வீரமாமுனிவரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

வீரமாமுனிவரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் 


தமிழ் எழுத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் 
ஒவ்வொரு மாறுதலைச் சந்தித்து
இன்றைய எழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளது.

எழுத்து அப்படியே இருந்தால் என்ன?
அதனை மாறுதலுக்கு உட்படுத்த 
வேண்டிய அவசியம் என்ன?
அதனால் என்ன பயன் நடந்துவிடப்
போகிறது ?
என்று கேட்பவர்களும் உண்டு.

ஒரு சொல்லுக்கும் இன்னொரு
சொல்லுக்குமிடையே உள்ள வேறுபாடு
எளிதில் புலப்படாமை காரணமாக எழுத்து
மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
இதைத் தவிர்ப்பதற்காகவும்
எழுத்து எளிமையாக இருந்தால்தான் 
அனைவரும்
எளிதாக படிக்க முடியும்
எழுத முடியும் என்ற 
கருத்திற்காகவும் இத்தகைய மாற்றங்கள்
தமிழ் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டன.

இத்தகைய மாற்றங்கள் ஒரே நேரத்தில்
நிகழ்ந்தனவா  என்றால் இல்லை என்பதுதான்
பதிலாக இருக்கும்.

காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது
சிறுசிறு மாற்றங்கள் நடைபெற்றன.
இதில் பெரியார் செய்த எழுத்துச்
சீர்திருத்தம் அனைவருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்புண்டு. 
பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தால்
எளிதாக எழுதவும்
படிக்கவும் வாய்ப்பு  ஏற்பட்டிருப்பது
மறுக்க முடியாத உண்மை.

ஆனால் வீரமாமுனிவர் செய்த எழுத்துச்
சீர்திருத்தம் அனைவராலும் அறியப்படாமலேயே 
இருந்திருக்கிறது. 

வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம்
செய்தாரா? கேள்விப்படவே இல்லை
என்று ஆச்சரியப்படுவோர் உண்டு.

வீரமாமுனிவர் தேம்பாவணி,கித்தேரி அம்மாள்
அம்மானை,திருக்காவலூர்க் கலம்பகம் 
போன்ற  நூல்கள்
 எழுதியதாகப் படித்திருக்கிறேன்.
வீரமாமுனிவர் எழுதியதுதான்
பரமார்த்த குரு கதை 

இது என்ன புதுக் கதையாக இருக்கிறது
என்கிறீர்களா?

புதுக்கதை இல்லைங்க.
பழைய கதைதான்.
புதிய வடிவில் தந்தால் படிக்கும் ஆர்வம்
ஏற்படுமே என்ற
நோக்கில் தந்துள்ளேன்.
பிடித்தால் படியுங்கள்.

வீரமாமுனிவர் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர்.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வேண்டும்
என்ற நோக்கத்திற்காக இந்தியாவிற்கு
வந்தார்.
தமிழகத்தில் வாழும் வாய்ப்பு
கிடைத்தது.
இங்கிருந்து கிறிஸ்தவ அருட்பணி
செய்து வந்தார்.
இப்போது தமிழ் மக்களோடு கருத்துப்
பரிமாற்றம் செய்ய வேண்டுமானால்
தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்காக தமிழ்ப் படிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது.
அதனால் தமிழைப் படிக்க
ஆரம்பித்தார்.படிக்கப்படிக்க
அவருக்குத் தமிழ்மீது ஓர் ஈர்ப்பு
ஏற்பட்டுவிட்டது.
தமிழ் மீது இருந்த ஆர்வம் வெறுமனே
படிப்பதோடு நிறுத்தி வைக்கவில்லை.

தமிழ் இலக்கியங்கள் அத்தனையையும்
படித்தார். படிப்பு தமிழை அறிந்து கொள்வதற்காக
என்ற முதல் நிலையிலேயே
அவர் நின்றுவிடவில்லை.
நாமும் தமிழில்  எழுத வேண்டும் என்ற
 ஆர்வத்தை  ஏற்படுத்தியது.
அதற்கு இலக்கணம் தடையாக 
இருக்கக்கூடாது என்று நினைத்தார்.
தமிழ் இலக்கணம் முழுமையும் கற்றுத்
தேர்ந்தார்.

இந்தத் தமிழ் அறிவு
 தேம்பாவணி போன்ற காப்பியத்தை
எழுதும் அளவு புலமையைக் கொடுத்தது.

இத்தாலிக்காரர்  எப்படி
வீரமாமுனிவர் ஆனார் என்று 
அறிய வேண்டும் என்ற
ஆவல் இருக்கிறதல்லவா?


இவருடைய  இயற்பெயர்
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
 என்பதுதான். அவர்  முதலாவது தனது
 பெயரை தைரிய நாதசாமி
 என்று மாற்றினார்.
 அது வடமொழிப் பெயராக இருக்கிறது
 என்ற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது.

 தமிழ்மீது கொண்ட காதலால்
 தன் பெயரை பின்னர் வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.

பிறமொழி மக்கள் தமிழைப்
படிக்க வேண்டும் என்றால் அது
எளிமையாக இருக்க வேண்டும்.
அதற்காக படிப்பதற்குச் சிக்கலை
ஏற்படுத்திய சில எழுத்துகளை மாற்றினால்
எளிதில் படிக்கலாம் என்று நினைத்தார்.
பொருள் வேறுபாடு எளிதில்
கண்டறிய உதவியாக இருக்கவேண்டும்
அந்த நோக்கில் எழுதப்பட்டதுதான்
வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்.


வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு
'ர ' என்ற எழுத்து  கால் வைக்கப்படாமல்
எழுதப்பட்டு வந்திருக்கிறது.

கால் வைக்காமல் எழுதப்பட்டால் அது
துணை எழுத்தாகுமே.
இதே குழப்பம் வீரமாமுனிவருக்கு
இருந்திருக்கிறது.


இப்போது கரவை என்று எழுத வேண்டும் 
என்று வைத்துக் கொள்ளுங்கள்.
காவை  என்றுதான் எழுத வேண்டும். 

இதனால் பொருள் மாறுபடுகிறதல்லவா?
கண்டிப்பாக இப்படி எழுதுவது
குழப்பத்தை ஏற்படுத்தும்.
காவை மாடுகள் என்று
எழுதியிருந்தால்
கரவை மாடுகள்
என்று பொருள் கொள்ளப்படுமாம்.
அது எப்படி?
வியப்பாக இருக்கிறது இல்லையா?
 அடுத்து வரும்
சொற்களை வைத்து முழு சொற்றொடரின்
 பொருளும் அறியப்பட வேண்டுமாம்.

அது எப்படி முடியும்?
எல்லோராலும் இது
 சாத்தியமாகுமா  என்ற 
கேள்வி இடையில் கட்டையைப்
போட்டு நிற்கிறதல்லவா?

இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படாவண்ணம்
தவிர்ப்பதற்காக வீரமாமுனிவர்
'ர 'கரம் என்று பாதம் வைத்து
அதாவது கால் வைத்து எழுதும்
முறையை 
அறிமுகப்படுத்தினார்.


இப்போது காவை என்று 
எழுதாமல் கரவை
என்று எழுதி ,
பொருளைப் புரிய
வைக்க முடிந்தது.

இப்படியாக' ர' என்ற
எழுத்து வீரமாமுனிவரால் 
உருவாக்கப்பட்டது.

இது மட்டும்தானா வேறு ஏதாவது 
எழுத்து வீரமாமுனிவர் உருவாக்கியிருக்கிறாரா?
என்று அறிய ஆவல் ஏற்படுகிறதல்லவா?

வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பாக
எ   குறில்
ஏ நெடில் 
என்ற வேறுபாடுகள் இல்லை.

ஒ  குறில்
ஓ  நெடில்
என்ற வேறுபாடும் இல்லை.

அப்புறம் குறில் நெடில் வேறுபாடு
எப்படி அறிவது?
பொருள் வேறுபாடுகளை
எப்படி கண்டறிவது என்ற
கேள்வி எழலாம்.

' எ  'என்ற எழுத்துக்கு மேலே
ஒரு புள்ளி வைத்தால் ஏ என்ற நெடில்
எழுத்து என்று அறிந்துகொள்ள
வேண்டுமாம்.

அதுபோல ஒ என்ற எழுத்துக்கு
மேல் புள்ளி  வைத்தால் ஓ என்ற 
நெடிலெழுத்தாகிவிடுமாம்.

இது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.
ஓலையில் எழுதிய காலம் ஆதலால்
புள்ளி பளிச்சென்று தெரிய
வாய்ப்பில்லாமல் இருந்தது.
இதனால் தவறாகப் பொருள் கொள்ளப்பட வேண்டிய
நிலை ஏற்பட்டது.

அதனால்
'எ 'என்ற எழுத்துக்குப் பாதம் வைத்து
'ஏ 'என்ற நெடில் எழுத்தாக 
மாற்றி எழுதினார்
வீரமாமுனிவர்.

ஒ என்ற எழுத்தின் அடியில்
ஒரு சுழி போட்டு எழுதினால்
ஓ என்ற நெடில் எழுத்தாகிவிடும்
என்ற மாறுதலையும்
வீரமாமுனிவர் அறிமுகப்படுத்தினார்.

இப்போது  எ,ஏ 
ஒ,ஓ வேறுபாடு வீரமாமுனிவரால்தான்
அறிய வைக்கப்பட்டிருக்கிறது
என்பது புரிந்திருக்கும்.

கெட்டவனுக்கும்
கேடு செய்வோனுக்கும்
வேறுபாடு தெரிய வேண்டுமல்லவா?

கெ என்ற உயிர்மெய்க் குறில்
எழுத்துக்கும் கே என்ற உயிர்மெய்
நெடில் எழுத்துக்குமான வேறுபாட்டினை
அறிய வைக்க
இரட்டைச் சுழியை அறிமுகப்படுயவரும்
வீரமாமுனிவர் ஆவார்.


கெ...கே
பெ....பே
ஒற்றைக் கொம்புக்கு மேல் புள்ளி
வைத்தால் இரட்டைக் கொம்பாகிவிடும். அதற்குப் பதிலாக
இரட்டைக் கொம்பை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர்.


இதனைப் போன்றே

கொடு
கோடு 
வேறுபாடு தெரிய வேண்டாமா?

கொ.....கோ
என்று இரட்டை கொம்பிட்டு எழுத வைத்தார்.

ர, ஏ, ஓ, போன்ற எழுத்துகளோடு
ஒற்றை கொம்பு இரட்டைக் கொம்பு
வேறுபாடுகொண்ட
கொ  - கோ
என்ற எழுத்தும் வீரமாமுனிவராலேயே 
அறிமுகப்படுத்தப்பட்டது என்பது
பலரும் அறியாத ஒரு செய்தி.

இவை யாவும் வீரமாமுனிவர்
செய்த எழுத்துச் சீர்திருத்தம் ஆகும்.


"இயற்றமிழ்த் தமிழ் இலக்கியத்திற்கு
செயற்கரிய பணி செய்து சிறப்புற்றவர்"
என்று பண்டாரம் நம்பியார் என்ற 
தமிழ்ப் பண்டிதரால் பாராட்டப்பட்ட
வீரமாமுனிவர் இலக்கியத்திற்கு மட்டுமல்ல
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கும் காரணமாக
இருந்திருக்கிறார் என்பது  தெரிகிறது.

தமிழ் அகர முதலி தந்த
தமிழ் ஆசான் வீரமாமுனிவர். தமிழ் இருக்கும்வரை
வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய நற்றொண்டு நிலைத்திருக்கும்.








Comments

  1. தமிழ் மொழியை எவ்வித சஞ்சலமுமின்றி எழுத படிக்க எழுத்துச் சீர்திருத்தம் செய்த வீரமாமுனிவர் பற்றியப் பதிவு மிக அருமை.வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts