இஞ்சி தின்ன குரங்கு

இஞ்சி தின்ன குரங்கு 

இருட்டு வீட்டுல குருட்டு எருமை
  என்ன செய்யுது?"
  குரல் கொடுத்தபடியே அடுப்பங்கறைக்குள்
  வந்தாள் புவனா.
  
"ஒண்ணுமில்யே....."உதட்டைப் பிதுக்கி
கையை விரித்தாள் மாலதி

" சம்மன் இல்லாமலே ஆஜர் ஆகுறமாதிரி
இருக்கு. ஏதோ இருக்கு ....
வாயைக் காட்டு....வாயைக்காட்டு...."
விடாமல் கேள்வி கேட்டாள்
தங்கை  புவனா.

"காவோலையில நாய் நடந்த மாதிரி
ஏன் சடசடன்னு பேசிகிட்டு
இருக்க ....என் வாயில ஒண்ணும் இல்லை.
பாரு...பாரு...நல்ல பாத்துக்க தாயி......."

"வாய்க்குள்ள ஏதோ இருக்கு அதுதான்
வாயைத் திறக்க மாட்டேங்கிற...
ஒண்ணுமில்லன்னா 
வாயை நல்லா திறக்க வேண்டியதுதானே,"

"இன்னா பாரு...ஆ...ஆ ...
முதலை மாதிரி  திறக்கட்டுமா....
நல்லா பார்த்துட்டியா?...பார்த்துட்டியா?"
வாயைப் பிளந்தாள் மாலதி.

" வாயை மூடு....சகிக்கல...
நீ விழுங்கிட்ட....ஏதோ தப்பு செஞ்ச மாதிரிதான்
தெரியுது....ம் கண்டு பிடிக்கிறேன்."

"இவ பெரிய டிடக்டிவ் ...கண்டு பிடிச்சுருவா
முசல் பிடிக்கிற நாயை மூஞ்சிலேயே
தெரியாது "

" முசல பிடிக்கிறேனா ...இல்லையா
என்பது புடிச்ச பிறகுல்லா தெரியும்.
பார்க்கலாம்....பார்க்கலாம்
கண்டு பிடிக்கிறேனா இல்லையான்னு
பார்க்கலாம்..."

என்னவோ செய்திருக்கா.
இந்த மாலதி ...முழியே சரியில்லியே...
தவிடு தின்ன கோழி மாதிரி இல்லா
திருவ திருவ  முழிக்கிறா...
தப்பு செய்துருக்கா அதுதான் இப்படி
பம்முறா....இல்லன்னா இப்படி
பம்முற ஆளு இல்லியே....
கண்டுபிடிக்கிறேன்....கண்டுபிடிக்கிறேன்"
என்று ஹாலில் வந்து
அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில்
ஈடுபட்டாள் புவனா.

"ஒருவேளை இப்படி செய்திருப்பாளோ...
இன்று எப்படியும் கையும் களவுமாக
பிடித்து அம்மா முன் நிறுத்தணும்.
இந்த புவனாவா கொக்கா...
இன்று இரண்டுல ஒரு கை
பார்க்காம விடக்கூடாது.
இவ எத்தனைமுறை அம்மாவிடம்
என்னை கோத்து விட்டிருப்பாள்...
மவளே  மாலதி ...நீ இன்னைக்கு
என்னிடம் மாட்டாம போகமாட்டாடியோ..."
பயங்கரமாக வலை விரித்துப்
பிடிக்கும் திட்டம் ஒன்று புவனாவின்
மனதில் உருவாகிக்கொண்டிருந்தது.

ஒரு ஐந்து நிமிடம் கூட
புவனாவால் இருப்பு கொள்ள முடியவில்லை.
மறுபடியும் அடுப்பங்கறைக்குச்
சென்று தண்ணீர் குடிப்பதுபோல
தண்ணீர் பானையைத் திறந்தாள்.

"ஏய்...இப்ப நீ எதுக்கு
இங்க வந்த....நான் என்ன
செய்றேன் என்று அத்தம் பார்க்கதானே வந்த..."

"இந்த அத்தம் ...சுத்தம் பாக்குற
 வேலை எல்லாம்
உன்னுடையது. நான் தண்ணீர்
குடிக்கத்தான் வந்தேன்.
உன்னை மாதிரி திருட்டுப் புத்தி
எல்லாம் எனக்கு கிடையாது."

"யாருடி திருடி...யாருடி திருடி...
தான் திருடி பிறரை நம்ப மாட்டா...
ஓவரா அலப்பற பண்ணாத "

"நான் அலப்பற பண்ணுறேன்.
நீ அலப்பாம காரியத்தை முடிக்கியோ?"

"நீ என்ன ...மறுபடியும் மறுபடியும்
நான் தப்பு பண்ணுன மாதிரியே பேசுற"

"தப்பு பண்ணல இல்ல....
அப்போ எதுக்கு திருட்டு முழி முழிச்சுகிட்டு
திருட்டு பூனை கருவாட்டு சட்டியைச்
சுத்துன மாதிரி 
அடுப்பங்கறையிலேயே சுத்திகிட்டு
நிற்குற...
வெளியில் வர வேண்டியதுதானே..."

"இது என் வீடு நான் எங்கேயும் நிற்பேன்.
அதைக் கேட்க நீ யாரு..."

"நீ யாருன்னு தானே கேட்ட...
கேளு மவளே கேளு....
அம்மா வந்ததும் நான் யாருன்னு
காட்டுறேன்."

"போ...போ...ஓவரா சீன் போடாத..."

"சீன் போடுவது
யாருன்னு அம்மா வந்த பின்னருல்லா
தெரியும்"
ம்..க்உம்...வலிச்சம் காட்டிட்டு
வெளியேறினாள் மாலதி.

"என்ன செய்வது?
எப்படி மறைப்பது? 
முழுசா ஒரு பத்து நிமிசம்
கிடைச்சா போதும். அப்படியே
வச்சுட்டு எஸ்கேப் ஆயிடலாம்....
ம்....என்ன செய்ய.....
இந்தப் புவனா ஒரு கேள்விக்குறியா
இல்ல இருக்குறா....'

இப்போது புவனாவிடமிருந்து
எந்த அனக்கமும் இல்லை.
மெதுவாக நாற்காலியை எடுத்து
போட்டு அதற்குமேல் ஒரு
பலகையை எடுத்து வைத்து
ஆட்டிப் பார்த்தாள்.
ஆடாததுபோல் இருந்தது.

இருந்தாலும் கீழே விழுந்துவிடக்
கூடாதே என்ற பயம் உள்ளுக்குள்
இருக்கத்தான் செய்தது.

ஒற்றைக்காலை எடுத்து நாற்காலிமேல்
வைத்தாள்.கால் நடுங்கியது.
ஏன் இப்படி? 
முன்பும் இப்படித்தானே ஏறினேன்.
இப்போது ஏன் இந்த தடுமாற்றம்?
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து
மேலே ஏறி
கையை நீட்டுவதற்குள்,
",பார்த்து....பார்த்து கீழே விழுந்திடப்
போகுற...."என்று குரல் கொடுத்தபடி
பின்னால் வந்து நின்று சிரித்தாள்
 புவனா.

"இதபாரு....மறுபடியும் மறுபடியும்
என்னைக் கோபப்படுத்தப்
பார்க்குற...."
தேவையில்லாமல் புவனாமேல்
சாடினாள்.

"செனப்படாத மவளே செனப்படாத...
பொய் சொல்லலாகாது பாப்பா...
பொய் சொன்ன வாய்க்கு
போஜனம் கிடைக்காது."
நக்கலடித்தாள் புவனா.

"எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு
அப்படியே உன்ன...."
ஓடிப்போய் முடியைப் பிடித்து இழுத்தாள்
மாலதி.

"இன்ன பாரு.... நான் சும்மா
இருக்கேன்...கையை எடு...
இல்ல நடக்கதே வேற...."

"என்னசெய்வ...என்ன செய்வ..
செய்து காட்டுடி பார்க்கலாம்."

"மாலதி ....சின்ன புள்ளன்னு
நினைக்காத....இப்போ கையை எடுக்கப்
போறியா இல்லையா .... நீ ரொம்ப
ஓவரா தான் போற..."

முடியில் இருந்த மாலதியின்
கையை இழுத்து விலக்கினாள் புவனா.

"என் மேல கை வச்சுட்ட இல்ல....
சும்மா இருந்த புண்ணை சொறிஞ்சு
விட்டுட்டல்ல....நான் யாருன்னு
காட்டுறேன்."

"சொறிஞ்சு கிட்டே கம்முன்னு
போய் உட்காரு.. "

"திருடிக்கு எவ்வளவு திமிரு...
அம்மா வரட்டும் வச்சுக்கிறேன் "


"சொல்லிக்கோ சுரைக்காய்க்கு
உப்பில்லைன்னு சொல்லிக்கோ...
வேலைய பார்த்துட்டு
போவியா...சும்மா நின்னு
முறைச்சுகிட்டு"

இருப்பினும் மனசுக்குள்ள
திக்...திக்..என்று இருந்தது.
ஒருவேளை இந்த புவனா
பார்த்திருப்பாளோ....
அதுதான் இவ்வளவு தைரியமா
பேசுறாளோ?
அம்மாவிடம் சொல்லிவிட்டால்
வேறு வினையே வேண்டாம்.
களவு எடுத்தால் கையில் சூடு வைப்பேன்
என்று அம்மா அடிக்கடி
சொல்வார்கள்..
இன்று சூடு கன்பார்ம்.
அம்மா கையில் சூடு வைப்பது போல
இருந்தது....
நினைக்கையிலேயே கை எல்லாம்
எரிவதுபோல இருந்தது.

"தெரியாமல் செய்துட்டேன் 
என்றால்  அம்மா கேட்பாங்களா ?
ஆடுன காலும் பாடுன வாயும்
நிற்காது. அதுபோல
திருடுன கை நிற்காது 
என்று அம்மா ஓயாம 
சொல்லிகிட்டு இருபாபாவ."
அம்மா கேட்பது இருக்கட்டும்.
இப்போது இந்த ராட்சஷியை
எப்படி சமாளிப்பது ?
இந்த புவனா கண்கொத்தி பாம்பாக
கண்முன்னே வந்து நிற்கிறாள....

ஏதாவது செஞ்சி இந்த புவனாவைத்
திசை திருப்பி எடுத்த எடத்திலேயே 
வச்சுறணும்... அல்லது புவனா
இன்று ஏழரையைக் கூட்டிருவா..."

என்று நினைத்தபடி மெதுவாக 
அடுப்பங்கறையிலிருந்து வெளியே
எட்டிப் பார்த்தாள்.

புவனா இப்போது வேறு ஏதோ சிந்தனையில்
இருப்பது போல இருந்தது.

தலையை உள்ளே இழுத்து மறுபடியும்
அந்த டப்பாவைப் பார்த்தாள்...

இப்போது அவளுக்கு துணிந்து
நாற்காலியில் ஏற முடியவில்லை.
பின்னாலிருந்து நாற்காலியை இழுத்துவிட்டு
விட்டால் ...
செய்தாலும் செய்வாள்....
ராட்சஷி....ராட்சஷி..." பல்லை 
நறநறவென்று கடித்தாள்.

"எம்மோ இங்க வந்து பாருங்க....
பார்த்தியளா...இங்க
என்ன நடக்குன்னு...."

அம்மா ஒன்றுமே பேசாமல்
இரண்டுபேரையும் மாறிமாறி
பார்த்தார்.

"எம்மோ இங்க வாங்க.
இங்க கிட்ட வந்து பாருங்க.
நீங்க இல்லாத நேரத்துல மாலதி
என்ன செஞ்சுருக்கா என்று
பாருங்க ....ஏதோ களவெடுத்துருக்கா" 
கையைப் பிடித்து
இழுத்து வந்து அம்மாவை மாலதிமுன்
ஆஜர் படுத்தினாள் புவனா.

"பள்ளிக்கூடத்துக்குப் போகிற
நேரத்துல இங்க என்ன செய்யுற"
கேட்டார் அம்மா.
"சும்மாதான்....."பேச முடியாமல்
மாலதி அங்கிருந்து வெளியேற .....

"ஏய்.....பதில் சொல்லிட்டுப் போ.
எங்க ஓடுற....பாவாடையைப் பிடித்து
இழுத்தாள் புவனா.

அப்போது பாவாடை செருகல் அவிழ்ந்துவிட
இடுப்பிலிருந்து கீழே விழுந்த
அந்தப் பொருளைப் படக்கென்று
கையில் எடுத்து மறைக்கப் போனாள்
மாலதி.

அதற்குள் கையைப் பிடித்து
அது என்ன என்று பார்த்த புவனா,

"அட...சீ...போ...இதுக்குத்தான
இந்த பில்டப் "என்று சொல்லி சிரித்தாள்.

மாலதியின் முகம் இஞ்சி தின்ன
குரங்கு மாதிரி அஷ்ட கோணலாகி
அப்படியே நின்றது.

Comments

Popular Posts