைகள் பல வாசுகியைப்பற்றி
உலா வந்து கொண்டிருக்கின்றன .

கொங்கணச் சித்தர் என்று ஒரு சித்தர்
உண்டு. அவர் தனது கடுந்தவத்தால் எல்லா
வரமும் வாங்கி வைத்திருந்தார்.
ஆக்கும் வரமும் அழிக்கும் வரமும்
கையில் இருப்பதால் மனிதனுக்கு  ஒரு மமதை.
என்னை மிஞ்சியவர் யார் என்ற 
மேட்டிமையோடு சுற்றிக் கொண்டிருப்பார்.

என்னதான் சித்தராக இருந்தாலும்
பொசுக் பொசுக்கென்று கோபப்பட்டுவிடுவார்.
கோபப்பட்டால் மட்டும் பரவாயில்லை.
உடனே சாபமிட்டு அப்படியே 
பொசுக்கித் தள்ளி விடுவார்.
அல்லது வேறு ஏதாவது ஒரு உருவமாக
மாற்றிவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்.

இப்படித்தான் ஒருமுறை யாசகம் கேட்பதற்காக
ஒரு தெருவழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது தலைக்குமேல் பறந்து சென்ற
கொக்கு ஒன்று அவர்மீது எச்சிலிட்டுவிட்டது.

 சும்மா விடுவாரா? 
" என்மீதா எச்சில் போட்டாய்? 
 உன்னை...உன்னை என்ன
 செய்துவிடுகிறேன் பார்" என்று 
 நினைத்துக் கொண்டு 
 அப்படியே முறைத்துப் பார்த்தார்.
 
 மறு நிமிடம்.....
 கொக்கு சாம்பலாகிப் போனது.
 
 அவருக்கென்ன....? 
 எதுவும் நடக்காதது போல் தெருவில்
 நடந்து போனார்.
 இப்போது கொங்கணவருக்கு நல்ல வயிற்றுப்பசி.
 பக்கத்தில் வள்ளுவர் வீடு இருந்தது.
 வள்ளுவர் வீட்டு வாசலில்போய்
 யாசகம் கேட்டு நின்றார்.
 
அந்த நேரத்தில்....
வீட்டிற்குள் வள்ளுவருக்கு உணவு
பரிமாறிக் கொண்டிருந்தார் வாசுகி.
கணவருக்கு பணிவிடை செய்யும்போது
யாரையும் திரும்பிக்கூட பார்க்காத பண்பு 
வாசுகிக்கு உண்டு.
சித்தரைப் பார்த்தும் ....பார்க்காததுபோல்
கணவருக்கு  பணிவிடை செய்வதிலேயே
கவனமாக இருந்தார்.
நேரமாகிக் கொண்டே இருந்தது.
சும்மாவே கோபப்படுவார் சித்தர்.
பசி வேறு வயிற்றைப் பிசைந்தது.
கோபத்திற்குச் சொல்லவா வேண்டும்?

இப்போது கணவர் சாப்பிட்டாயிற்று.
இனி யாசகம் கேட்பவருக்கு உணவளிக்க
வேண்டுமே... வாசலுக்கு உணவோடு
வருகிறார் வாசுகி.

கொங்கணவருக்கு இவ்வளவு நேரம்
வாசலிலேயே காக்க வைத்து விட்டாளே
இந்தப் பெண் என்ற கோபம்.
அப்படியே வாசுகியை முறைத்துப் பார்த்தார்.
அவ்வளவுதான்.

என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

வாசுகி என்ன கொக்கா எரிந்து போவதற்கு ?

கொக்கென்று நினைத்தாயோ 
கொங்கணவா? என்று ஒரே போடாகப்
போட்டு கொங்கணவரைக் கலங்க
வைத்துவிட்டார் வாசுகி.

சித்தர் அப்படியே அதிர்ந்து போனார்.
"தான் கொக்கைச் சாபமிட்டு எரித்தது
எப்படி இந்த அம்மாவுக்குத் தெரியும்?"
என்பதுபோல அப்படியே 
வாசுகியைப் பார்த்துக்
கொண்டு நின்றார்.

ஆமாம்...வாசுகிக்கு எப்படித் தெரியும்? 
என்று கொங்கணவரைப் போன்று
உங்கள் மனதிலும் ஒரு கேள்வி எழலாம்.

தனது கற்பின் திறத்தால் எல்லாவற்றையும்
அறியும் திறன் பெற்றிருந்தாராம் வாசுகி .

அடேங்கப்பா....ஆச்சரியமாக இருக்கிறதில்லையா!
இது என்னங்க ஆச்சரியம். இன்னும் 
இருக்கிறது கேளுங்கள்.

வாசுகி கணவன் பேச்சுக்கு
மறுபேச்சு பேசவே மாட்டாராம்.

கணவன் என்ன சொன்னாலும் ஏன்
எதற்கு என்று கேள்வியே கிடையாது.

இப்படியும் ஒரு பெண்ணா? உங்கள்
நினைவோட்டம் புரிகிறது.
அது...அது...வள்ளுவர் காலம்.

ஒருமுறை வள்ளுவர் வீட்டிற்கு முனிவர்
ஒருவர் வந்தாராம்.
அவர் வந்த நேரத்தில் வீட்டில் பழைய
சாதமே இருந்ததாம்
வள்ளுவருக்கும் முனிவருக்கும்
பழைய சோறு பரிமாறினார்
வாசுகி.

சோறு சுடுகிறது...பக்கத்தில் இருந்து
விசுறு என்றாராம் வள்ளுவர்.
வாசுகியும் "பழைய சோறு எப்படி
சுடும் ?"என்று கேட்கவில்லை.
உடனே பக்கத்தில் இருந்து விசிறிக் 
கொண்டே இருந்தாராம்.

எங்கேயாவது பழைய சோறு சுடுமா?
இதனைக்கூட கேட்கவில்லை என்றால்...

அதனால்தான் வள்ளுவர் வாசுகியைப்
பேதை என்று பாடினாரோ?

ஒருநாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துக்
கொண்டிருந்தார்.
வீட்டுக்குள் இருந்த வள்ளுவர் 
வாசுகி என்று அழைத்தார்.
அழைத்ததுதான் தாமதம்...
நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்
என்ற நினைப்பு கொஞ்சம்கூட இல்லை.

கிணற்றில் நீர் இறைத்த வாளிக்
கயிற்றை அப்படியே விட்டுவிட்டு
வீட்டிற்குள் வந்து நின்றார் வாசுகி.

மறுபடி கிணற்றில் போய்ப் பார்த்தால்....
அங்கே ஓர் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
 அவர் விட்டுவிட்டு வந்த வாளி....
 அப்படியே அந்தரத்தில் நின்று
 கொண்டிருந்ததாம்.

ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ?

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை "

என்று பாடியிருக்கிறாரே...
மழையே பெய்யும்போது
தண்ணீர் இறைக்கும் வாளி 
அந்தரத்தில் நிற்பதில் என்ன வியப்பிருக்கப்
போகிறது.?

இது மட்டுமா?....
இன்னும் இருக்குங்க.

எப்போதும் வள்ளுவர் சாப்பிட
உட்கார்ந்ததும் ஒரு கொட்டாங்குச்சியில் நீரும்
ஒரு ஊசியும் கொண்டு வந்து பக்கத்தில்
வைத்துவிட வேண்டுமாம்.
நித்தம் நித்தம் 
வள்ளுவர் சாப்பிடும்போது
கொட்டாங்குச்சியில் நீரும் 
பக்கத்தில் ஊசியும் இருக்கும்.

ஏன்?   எதற்கு ? என்ற கேள்வி கேட்கும்
தைரியம் வாசுகிக்கு கிடையாது.
இருப்பினும் எதற்கு இவை எல்லாம் 
வைக்க வேண்டும் என்ற உண்மை
தெரிந்தாக வேண்டும் என்ற ஆவல் மட்டும்
மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது.

மரணப்படுக்கையில் வாசுகி கிடக்கிறார்.
"இப்போது அந்தக் கொட்டாங்குச்சி பற்றி
மெதுவாக கேட்டுவிடலாமா?"
என நினைக்கிறார்.
இருப்பினும் மனதிற்குள் ஒரு தயக்கம்.

ஆனால் இப்போதும் கேட்கவில்லை என்றால்...
வள்ளுவரின் முகத்தையே பார்த்தார் வாசுகி.

ஒரு நாளும் எதுவும் கேட்காதவள்.
முதன்முறையாக ஏதோ கேட்க
ஆசைப்படுகிறாள் என்பதைப் புரிந்து
கொண்டார் வள்ளுவர்.

"என்ன கேட்க வேண்டும் ? கேள்."
என்றார் வள்ளுவர்.

எப்படியோ ஒரு துணிவை வரவழைத்து
கொண்டு,
"சாப்பிடும்போது கொட்டாங்குச்சியும்
நீரும் எதற்காக வைக்கச் சொல்வீர்கள்?"
என்று கேட்டுவிட்டார்.

"அந்த உண்மை தெரிய வேண்டுமா....
சாப்பிடும் போது கீழே விழும் பருக்கையை
எடுப்பதற்கு ஊசி "என்றார்.
 
"அப்புறம்  அந்தக் கொட்டாங்குச்சியும் நீரும்..."
 என்றார் வாசுகி.
 
" கீழே விழுந்த பருக்கையை அப்படியே
 எடுத்து  உண்ண முடியுமா? 
 ஊசியில் குத்தி எடுத்து கொட்டாங்குச்சியில்
உள்ள நீரில் கழுவி தட்டில் உள்ள 
சாதத்தோடு போட்டு
உண்ண வேண்டும்" என்றார் .

" ஆனால் நீங்கள் ஒருநாளும் அவற்றைப்
பயன்படுத்தவில்லையே "எனக்
கேட்டார் வாசுகி.

"சாதம் கீழே விழுந்தால்தானே எடுக்க வேண்டும்.?
இதுவரை சாதம் கீழே விழவே இல்லையே...
அதனால் ஊசியையும்
நீரையும் பயன்படுத்த வேண்டிய அவசியம்
இல்லாமல் போயிற்று" என்றார் வள்ளுவர்.

வாசுகி உணவு பரிமாறும்போது
ஒரு பருக்கையும் சிந்துவதில்லை.
வள்ளுவரும் சாப்பிடும்போது
ஒரு பருக்கையும் கீழே விழாதபடி
கவனமாக சாப்பிடுவார்.

சிந்தாமல் சிதறாமல் சாப்பாடு பரிமாற
வேண்டும் என்பதை வாசுகியிடம்
கற்றுக் கொள்ள வேண்டுமாம்..

நல்லவற்றைக் கற்றுக்கொள்வதில் தப்பில்லை.

Comments

  1. வள்ளுவர் கதைகள் மிக அருமை.

    ReplyDelete
  2. இத்தனை புதிய செய்திகள் பகிர்ந்தமைக்கு நன்றி. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts