பாராட்டுமடல்
பாராட்டு மடல்
வீச்சும் பேச்சுமென எங்கும் கோலோச்சும்
வாஞ்சிபுகழ் கோநகர் நெல்லை அகத்தாய்
வஞ்சமில் நெஞ்சம்கொள் குலம் பிறந்தாய்
கொஞ்சுதமிழ் மங்கைமலர் விழிதிறந்தாய்!
இல்லறத்தில் அன்பரோடு இன்பம் தந்தாய்
நல்லற சாட்சியாய் நன்மக்கள் மூவர் கண்டாய்
நல்லதோர் வீணையை நாளும் மீட்டி
தலைமைக்கு உகந்த தகைமையாய் உயர்ந்தாய்!
ஆறேழு பள்ளிகளில் அழகுதமிழ் நடைபயின்றாய்
ஆழ்ந்த புலமைமிகு ஆசானெனப் பெயரெடுத்தாய்
அலையாடு மும்பைமொழி சொந்த மொழிபோல
உரையாடும் பெரும்பேறு வாய்க்கப் பெற்றாய் !
மலரன்ன மென்மை மனதில் கொண்டாய்
இதழன்ன புன்முறுவல் இதழில் வைத்தாய்
இன்னாரென்று பாராது எல்லோரையும் தொட்டாய்
ஒன்னாரில்லை எனும்பேரோடு எம்மை வென்றாய்!
பருவம் வந்துவிட கனிந்திடும் கனிபோல
பருவகால நிகழ்வு வந்தின்று ஓய்வுரைக்க
நற்பருவம் வாய்ப்பாக வந்ததென்று
எப்பருவமும் வாழ்த்துரைக்க பணிநிறைவு பெற்றாய்!
தொய்வில்லா அறப்பணி குமுகப்பணியாய்
தொடர்பணி யாகி தொண்டாய்த் தொடர்ந்திட
இறையருள் தங்கி நலம்பல தந்திட
மலர்கரம்கூப்பி மலருன்னை வாழ்த்துகிறேன் !
Comments
Post a Comment