நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்....
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்....
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும் "
குறள் : 476
நுனி - முனை
கொம்பர்- சிறிய கிளை
ஏறினார் -ஏறியவர்
அஃது-அது
இறந்து-கடந்து
ஊக்கின் - மேலும் முயன்றால்
உயிர்க்கு-உயிருக்கு
இறுதி-முடிவு
ஆகி விடும் - அமைந்துவிடும்
மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும்
கடந்து மேலே செல்வேன் என்று ஏற முனைந்தால்
அதுவே அவருடைய உயிர்க்கு இறுதியாக
அமைந்துவிடும்.
விளக்கம் :
மரத்தில் ஏறியவர் கிளையின்
நுனி வரை சென்றுவிட்டார்.
அத்தோடு நின்றுவிடாமல் ஆர்வமிகுதியால்
இன்னும் மேலே செல்வேன் என்று
மேலே ஏறினால் கீழே விழுந்து
உயிர்விட நேரிடும்.அதுபோல
ஒரு எல்லைக்கு மேல் மேலும் என்னால்
செய்ய முடியும் என்று ஏதோ ஒரு
மன ஊக்க மிகுதியால் நம்
ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு செயலைச்
செய்ய முனைந்தால்
அது இறுதியில் துன்பத்தில்தான்
முடியும்.
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
தன் ஆற்றலின் எல்லை அறிந்து
செயல்பட வேண்டும்.
ஒரு மரத்தில் ஏறி காய்களைப்
பறிக்கும்போது நுனிக்கொம்பு வரை
செல்வது ஆபத்தானது என்பது
அனைவருக்கும் தெரியும்.
அதனை உவமையாகச் சொல்லி
உவமேயத்தைச் சொல்லாமல்
உய்த்தறிந்து கொள்ளுங்கள் என்று
நமது தேர்வுக்கு விட்டுவிட்டார் வள்ளுவர்.
மரம் ஏறுபவருக்கு மரக்கொம்பில்
எதுவரை செல்ல
வேண்டும் என்ற அறிவு இருக்க
வேண்டும்.
அதுபோல ஒரு செயலைச் செய்பவருக்கு
தன் ஆற்றலின் எல்லை தெரிந்திருக்க
வேண்டும்.
எல்லை மீறினால் இழப்பு நிச்சயம்
என்கிறார் வள்ளுவர்.
உவமானம் சொல்லப்பட்டுள்ளது.
உவமேயம் சொல்லப்படவில்லை.
நாம்தான் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதனால் இக்குறள் பிறிது மொழிதல் அணியாகும்.
English couplet:
Who daring climbs and would himself upraise beyond
the branches tip with life the forfeit pays"
Explanation :
There will be an end to the life of him who , having climbed
out to the end of the branch, ventures to go further.
Transliteration:
"Nunikkonpar erinaar aqdhiran thookkin
Uyirkkirudhi aaki vitum"
ஒருவர் தனது ஆற்றலை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை குறள் வாயிலாக பதிவிட்டது மிகஅருமை.
ReplyDelete