இம்மை மாறி மறுமை யாயினும்

இம்மை மாறி மறுமை யாயினும்....


புன்னை மரத்தின் கீழ் தலைவி ஒருத்தி
நின்றிருக்கிறாள்.

புன்னை மரத்தில் அணில் ஒன்று 
 அங்குமிங்கும் தாவித்தாவி
புன்னங்கனிகளை ஒரு கடி
கடித்து கீழே வீசி விளையாடுகிறது.
புன்னம் இலைகளுக்கு இடையே
பூத்துக் கிடக்கும் பூக்களை உடலோடு உரசி
விளையாட்டு காட்டுகிறது.

அணிலின் விளையாட்டினைக் கண்ட
காற்றுக்கு கிளைகளை அசைத்து 
நாமும் கொஞ்சம் அணிலோடு 
விளையாடலாமே என்ற ஆசை
வந்துவிட....
சற்று வேகமாக மரக் கொம்புகளை ஆட்டி
அணிலை ஊஞ்சலாட வைக்கிறது.

அணிலின் ஊஞ்சலாட்டமும் கொம்புகளின்
உரசலும் 
பூக்களை ஒன்றோடொன்று 
முத்தமிட்டு விளையாட வைத்துவிட
பூந்தாது இதழ்களில் ஒட்டிக்கொள்கிறது.
இதழ்களின் மீதிருக்கும் தாதினைப்
புன்னம் இலைகள்  
துடைத்து நிற்க, பூக்கள் நன்றி சொல்வதுபோல்
மலர்ச்சி காட்ட என்று
புன்னை மரத்தில் அழகிய காட்சி
அரங்கேறிக் கொண்டிருந்தது.
அந்தக் காட்சியில் தன்னை மறந்து
நின்றவளைத் தொட்டு உலுக்கிய
தோழி பாவை,
"என்ன கனவு பலமாக இருக்கிறதோ?"
என்றாள்.

"அப்படி ஒன்றுமில்லை. அந்த அணில்
விளையாடுவதைப் பார்த்தேன்.அவ்வளவுதான்"

"அவ்வளவுதானா? வேறு ஏதேனும்
நினைவுகளா?"

"வேறு என்ன நினைக்கப் போகிறேன்.
உங்கள் அண்ணனைத்தான் நினைத்தேன்.
இரண்டு நாளாக வீடு வரவில்லை...
மனசுக்குள் ஏதேதோ நினைவுகள்"

"பொருள் தேடத்தானே சென்றிருக்கிறார்.
வருவார்"

"ஆனால் அப்படி நினைக்க முடியவில்லையே...
போன இடத்தில் வேறு ஏதாவது..."

"வேறு ஏதாவது என்றால்...?"

"வேறு எந்தப் பெண்ணோடும்..."

"சே...சே... அண்ணன் அப்படிப்பட்டவர் அல்லர்.
என்ன இது...திடீரென்று தேவையில்லாத
இந்தச் சந்தேகம்?"

"ஒன்றுமில்லை...அவர் போன நாளிலிருந்து
இப்படித்தான் மனம் ஏதேதோ நினைத்து
சஞ்சலமடைகிறது"

"அடி அசட்டுப் பெண்ணே....
அதோ பார்.. அண்ணனே வருகிறார்.
நீயே கேட்டுக் தெரிந்துகொள்"
என்றபடி காட்சியிலிருந்து விலகிக்
கொண்டாள் தோழி.


அருகில் ஒரு முள்ளிப் செடி.
அதில் நீலமணிபோல மலர்கள்
பூத்துக் கிடக்கின்றன.

இப்படி ஓர் அழகிய ஊருக்குச்
சொந்தக் காரன்தான் என் தலைவன்.
அவன் பிரிந்து சென்றுவிட்டு
இப்போதுதான் திரும்பி 
வந்திருக்கிறான்.
எங்கு சென்று வந்தாலும் அவனை யாருக்கும் விட்டுக்
கொடுக்கும் மனநிலை தலைவிக்கு இல்லை.

 அவளுக்கு   ஒரு சின்ன ஆசை.
 ஆசையை சொல்லிவிடவா?

தலைவனைப் பார்க்கிறாள்.
உதடுவரை வந்த வார்த்தையை அடக்கி
உமிழ்நீரால் ஒத்தடம் கொடுத்து
தடுத்து வைக்கிறாள்.
வார்த்தைகளை அமுக்கி 
உமிழ்நீரோடு விழுங்கி நிற்கிறாள்.

இந்தக் காட்சியைப் பார்க்கிற தலைவனுக்கு
தலைவி ஏதோ சொல்ல வந்து 
உள்ளுக்குள்ளேயே 
அடக்கி வைத்து,சொல்லவும் முடியாமல்
சொல்லாமல் இருக்கவும் முடியாமல்
உள்ளுக்குள்ளேயே தவித்துக்
கொண்டிருப்பது  புரிகிறது.

"என்ன...என்ன வேண்டும்...?
சொல் "என்கிறான்.

"ஒன்றுமில்லை ....."மளுப்பலாகப்
பதில் சொல்லி   மறைக்கப் பார்க்கிறாள்.


" நீ ஏதோ மறைக்கப் பார்க்கிறாய்
 என்பதை உன் கண்களே தெரிவிக்கின்றன.
சொல்ல மனமில்லை என்றால்
விட்டுவிடு "என்று அந்த காட்சியிலிருந்து
விடுபட நினைப்பதுபோல 
பாசாங்கு செய்கிறான்.

"ஒன்றுமில்லை...சொல்லவா....?
தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே ?"
என்று உறுதிப் பத்திரம் கேட்டு
வாங்கி வைத்துக்கொண்டு 
 பேச்சைத் தொடங்கலாமா வேண்டாமா
என்பது போல தலைவன் முகத்தைப் 
பார்த்துக் கொண்டு நின்றாள்.

"தப்பு..தவறு  என்று எதனையும் கண்டுபிடிக்கும்
மனநிலையில் நானில்லை.
உண்மையைச் சொல்லப் போனால்...."
என்று ஏதோ
தன்னை மறந்த நிலையில்
 பேச ஆரம்பித்தான்.

அதற்குள் அவள்,

"அணிற் பல் லன்ன 
கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் 
சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீ ஆகியரென்  கணவனை
யானா கியர்நின் நெஞ்சு நேர்பவளே!"

      - குறுந்தொகை

என்றாள்.
பாடலைக் கேட்ட தலைவன்
குபீர் என்று சிரித்துவிட்டான்.

"அவ்வளவு பெரிய ஆசையா?"
என்றான்.

"இதில் என்ன பேராசை இருக்கிறது.?
உண்மையைத்தான் சொன்னேன்.
எத்தனை பிறவி எடுத்தாலும்
நீதான்  என் கணவனாக இருக்க வேண்டும்.
நான்தான் உன் நெஞ்சில் நிறைந்தவளாக
இருக்க வேண்டும்."
என்று கூறிவிட்டு வெட்கப்பட்டு
தலைகுனிந்து நின்றாள்.

"இம்மை மாறி மறுமை யாயினும்
நீயே ஆயினை என் நெஞ்சு நேர்பவள்
போதுமா.....இன்னும் ஏதாவது ஆசை இருக்கிறதா?"
 குறும்புப் பார்வை பார்த்தபடியே கூறினான்.
 
"போங்கங்க...."என்று கண்களைப்
பொத்திக்கொண்டு பொய்க்கோபம்
காட்டினாள் தலைவி.

இது பொதுவாக எல்லாப் பெண்களும்
பேசுகிற பேச்சாகத் தான் இருக்கும்.

அதனை அருமையான காதல் காட்சியாக
நம்முன்
அரங்கேறியிருக்கிறார் புலவர்.


அது என்ன முண்டகம் என்று
கேட்க வேண்டும் போல் இருக்கிறதல்லவா?

கழிமுள்ளி மலரைத் தான் முண்டகம்
என்கிறார் புலவர்.

கழிமுள்ளியின் முள் அணியின் பல்லைப் போல்
இருக்குமாம். அதன் மலர்கள்
நீல நிறமாக இருக்கும் என்பதை
என்பதைப் பதிவு செய்திருக்கிறார் புலவர்.
அருமையான 
உவமையைக்கூறி
நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு
நம்மைக் கூட்டிச் சென்று
கழிமுள்ளி மலர்களை நம்
கண்முன் கொண்டு வந்து நிறுத்தி
சொல்ல வந்த கருத்தை எளிமையாக
காதல் நயத்தோடு கூறிய பாங்கு மிக அருமை!

"இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியரென் கணவனை
யானா கியர் நின் நெஞ்சு நேர்பவளே!"

அனைவரும் சொல்லிச் சொல்லி
மகிழும் பாடல் வரிகள்!

குறிப்பாக பெண்கள் நெஞ்சம் மகிழச்
சொல்லிச் சொல்லி உவக்கும்
வரிகள்!

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியரென் கணவனை
யானா கியர் நின் நெஞ்சு நேர்பவளே!

Comments

  1. மிகத் தத்துருவமாக காட்சியை காண்பது போன்ற உணர்வைத் தூண்டியது இந்தப் பதிவு.மிக அருமை.வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment