புத்தாண்டு வரவேற்பு
புத்தாண்டு வரவேற்பு
புத்தாண்டு வரவேற்புக்காக
அனைவரும் வாசலில்
காத்துக் கொண்டிருக்கிறோம்.
மனம் நிறைய மகிழ்ச்சியைப்
சுமந்துகொண்டு முன்வரிசையில்
நிற்கின்றனர் சிலர்.
ஏதோ ஒரு தயக்கம் வரவேற்பில்
முன் வரிசையில் நிற்கவிடாதபடி
தடுத்து நிற்க பின்னால் நின்று
பதுங்கிப் பதுங்கி
எட்டிப்பார்த்துக் கொண்டு
நிற்கின்றனர் இன்னும் சிலர்.
வரும் ஆண்டு எப்படிப்பட்டதாக இருக்கும்?
நன்மைகளை அள்ளி வரப்போகிறதா அல்லது
துள்ளி வரும் கொரோனாவைக் கூடவே
கூட்டி வந்து கும்மியடித்துக்
கும்மாளமிடப்போகிறதா?
இப்படி ஒரு அச்சத்தில் இன்னும் சிலர்.
புத்தாண்டு வந்தால் என்ன?
வராமல் போனால்
என்ன?என்று ஒரு சலனமும்
இல்லாமல் எல்லா நாளையும் போல்தான்
இதுவும் ஒரு நாள். மற்றபடி எதிர்பார்ப்பதற்கு
இதில் என்ன இருக்கிறது? என்ற
கேள்வியை முன் வைத்து ஒரு மகானைப்
போன்ற மனநிலையில் அமர்ந்திருப்போர்
சிலர்.
இந்த ஆண்டாவது நம்மைக்
கண்டு கொள்ளுமா?
என்று பதின்ம வயதினரின்
எதிர்பார்ப்பும்
பரபரப்பும் கலந்த மனநிலையில்
இன்னும் சிலர்.
இப்படி மாறுபட்ட மனநிலையில்
ஆளுக்கொரு எதிர்பார்ப்போடு
கற்பனைக் கருத்தியலைக்
கையில் ஏந்தி
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
காத்திருக்கிறோம்.
எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகம்
இருக்கக்கூடாது.
அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தால்
நமது எதிர்பார்ப்புப் பொய்த்துப் போகும்போது
மனம் ஏற்க மறுக்கும்.
ஏன்...ஏன்....எனக்கு மட்டும் ஏன் இப்படி?
என்ற கேள்வி எழுப்ப வைக்கும்.
புரியாமல் புலம்ப வைக்கும்.
புரிதலில்லாப் பல கேள்விகளை முன்
வைக்கும்.
அதற்காக எதிர்பார்ப்பு இருக்கக் கூடாதா?
என்ற கேள்வி எழலாம்.
எதிர்பார்ப்பு இருக்கலாம்.
ஆனால் அதிகப்படியான
எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது.
அளவுக்கு மிஞ்சிய
எதிர்பார்ப்பு ஆபத்தில்தான் முடியும்
என்று மனதில் எழுதி வைத்துக்
கொள்ளுங்கள்.
வேறு என்னதான் செய்ய வேண்டும்
என்று கேள்வி எழுகிறதல்லவா?
எந்தவொரு எதிர்பார்ப்பும் வேண்டாம்.
புத்தாண்டு வார்த்தைகளால்
வாழ வைத்த ஆண்டாக அமையட்டும்.
சொற்கள் உயிருள்ளவை என்ற கருத்தில்
நம் அனைவருக்கும் உடன்பாடு உண்டு.
அந்த நம்பிக்கை உங்களில்
இருக்குமானால்
நம்பிக்கை தரும் சொற்களால்
வாழ்த்தி வரவேற்று நில்லுங்கள்.
உங்கள் வாழ்த்தே உங்களுக்கும்
உங்களோடு இருப்பவர்களுக்கும்
வரமாக அமையும்.
வாழ்த்துவதற்குச் சரியான சொற்களைத்
தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் யார் என்பதை உலகம்
அறிந்துகொள்ள உதவுவது
உங்கள் சொற்கள்.
வாழ்த்து சொல்வதற்கு
எதற்கு மெனக்கெட
வேண்டும் ?என்ற கேள்வி எழலாம்.
வாழ்த்து என்பது நான்கு எழுத்துக்களாலான
ஒற்றைச் சொல்லாக இருக்கலாம். அந்த
ஒற்றைச் சொல் உயிரோட்டமிக்கது.
உணர்வுமிக்கது. உங்களோடு
உரையாடி மகிழ வைப்பது.
மரியாதையைப் பெற்றுத் தருவது.
தேர்ந்தெடுத்தச் சொற்களால்
வாழ்த்துவோம். மிகுதியாக அல்ல.
மிகைபட அல்ல. இயல்பாக...
இனிமையாக ....எளிதாக...
உங்கள் வாழ்த்து கட்டமைக்கப்பட்டிடட்டும்.
உங்கள் மீதான மரியாதையைக்
கட்டமைக்கட்டும்.
வெல்லும் சொல்லாக உங்கள்
வாழ்த்து இருக்கட்டும்.
உலகை வெல்லட்டும்.
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளட்டும்.
உறவுப்பாலம்
உறுதியாக கட்டி எழுப்பப்பட
உதவுவதாக இருக்கட்டும்.
நட்பை நழுவவிடாத
நற்பண்பு பொதிந்ததாக இருக்கட்டும்.
நம்பினோர்க்கு
தண்நிழல் தரு தண்மையைத்
தந்திடட்டும்.
தேறுதலற்றவர்களுக்கு
ஆறுதலாக அமைந்திடட்டும்.
ஒவ்வொரு முடிவும்
புதிய துவக்கத்திற்கான அடையாளம்.
இந்த பழைய ஆண்டின் முடிவு
ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கம்.
அந்த நம்பிக்கை கொடுப்பதாக உங்கள்
வாழ்த்து இருக்கட்டும்.
வாருங்கள் நம்பிக்கை என்னும்
விளக்கைக் கையில் ஏந்தியவர்களாக
புத்தாண்டை வாழ்த்தி வரவேற்போம்.
நல்வாழ்த்து
நவில்கிறேன்
நல்ல நட்புக்கு
நம்பிக்கையோடு
நன்றி கலந்த
நல்லுள்ளத்தோடு!
நன்மையை அள்ளித்தரும்
நல்லாண்டாக புத்தாண்டு அமைய
வாழ்த்துகள்.
Comments
Post a Comment