மணிமுடியில் மரகதக்கல்
மணிமுடியில் மரகதக்கல்
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து"
என்றார் திருவள்ளுவர்.
உதவி என்பது செய்யப்படும் அளவைப்
பொருத்து சிறப்படைவதில்லை.
உதவிப் பெறுபவரின் பண்பாட்டைப்
பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
நன்றாக இருக்கிற ஒருவருக்கு
உதவி செய்ய எத்தனையோ பேர்
முன்வருவர்.
ஆனால் எனக்கு யாருமே இல்லையே
என்று ஒருவர் நிராதரவாக நிற்கும்போது
நான் இருக்கிறேன் உங்களுக்கு உதவ
என்று ஒருவர் முன்வந்து நின்றால்....?
அப்படியே பேச முடியாமல் திகைத்து நிற்போம்.
கலங்கிய நேரத்தில் கை கொடுத்துத்
தூக்கிவிட வந்தவர் நம் கண்களுக்குத்
தெய்வமாகவே தெரிவார்.. அப்படி
நிராதரவான நேரத்தில் கை கொடுத்து
உதவியவர் யார் என்று அறிய
ஆசையாக இருக்கிறதல்லவா?
அதற்கு முன்னால் நடந்தது என்ன
என்பதைப் பற்றி
தெரிந்துகொள்ள வேண்டாமா?
இது கதை அல்ல. உண்மைச் சம்பவம்.
நம் தலைமை ஆசிரியை ஒருவருக்கு
நிகழ்ந்த சோகம்.
ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியம் பெறும்
மகிழ்ச்சியே அலாதிதாங்க.
எவ்வளவு பணம் வைத்திருப்பவராக இருந்தாலும்
மாதத்தின் முதல் நாள் ஓய்வூதியம் வந்துவிட்டதா
என்று அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக
இருப்போம். பணம்
வந்துவிட்டது என்ற குறுஞ்செய்தியைப் பார்த்த
பின்னர்தான் அப்பாடா....
இந்த மாதப் பணம் வந்துவிட்டது
என்ற ஒரு நிம்மதி ஏற்படும்.
இதற்குக் காரணம் பணம் வராமல்
போய்விடுமோ என்ற
அச்சம் எங்கோ ஒரு மூலையில் பதுங்கி
இருந்துகொண்டு நம்மைப்
பயங்காட்டிக் கொண்டே
இருப்பதுதாங்க.
இப்படித்தாங்க நமது தலைமை ஆசிரியை திருமதி
மெர்சி பனுவேல் அவர்களும்
ஒவ்வொரு மாதமும் ஒரு
எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறார்கள்.
எல்லோரையும் போலவே
பயந்த அந்த நிகழ்வு
ஒருநாள் நடந்தேவிட்டது.
கலங்கிப் போய்விட்டார் நம்
ஆசிரியை அவர்கள்.
கடந்த 82 மாதங்களுக்கு முன்னர்
நடைபெற்ற நிகழ்வு இது.
திடீரென்று ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது.
இப்போது யாரிடம் போய் முறையிடுவது?
எங்கே போய்க் கேட்பது?
ஆசிரியை மட்டுமல்ல.
குடும்பத்தினர் அனைவரும் கையைப்
பிசைந்து கொண்டு நின்றனர்.
ஓய்வூதியம் நிறுத்தி
வைக்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?
வாழ்க்கைச் சான்றிதழ் வழங்கியதில் இருந்த
சிறிய தவறுதல் காரணமாக கடந்த
எண்பத்து இரண்டு மாத காலமாக
ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஓய்வூதிய அலுவலகத்திற்கு கடிதத்திற்குமேல்
கடிதம் எழுதிப் பார்த்தனர்.
எந்தப் பயனுமில்லை.
நேரில் சென்று அணுகினர்.
நீங்கள் அனுப்பிய வாழ்க்கைச் சான்றிதழில்
தவறு இருந்ததால் நிராகரிப்பட்டது என்று
பொறுப்பில்லாமல் பதிலளித்துத்
திருப்பி அனுப்பிவிட்டனர்.
இனி என்ன செய்வது?
என்ற கேள்வி முன் வந்து நின்றபோது
ஒரு நண்பர் மூலமாக நமது ஸ்டீபன் எடிசன்
ஆசிரியர் அவர்கள்
அறிமுகம் கிடைத்தது.
ஸ்டீபன் ஆசிரியரிடம் விபரம் தெரிவித்ததும்
அவர் சொன்ன பதில் அவர்களை அப்படியே
நெகிழ வைத்தது.
அப்படி என்ன அவர் சொல்லியிருப்பார்
என்று நினைக்கிறீர்களா?
"பயப்படாதீங்க மேடம்.
நான் பார்த்துக் கொள்கிறேன் "
என்பதுதாங்க சார் அவர்களுக்குச்
சொன்ன பதில்.
அத்தோடு இந்தப் பிரச்சினையை
நமது ஆசிரியர்
விட்டுவிடவில்லை. பால் ஜெபஸ்டின் ஆசிரியர்
மற்றும் ஸ்டீபன் ஆசிரியர் இருவரும் மெர்சி
ஆசிரியையின் ஊரான கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள
நெய்யூரில் சென்று ஆசிரியையை நேரில்
பார்த்தனர்.
அகவை மூப்பு காரணமாக ஆசிரியையால்
யாரையும் அடையாளம் கண்டு கொள்ள
முடியவில்லை.
அவர்களை அலுவலகம் அழைத்து வந்தாலும்
முறையாகப் பேச முடியாத நிலைமை.
அலுவலகத்தினரோ நிலைமையைப்
புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை.
அதற்காக ஆசிரியர் அவர்கள் மனம்
தளர்ந்து விடவில்லை
ஓய்வூதிய அலுவலகம் நோக்கி
ஓயாப் பயணம்.
இப்போது ஓய்வூதிய அலுவலகத்திலிருந்து
சாதகமானப் பதில் ஒன்று வந்தது.
மகிழ்ச்சியான செய்தியோடு கூடவே
ஒரு நிபந்தனையும் வந்தது.
இது என்ன சோதனை என்று
நமது ஆசிரியர் அவர்கள்
கலங்கவில்லை .
அதற்கென்ன எளிதாக முடித்துவிடலாம்
என்று நினைத்தார்.
ஆசிரியர் நினைத்தபடி அந்தக் காரியம்
எளிதாக முடியவில்லை.
அப்படி என்ன கடினமான
நிபந்தனை விதித்தார்கள்
என்று கேட்கிறீர்களா?
ஓய்வூதிய அலுவலுகத்திற்குச் சென்று
பணியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்கள்
உறுதிமொழி பத்திரத்தில்
கையெழுத்திட வேண்டுமாம்.
அப்போதுதான் பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்ளப்படும்
என்று சொல்லிவிட்டார்கள்.
இது எளிதான காரியம்தானே என்று
ஆசிரியர் நினைத்தார். ஆனால்
யாரும் ஆசிரியைக்காகக்
கையெழுத்திட முன்வரவில்லை.
அனைவரிடமும் ஏதோ ஒரு தயக்கம்.
அதனால் அந்த முயற்சி
வெற்றி பெறவில்லை.
அதற்காக எடுத்த காரியத்தைக்
கைவிட்டுவிட முடியுமா?
இப்போதுதான் நமது ஆசிரியர்
மனதில் ஓர் எண்ணம் உதித்தது.
ஓய்வூதியம் பெறுவது ஒவ்வொரு அரசு
ஊழியரின் உரிமை.
அதை எந்தக் காரணங்களுக்காகவும்
யாராலும் நிறுத்திவிட முடியாது.
இதனைச் சட்டப்பூர்வமாக
அணுகினால் என்ன?
என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அதுதான் நமக்கு இப்போது
இருக்கும் ஒரே வாய்ப்பு
என்று நமது ஆசிரியர் நம்பினார்.
அதற்காக சட்ட வல்லுநர்களின்
ஆலோசனைகளைப் பெற்று
ஆசிரியரின் மருமகனை அணுகி
விவரத்தைக் கூறினார்.
அவர்களும் உடனடியாக அதற்கான
நடவடிக்கைகளைச் செய்தனர்.
ஒரு வழக்கறிஞர் மூலம் ஓய்வூதிய அதிகாரிக்கு
சம்மன் அனுப்பப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்டதும்
ஓய்வூதிய அலுவலகம் விழித்துக் கொண்டது.
வேலைகள் துரிதமாக நடைபெற்றன.
நான்கு மாதங்களுக்குள் அனைத்துத் தரப்பு
தரவுகளும் சேகரிப்பட்டு
தீர்ப்பும் வழங்கப்பட்டது.
ஓய்வூதியதாருக்கு முழுப்பணமும்
உடனடியாக வழங்கப்பட வேண்டும்
என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பைப் பார்த்ததும் ஆசிரியையின்
குடும்பத்தினர் பெற்ற மகிழ்ச்சிக்கு
அளவேயில்லை.
ஆசிரியையின் மருமகன் உயர்திரு .ஜெயகர்
அவர்கள் நமது ஆசிரியரோடு தமது
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
இவை எல்லாம் உங்களாலேயே
சாத்தியமாயிற்று என்று மெர்சி ஆசிரியையின்
குடும்பத்தினர் நமது ஆசிரியரைக் கொண்டாடினர்.
பேச வார்த்தைகளே இல்லை என்று
நெகிழ்ச்சியாக அவர்கள் பேசிய தருணம்
கண் கலங்க வைத்தது.
நெகிழ வைத்தது.
இருக்கட்டும்....இருக்கட்டும்.
தீர்ப்பு வந்தது.பணம் கிடைத்ததா?
என்று கேட்கிறீர்களா?
கிடைக்காமல் இருக்குமா?
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் இல்லைங்க.
பதினேழு இலட்சம் ரூபாய்
மெர்சி ஆசிரியையின் வங்கிக் கணக்கில்
டிசம்பர் முதலாம் நாள் போட்டுவிட்டனர்.
கடந்த 82 மாதகால
போராட்டத்திற்குத் தீர்வு டிசம்பர்
முதலாம் நாள் கிடைத்துவிட்டது.
நான்கு ஆண்டுகால நமது ஆசிரியரின்
முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.
மகிழ்ச்சியான நிகழ்வு இல்லையா?
இந்த மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடுவது?
ஸ்வீட் எடு கொண்டாடு.
என்னவொரு மகிழ்ச்சி!
ஓய்வூதியம் என்பது நமது உரிமைப் பணம்.
அதை எக்காரணம் கொண்டும் யாராலும்
நிறுத்திவிட முடியாது.
இதற்கு இந்தச் சம்பவம் சாட்சி.
ஓய்வு பெற்ற பின்னர் நம் அனைவருக்குமே
அலுவலகம் செல்ல தயக்கம் இருக்கும்.
மூப்பு அல்லது பலவீனம் காரணமாக
நம்மால் எங்கும் செல்லமுடியாத நிலை
இருக்கலாம்.
அதற்காக கலங்க வேண்டாம்.
நமது ஆசிரியரை எந்த நேரத்தில் தொடர்பு
கொண்டாலும் உங்களுக்காக உதவ
ஆசிரியர் தயாராக இருக்கிறார்.
இதுதாங்க வேணும்.
ஸ்டீபன் ஆசிரியர் இருக்கும்வரை யாருக்கும்
எந்தக் கலக்கமும் வேண்டாம்.
இதுமட்டும் இல்லைங்க...வேறு எந்த உதவியும்
நமது ஆசிரியரிடம் தயங்காமல் கேட்கலாம்.
என்ன வேணும் சார்?
என்ன வேணும் மேடம்?
என்று ஓர் அன்பான குரல்
உங்களுக்கு உதவ எப்போதும்
முன்வந்து நிற்கும்.
இந்த நேரத்தில் பால் ஜெபஸ்டின் ஆசிரியர்
அவர்களுக்கும் பாராட்டுதலையும்
நன்றியையும் தெரிவித்துக் கொள்ள
வேண்டும். இந்த முன்னெடுப்புப்
பணிகளில் அவர்களும் ஸ்டீபன் சார்
அவர்களுக்கு துணை நின்றிருக்கிறார்கள்.
நம்மால் உதவ முடியும். அப்படி
ஓர் உயர்ந்த நிலை நமக்குக்
கிடைத்திருக்கும்போது அதனை வாய்ப்பாகப்
பயன்படுத்தி உதவுவதுதான்
மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும்
செய்துகொண்டுவரும்
செயலாக இருக்கும்.
பிறர்க்கு உதவ நமது ஆசிரியர்
ஒருபோதும் தயங்குவதே இல்லை.
பணிமாற்றம்,பணிக்கொடை,
ஓய்வூதியம்,
வருமானவரி போன்ற எந்தச் சிக்கல்
இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
உங்களுக்காக ....உங்களின் நண்பனாக....
உங்களின் சகோதரனாக ...
உதவிக்கரம் நீட்ட நமது ஸ்டீபன் எடிசன்
ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்
என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதைப் போன்று எந்தச் சிக்கல்
ஏற்பட்டாலும் ஆசிரியரை அணுகலாம்
என்பதைத் தெரியப்படுத்தவே
இந்தக் கட்டுரை.
மனிதநேய மாமணியின் மணிமுடியில்
மற்றுமொரு மரகதக்கல்லாக அமைந்தது
இந்தச் சாதனை என்று பெருமிதத்தோடு
சொல்லிக் கொள்ளலாம்.
வாருங்கள் .
வானும் நிலனும்போல
வாழ்வாங்கு வாழ்க!
என்று நாமும் வாழ்த்தி மகிழ்வோம்!
"எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு "
Wow, wow
ReplyDeleteஉண்மை நிகழ்வை உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளால் பதிவிட்டது மிக அருமை.ஸ்டீபர் ஆசிரியர் அவர்களை பாராட்டி எழுதிய கட்டுரையின் தலைப்பு மிக மிக பொருத்தமானதாக இருந்தது. உதவிகரம் நீட்டிய ஆசிரியருக்கும் அதை பதிவிட்டு மகுடம் பொருத்திய செல்வபாய் ஆசிரியைக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete