உணவு உண்ணும்போது பேசலாமா?

உணவு உண்ணும்போது பேசலாமா?
"செல்போன் பேசிக்கொண்டே
பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்
பரோட்டா தொண்டையில் விக்கியதால்
மரணம்."

செய்தியை வாசித்ததும்
அப்படியே அதிர்ந்து போனேன்.
பரோட்டா விக்கியதால் மரணமா?
இப்படியும் நிகழுமா?
என்னால் நம்பவே முடியவில்லை.


இதில் பரோட்டா தின்றதுதான் குற்றமா?
இல்லை செல்போன் பேசியபடி பரோட்டாவைத்
தின்றதுதான் குற்றமா?
என்று என் மனதிற்குள் ஒரு
பட்டிமன்றம் ஓட ஆரம்பித்தது.

செல்போன் பேசியபடி பரோட்டா
தின்பதில் என்ன குற்றம்?
செல்போன் பேசவில்லை என்றாலும்
சாப்பாட்டுத் தட்டின்முன் அமர்ந்ததும்
அனைவரும் பேசுவது இயல்புதானே!
எனக்கு நானே சமாதானப்படுத்திக்
கொண்டேன்.


செல்போன் பேசுவதற்கும் நாம்
சாதாரணமாக பேசுவதற்கும் என்ன
வேறுபாடு?
இரண்டிலும் பேசுவது வாய்தான்.
பேசிக்கொண்டே வேலை செய்யவில்லையா?
அது போன்றதுதானே இதுவும் 
என்று நினைக்கத் தோன்றும்.

இரண்டுக்கும் ஒற்றுமை இல்லை.
இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில்
நடைபெறாலாம். ஆனால் ஒரே
உறுப்பைக் கொண்டு இரு வேலைகள்
செய்யும்போதுதான் பிரச்சினை எழுகிறது.
பேசும்போது தொண்டையிலுள்ள குரல்நாண்
அதிர்வலைகளை ஏற்படுத்தும்போதுதான்
ஒலி எழுப்பமுடியும்.

இப்போது உணவுபோய் தொண்டையில்
நின்று கொண்டு எனக்காகவும் வேலைசெய்
என்கிறது. 
தொண்டையால் இரண்டு வேலையை 
ஒரே நேரத்தில் செய்ய முடியவில்லை.
முடியாத சூழலில்
இப்படிப்பட்ட சிக்கல்கள் எழுகின்றன.


அதனால்தான் உணவு உண்ணும்போது 
பேசக்கூடாதாம்.
இதுதானே அம்மா நமக்குச் சொல்லித்
தந்த பாடம்.
அப்படிப் பேசினால் புரையேறிவிடும்
என்று அம்மா அடிக்கடிச் சொல்லுவதும்
இதற்காகத்தானாம்.

பரோட்டா போன்ற திட உணவுகள்
மூச்சுக்குழலுக்குள் போய் மூச்சு
விடமுடியாமல் செய்துவிடும்.
பக்கத்தில் தண்ணீர் இருந்தால்
தண்ணீர் குடித்து ஓரளவுக்கு
ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.
இல்லையென்றால்....இதோ செய்தியில்
சொல்லப்பட்டது போன்ற அசம்பாவிதங்கள்
நடந்துவிடும்.

சாப்பிடும்போதாவது செல்போன்
சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்.
அதுதான் செல்போனுக்கும் நல்லது.
உங்களுக்கும் நல்லது.

இப்போது ஆசாரக்கோவை என்ற நூலில்
எப்படி எல்லாம்
உண்ணக்கூடாது என்று சொல்லித்
தந்துள்ளார் பெருவாயில் முள்ளியார்
என்பதை இந்தச் செய்தியோடு
சேர்த்துப் பார்த்துவிடுவோம்.

"கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்
வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்;கட்டில்மேல் உண்ணார்
இறந்து ஒன்றும் தின்னற்க நின்று"
                       -        ஆசாரக்கோவை

படுத்துக்கிடந்தபடி ஒருபோதும்
எந்தப் பொருளையும் உண்ணக் கூடாதாம்.
படுத்துக்கிடந்து உண்டால் புரையேறிவிடும்.

நின்றபடியும் உண்ணக்கூடாதாம்.
நின்றபடி உண்டால் அவசர அவசரமாக
உண்போம். அங்கங்கே சிந்தி சிதறவிட
வாய்ப்பிருக்கிறது. அதனால் உணவு 
வீணாகிவிட வாய்ப்புள்ளது.
அதனால் நின்றபடி உணவு உண்பதைத்
தவிர்த்துவிடவேண்டுமாம்.

அடுத்து வெளியில் நின்றும் 
உண்ணக்கூடாதாம்.வெளியில் நின்று
உண்டால் உணவில் காற்றிலுள்ள
தூசு துரும்புகள் உணவின்மீது
வந்து ஒட்டிக்கொள்ளும்.
அதனால் உணவுமாசு ஏற்பட
வாய்ப்புள்ளது.
அதனால் வெளியில் நின்று ஒருபோதும்
உணவு உண்ணக் கூடாதாம்.

விருப்பமாக இருக்கிறது என்று
தேவைக்கு அதிகமாக உண்ணுதல்
கூடாதாம்.
அதிகமாக உண்டால் ஜீரணம்
ஆகாது.

கட்டில்மேல் உட்கார்ந்து உண்ணவே
கூடாதாம்.

இதெல்லாம் இந்த காலத்திற்கு
ஒத்து வருமா? 
அதுவும் மும்பை போன்ற
பெருநகரங்களில் இது சாத்தியப்படக்
கூடியதா என்பீர்கள்.
சாத்தியப்படுமா?
சாத்தியப்படாதா ?
என்பதல்ல இங்கே பிரச்சினை.

உடல் நலன்தான் இங்கே முக்கியம்.
சுவர் இருந்தால்தானே சித்திரம்
எழுத  முடியும்.


வேறு எப்படித்தான் உண்ண வேண்டும்
என்று சொல்கிறீர்கள் என்று
கேட்கிறீர்களா?

அமைதியாக உண்ணுங்கள்.
அவசர அவசரமாக உண்ணாதீர்கள்.
சிறிய சிறிய கவளமாக எடுத்து
உண்ணுங்கள்.

உணவு எதற்காக? 
உடல் நலனுக்காகத்தானே!
அந்த உடலுக்கு 
ஊறு விளைவிக்கும்படியான நிலையில்
உண்ணலாமா? 

உடலுக்கு ஊறு ஏற்படா 
வண்ணம் உணவை எடுத்துக்
கொள்ளுங்கள்.

இதுதான் பரோட்டா
செய்தி நமக்குச்
சொல்லித் தரும் பாடம்.

பரோட்டோ செய்திக்குள் 
இத்தனை உண்மைகள் 
மறைந்துள்ளனவா! 
வியப்பாக இருக்கிறதல்லவா!
வியப்பிற்காக சொல்லப்பட்ட 
செய்தியல்ல இது.

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக
சொல்லப்பட்ட  செய்தி!

உண்ணும்போது பேசுவதைத் தவிர்ப்போம்.
பேசும்போது உண்ணாதிருப்போம்.
விழிப்போடு இருப்போம்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

வரட்டா...



Comments