பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்....

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்....


"பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழைமையைக் கீழ்ந்திடா நட்பு"

                      குறள் :  801
                      
பழைமை - நெடுங்காலமாகத் தொடரும் நட்பு
எனப்படுவது - என்று சொல்லப்படுவது
யாதெனின்- எது என்றால்
யாதும் -சிறிய அளவியினும்
கிழமையை - உரிமையை
கீழ்ந்திடா - தாழ்வுபடுத்தாத
நட்பு - தோழமை


நல்ல நட்பு என்று சொல்லப்படுவது எது என்றால்
நம்மோடு பழகியவர்
உரிமையோடு செய்யும் செயலை
இகழ்ந்திடாது ஏற்றுக் கொள்வதேயாகும்.


விளக்கம் :

 நட்பு நெடுங்காலமாகத்
தொடரவேண்டுமானால் இருவரிடமும்
ஒருவரோடு ஒருவர்
ஒத்துப் போகும் பண்பு இருக்க வேண்டும்.
அப்போதுதான் அந்த நட்பு
தொடரும்.

ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில்
உங்கள் நண்பர் உங்கள்மீது அதிக
உரிமை எடுத்துக் கொண்டால்
எத்தனைபேர் அதனை மகிழ்ச்சியோடு
ஏற்றுக் கொள்வோம்?

அதிக இடம் கொடுத்துவிட்டோமோ என்று
சற்று ஒதுக்கப் பார்ப்போம்.
இதுவல்ல நட்பு.

வள்ளுவர் பார்வையில் 
நல்ல நட்பு என்பது  நம் நண்பர்
அதிகமான உரிமை எடுத்துக்கொண்டு
பிழைபட பேசினாலும் அதனை ஏற்றுக்கொண்டு
நட்பு சிதைவுறாது காப்பதாகும்.

பணத்தால், பதவியால்  
இருவருக்குமிடையே எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகள் 
இருந்தாலும் நெருக்கமான நட்பு
இருப்பவர்கள் எந்தவித பாகுபாடும்
பாராமல் ஒருத்தர் மீது மற்றவர்
எந்தவித மனவருத்தமுமின்றி
பண்போடு பழகுவர்.

நம்மிடம் கேளாமல் உரிமை எடுத்துக்கொண்டுவிட்டால்
செய்த செயல் பிழையாக இருந்தாலும்
பிறர் முன்னிலையில் கீழ்மைப்படுத்தாது
பொறுத்துக் கொள்வது தான்
நல்ல நட்பு .
அதைத்தான் வள்ளுவர்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
என்று உயர்வாகக் கூறுகிறார்.

நல்ல நட்பு எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும்
விட்டுக்கொடுக்காது.
யார் முன்னிலையிலும்
காயப்படுத்திப் பேசாது.
அதிக உரிமை எடுத்துக்கொண்டாலும்
உறவை முறித்துக் கொள்ளாது.
இப்படிப்பட்ட பண்புகள் இருந்தால் மட்டுமே நட்பு
நெடுங்காலமாகத்  தொடரும் .
அதுதான் நல்ல நட்பாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"Familiarity is friendship's silent fact
That to puts restraint on no familiar act."

Explanation :

Intimate friendship is that which cannot in the least be
injured by things done through the right of
longstanding intimacy.

Transliteration :

Pazhaimai enappatuvadhu yaadhenin yaadhum
Kizhamaiyaik keezhndhitaa natpu"

Comments

Popular Posts