இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி


செய்யுளின் சொல்லழகு,பொருளழகு

ஆகியவற்றை மெருகூட்டித் தருவதற்காக

கவிஞர்கள் அணியிலக்கணத்தை
இடத்திற்கு ஏற்ப கையாளுவர்.

சொல்லப்படும் பொருள் தெளிவாகப்
புரிய வேண்டும். செய்யுள் அழகும்
குறைந்துவிடக்கூடாது.

அதற்காக அணிகலன்களை அணிவிப்பதுபோல
அணிகளை அணிவித்து
பாடல்கள் எழுதும் பாங்கு எல்லா
புலவர்களிடமும் உண்டு.

அணிகளுள் அணிசெய் அணியாக
விளங்கும் இல்பொருள் உவமையணி
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இல்லாத ஒன்றை இருப்பதுபோல கற்பனை செய்து
அதனை உவமையாக கூறுவது
இல்பொருள் உவமையணி எனப்படும்

அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் துளிர்த் தற்று

என்கிறார் வள்ளுவர்.

கொடும்பாலை நிலத்தில் பட்டுப்போன
ஒரு மரமானது
தளிர் விடுவது என்பது
அன்பில்லா வாழ்க்கைக்கு
உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

கொடிய பாலைநிலம்.
நெடு நாட்களாக மழைகாணா பூமி.
அங்கங்கே நின்றுகொண்டிருந்த ஒற்றை
மரமும் பட்டுப் போய்விட்டது

மரம் பட்டது பட்டதுதான்.
எங்கேயாவது பட்டுப்போன மரம்
துளிர்த்து மறுபடியும் காய் ,கனி என்று
பழைய நிலைக்குத் திரும்புவதை
கண்டீரோ?

இல்லை அல்லவா!

இது எப்படி நடைபெறுவது
சாத்தியம் இல்லாததோ...அது
போன்றதுதான் அன்பு இல்லாத
வாழ்க்கையும் வளமாக வாழ்தல்
என்பது சாத்தியமில்லாதது.

மரத்திற்கு  நீர் எப்படி
இன்றியமையாததோ அதுபோன்று
வாழ்வுக்கு அன்பு தேவை.
என்பதை வலியுறுத்துவதற்காகவே
வள்ளுவர் பட்ட மரத்தை
வாழ்க்கைக்கு உவமையாகக்
கூறி புரிய வைத்துள்ளார்.

நடைபெற முடியாத ஒன்று
அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாக
கூறப்பட்டுள்ளதால் இது
இல்பொருள் உவமையணி.

மாலை வேளை மழைத்துளி பொன்மழை
பொழிந்தது போன்று இருந்தது.

எங்காவது பொன்மழை பொழியுமா?
இல்லை அல்லவா?

இல்லாத ஒன்று நடைபெற
முடியாத ஒன்று நடைபெற்றுக்
கொண்டிருப்பது போல்
சொல்லப்பட்டுள்ளது.

கண்களிலிருந்து குடங்குடமாக நீர்
வடிந்தது.

கண்ணீர் எங்காவது குடங்குடமாக
வடியுமா?

மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது
அல்லவா!

கம்பராமாயணத்திலிருந்து இல்பொருள்
உவமையணிக்கு ஒரு அருமையான
எடுத்துக்காட்டு உங்களுக்காக:

வன்துணைப் பெருந்தம்பி வணங்கலும்
தன்திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள்நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன
           செய்கையான்"

இராவணன் கும்பகர்னனை எழுப்பியதை
கம்பர் சொல்லுமிடத்தில் அழகான ஒரு
காட்சியை நம் கண்முன் படம்பிடித்துக்
காட்டுகிறார்.

கும்பகர்ணனை இராவணன் எழுப்பினான்
என்று சாதாரணமாக எழுதினால் பாடலில்
சுவை இருக்காது.
இரண்டு பெரிய அரக்கர்களை நம்
கண்முன் கொண்டுவந்து நிறுத்த
வேண்டும்.
அதுவும் பிரமாண்டமாக நம் கண்முன் விரிய
வேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம் என்று
நினைத்த கம்பர் இரண்டு குன்றுகளை
நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
வெறுமனே குன்று என்றால் உயிரில்லாததாகி
விடும். அதனால் குன்றுகளை நம்
கண்முன் நடக்கவிடுகிறார்.

தூங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணன்
எழுந்து வருகிறான்.
வந்ததும் இராவணனை வணங்குகிறான்.
உடனே அருகில் நின்றுகொண்டிருந்த
இராவணன் கும்பகர்ணனைக் கட்டிப்பிடித்து
மார்பாரத் தழுவிக் கொள்கிறான்.
இந்தக் காட்சி எப்படி இருக்கிறது தெரியுமா?
நின்றுகொண்டிருந்த குன்று ஒன்று
நீண்டு நெடுநெடுவென்று வளர்ந்த
கால்களுடன் நடந்து செல்லும் மற்றொரு
குன்றைத் தழுவி நிற்பதுபோல்
இருக்கிறதாம்...


நல்ல உவமை இல்லையா!

குன்று நடந்து செல்வது என்பது
எங்கேனும் நடக்குமா?
நடக்காதல்லவா!
கம்பர் நினைத்தால் குன்றும் நடக்கும்.
நமக்கு இல்பொருள் உவமை அணிக்கு
அருமையான எடுத்துக்காட்டும் கிடைக்கும்.

திரைப்படத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு
இதோ உங்களுக்காக:

தாமரை கதிரவனைக் கண்டதும்
மலரும்.
மாலையானதும் கூம்பிவிடும்.
இதுதான் உண்மை .
ஆனால் ஒரு திரைப்படப்பாடலில் புலமைப்பித்தன்
அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள்
என்று பாருங்கள்
?

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ!

ராஜசுகம் தேடிவர
தூதுவிடும் கண்ணோ!
சேலை சோலையே!
பருவசுகம் தேடும் மாலையே!
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ!
......    ....... .......    ......

தாமரை ராத்திரியில் பூத்திருக்கிறதாம்.

இதுவும் இல் பொருள் உவமையணி
என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குப்
புரிந்திருக்கும்.

இனி மறக்கவே மறக்காதல்லவா!

உவமையாக கூறப்படும் சொல்
இவ்வுலகில் இல்லாத ஒன்றாகவோ
நடைபெற முடியாத ஒன்றாகவோ இருந்தால்
அது இல்பொருள் உவமையணி
என்பதை நினைவில் வைத்துக் கொள்க.
!

Comments

  1. இல்பொருள் உவமையணியை மிகத் தெளிவாக விளக்கி பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts